நீ வாழி!



இப்பொழுதெல்லாம்

நான் நினைக்கும் 

பொழுதுகளில் 

என்னை அழைத்து விடுகிறாய்

நிச்சயமாய் 

இது அனிச்சையல்ல!


காலமும், தூரமும் 

கடந்ததாகத் தெரிகிறது  

இந்நாட்களில்

நமக்குள்!


செடி, கொடி 

மரம் போல 

அன்பினை அதிகம் ஊட்டி 

பொத்தி, போற்றி 

வளர்கிறது இதுவும்!


நீ ஒரு போதும் 

வாய் திறந்து 

சொல்லவே போவதில்லை 

உன் குரல் குழைகையில் 

சப்தம் சன்னமாக 

என் இருதயத்துக்கு 

அருகில் ஒலிக்கையில் 

உன்னை சிறிது 

புரிந்து கொள்வதாய் 

நினைத்து 

மயக்கம் கொள்கிறேன்! 


மலைபோல் கிடந்து, கடந்த 

காலமெல்லாம் 

நின் நினைவைச் சுமந்து 

திரிகையில் 

ஒளியின் வேகத்தில் 

ஓடிப்போவதாய் 

தோணுகிறது!


நீ இப்போது 

என்னைவிட்டு 

தொலைவில் செல்வதேயில்லை 

தவிர்க்க முடியாத 

எனது பேசு பொருளாக 

மாறியிருக்கிறாய் 

பரிணாமத்தில்!


நீ அருகிலில்லாது போயினும் 

சந்திக்க சொற்ப தருணங்களாய் 

ஆனபோதும் 

நான் அதனை 

உணர்வதேயில்லை!


ஆண்டாளும், மீராவும் 

கண்ணனுக்கு தொலைவு 

புறத்தில் 

அகத்தில் 

அத்துணை நெருக்கம் 


விதிகள் கடந்து

விதி வசம் நாம் 

என்ன பிரியத்துக்கு 

உகந்தவளான 

நீ 

வாழி!

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔