நீ!
கொடுங்கோடையில்
கன்னங்களில் துளிர்க்கும் வியர்வை
கரைக்க
ஜன்னல்வழி வரும் தென்றல் நீ!
துயிலரவில்
கொடுங்கனவினூடே
தூரத்தில் பிரகாசிக்கும்
நம்பிக்கை நட்சத்திரம் நீ!
உடல் நோயுற்று
உருகிக் கழிக்கையில்
தொண்டையிலிறங்கும்
ஒரு மிடறு இரசம் நீ!
தடதடக்கின்ற
புரியா இசைக்கோர்வையில்
இடையே உயிரறுத்து கடக்கும்
இசைத்தெறிப்பு நீ!
பசிக்கு துடித்தெழும்
மகவுக்காக
பதறிச் சுரக்கும்
தாய்ப்பாலின் முதற்துளி நீ!
வாழ்வு பெருங்குரலெடுத்து
அழவைக்கிற பொழுதெல்லாம்
புன்னகைக்க தருணங்கள் தந்த
பெரும்வரம் நீ!
Comments
Post a Comment