ஊழியாக்கப்பட்ட பெருமழை!
கழிவறையில் அமர்ந்து
நாளிதழ் விரிக்கையில்
மழைக்காலத்திற்கு
ஊழிக்காலமென புதுப்பெயர் சூட்டி
வழிந்து கிடந்தன
கவிதைகளும் செய்திகளும்!
கொஞ்சம் குளிர ஆரம்பித்திருந்த
பாலைவன நகரத்தில்
மழைபற்றிய செய்திகள்
வந்துக் குவியத் தொடங்கியபோது
குளிரையும் மீறி
நனையத் தொடங்கியிருந்தது உடல்!
ஆழ்ந்த உறக்கம்
தொலைந்த பொழுதுகளில்
மேலிருந்து வீசும்
மின்விசிறிக்காற்றினை
மேக மழையாய்
நினைத்து பயந்து
முகப்புத்தகம்வழி
முகப்புச் செய்திகளை
தரிசித்து தனித்திருந்தது
உடலுடைய மனம்!
மழைநீர் சாக்கடையோடு
கலந்த பொழுதுகளில்
பெற்றோரை தொலைத்த
பிஞ்சின் புகைப்படம் விரிகையில்
வீடிழந்து
வெற்றுமனிதர்களாய்
சுற்றம் மொத்தம்
சுற்றும்முற்றும் அலைகையில்
முட்டிவரை நீரில்
முனங்குகின்ற வெகுசனம்
பார்க்கையில்
வந்தாரை வாழவைக்கும்
வளமைப் பூமியில்
சோற்றுக்கு சண்டையிட்டு
சோர்வோடு நீளுகின்ற
கைகளைக் காணுகையில்
எங்கோ தொலைவில்
ஏகப்பட்ட உயிர்கள்
பிணங்களாய் மாறி ஒதுங்கிய
செய்திகள் அறிகையில்
எழுந்த கோபம்
எழுந்த துயரம்
இறக்கிவைக்க
இறக்கத்தான் வேண்டுமென்கையில்
கொஞ்சம் அதிகம் பொழிந்து
கொன்றேனும் இருக்கக் கூடாதா
நல்லாரையும்
ஸ்டிக்கர் ஓட்டும் பொல்லாரையும்
நடுநிலையோடு தாக்கும்
நம்மால் ஊழியாக்கப்பட்ட
இப்பெருமழை!
Comments
Post a Comment