விரல்கள்
உன் விரல்கள்
எனக்கு
தாய்மையின் அருகாமை
என்னுள்
ஆழ்ந்து கிடக்கும்
பால்யத்தின் நீட்சி
உன் விரல்களைப் பற்றிக் கொள்ள
நினைப்பது
நகங்களில்
வண்ணங்குழைத்து
வானம் தீட்டும்
நீ எனது
நட்சத்திர தேவதை
உனது
ஓவ்வொரு விரல்களும்
எனக்கு இரவுக்கனவுகளில்
பல கதை சொல்கின்ற
விண்மீன்கள்
மல்லாக்க படுத்து
வான் நட்சத்திரங்களை
எண்ணும்
வயதிற்கு
என்னை அழைத்துப் போகும்
வானூர்தி
அவ்விரல்கள்
நமக்கிடையேயான
பெருந்தொலைவை
மங்கச்செய்து
ஆத்மாவை
இறுகப் பிணைக்கும்
திறவுகோல்கள்
இவ் விரல்கள்
உன் விரல்களைப்
பற்றும் தருணங்களில்
நான்
உன்னுடன்
நீக்கமற
கலக்கின்ற மாயம்
நிகழ்வதால்
அவை எனக்கு
உன் ஆத்மாவை
அடைய எழுப்பப்பட்ட
நுழைவுவாயில்கள்.
Comments
Post a Comment