Posts

Showing posts from July, 2023

எல்லாம் உதிர்ந்ததும்

Image
நாம் பரஸ்பரம்  அறிவோம்  பன்னிரு ஆண்டுகளாக  உன் பால்யம் பகிர்ந்திருக்கிறாய்  கல்லூரி நாட்கள் கொஞ்சம்  கடந்த துயர்கள் கொஞ்சம்  கனவுகள் கொஞ்சம்  கோபம் கொஞ்சம்  ஆசைகள் கொஞ்சம்  ஆற்றாமைகள் கொஞ்சம்  தவிப்புகள் கொஞ்சம்  சந்தோசம், குதூகலம்  பயணங்கள்  பயணங்களின்  பலன்கள்  என எத்தனையோ  பகிர்ந்திருக்கிறாய்  முடிவில்  நீயும் நானும்  ஒரே ஆத்மாவின்  வேறு உடல்கள்  என் கையில்  சிரிப்பாய்! நீயும் நானும்  ஒரே ஆத்மாவின்  ஓரே மனங்கள்  என்ற பொழுதும்  சிரிப்பாய்! இப்பொழுது  இறகுகளை  உதிர்க்கத் தொடங்கியிருக்கிறாய். எல்லாம் உதிர்ந்ததும்  பறவையாவாய்!

நனைதல்

Image
சூடான தேநீரின் ஆவி ஆடிகளில் படிய  ஜன்னல் வழி  மழையில் நனைந்த  சிறகினை உதறும்  சிறுகுருவி குறித்த  கவலையில் ஆழ்கையில்  மரத்தின் கிளையில்  மழையில் குளித்து  மகிழும் காகம்  மனம் மாற்றுகிறது  வீதியை ஈரமாக்கி  தெப்பமாக்கும்  மழையின் நீரில்  பிம்பம் பார்க்க  குடையின்றி நனைகையில்  மூப்பு கரைகிறது  மழையென்ன  நிலத்தை மட்டுமா  நனைக்கிறது, குளிர்விக்கிறது  நினைவுகளையும் தான்!

விரல்கள்

Image
  உன் விரல்கள்  எனக்கு  தாய்மையின் அருகாமை  என்னுள்  ஆழ்ந்து கிடக்கும்  பால்யத்தின் நீட்சி  உன் விரல்களைப் பற்றிக் கொள்ள நினைப்பது நகங்களில் வண்ணங்குழைத்து வானம் தீட்டும் நீ எனது நட்சத்திர தேவதை உனது  ஓவ்வொரு விரல்களும் எனக்கு இரவுக்கனவுகளில் பல கதை சொல்கின்ற  விண்மீன்கள் மல்லாக்க படுத்து வான் நட்சத்திரங்களை எண்ணும் வயதிற்கு  என்னை அழைத்துப் போகும் வானூர்தி  அவ்விரல்கள் நமக்கிடையேயான பெருந்தொலைவை மங்கச்செய்து ஆத்மாவை இறுகப் பிணைக்கும் திறவுகோல்கள் இவ் விரல்கள் உன் விரல்களைப் பற்றும் தருணங்களில் நான் உன்னுடன் நீக்கமற  கலக்கின்ற மாயம்  நிகழ்வதால் அவை எனக்கு உன் ஆத்மாவை  அடைய எழுப்பப்பட்ட நுழைவுவாயில்கள்.