Posts

Showing posts from February, 2019

பேருந்தில் நீ!!!

Image
நமது பெரும்பாலான உரையாடல்களின் போது நீ பேருந்து பயணங்களில் இருக்கிறாய்.. சில நேரம் இருக்கைகளில் அமர்ந்தவாறே பல நேரங்களில் நின்றவாறே... உன் பயணச் சுற்றம் குறித்த சக பயணிகள் குறித்த பெரும் ஆற்றாமை எனக்குண்டு... நான் பார்க்க இயலாத சந்திக்கத் தவிக்கிற உன்னை தினம் பார்க்கின்ற, சந்திக்கின்ற, உரையாடும் வாய்ப்பைப் பெறுகின்ற அவர்கள் குறித்த காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடது... நீ படிக்கட்டுகளில் ஜன்னலோரங்களில் நிலையற்ற இருப்பில் என அசெளகரிய தருணங்களில் பயணிப்பது குறித்து வாழ்வு மீதான பெருங்கோபம் எனக்குண்டு... எனது பிரியத்தின் தேவதையை தெருக்களில், நெரிசல் மிகுந்த பயணங்களில் சுட்டெரிக்கும் கோடைகால ஒளிதனில் தொடர்ந்து பயணப்பட விடுகிற கடவுளை தொடர்ந்து சபித்துக் கொண்டிருக்கிறேன்... எனது சாபம் பழித்து உன்னோடு பயணப்பட்டு அல்லல் படட்டும் கடவுள் என்ற அந்த கண்ணுக்குப் புலப்படாதவன்... இத்தனை அசெளகரியங்களிலும் என்னோடு நீ பேச, உரையாட முயல்கின்ற தருணங்கள் எனக்கான, நம் பிரியத்துக்கான ஆறுதல்... மனிதர்களற்ற சாலைகளில் பயணிகளற்ற பேருந்துகளில் உன்னை நானும் என...

நீ!

Image
கொடுங்கோடையில் கன்னங்களில் துளிர்க்கும் வியர்வை கரைக்க ஜன்னல்வழி வரும் தென்றல் நீ! துயிலரவில் கொடுங்கனவினூடே தூரத்தில் பிரகாசிக்கும் நம்பிக்கை நட்சத்திரம் நீ! உடல் நோயுற்று உருகிக் கழிக்கையில் தொண்டையிலிறங்கும் ஒரு மிடறு இரசம் நீ! தடதடக்கின்ற புரியா இசைக்கோர்வையில் இடையே உயிரறுத்து கடக்கும் இசைத்தெறிப்பு நீ! பசிக்கு துடித்தெழும் மகவுக்காக பதறிச் சுரக்கும் தாய்ப்பாலின் முதற்துளி நீ! வாழ்வு பெருங்குரலெடுத்து அழவைக்கிற பொழுதெல்லாம் புன்னகைக்க தருணங்கள் தந்த பெரும்வரம் நீ!