எப்போதும் அது போதுமெனக்கு
இந்த இரவு
இப்படியே
விடியாது
நீண்டாலென்ன
எனத் தோன்றுகிறது!
காதுகளில்
இசையாயும்
மனதில் காட்சிகளாகவும்
நீ முடிவில்லாது
விரிந்து கொண்டே சென்றால்
நான் எவ்வாறு
தூங்குவது?
எங்கனம் தாங்குவது?
இவ்வளவு
அன்பின் பாரம்!
பிடித்த மிட்டாயை
நினைத்துக் கொண்டே
அழுந்தும்
குழந்தைபோல
நான்
இந்நாட்களில்
உனக்காக!
என் இதயம்
கணத்தும்,
இலகுவாயும்
இந்நாட்களில்
கண்களில்
கண்ணீர் பூக்க
காரணம் நீ!
நீ என்னை
சந்திக்க மறுப்பினும்,
இதயத்தினை
தராது போயினும்,
திட்டிக்கொண்டே
இருப்பினும்,
ஒரேயொரு வரம்
மட்டும் தந்தால்
பிறவிப் பேறடைவேன்
நீ பேணும்,
பேரன்பினைப் பொழியும்
நாய்க்குட்டிகளாய்
எண்ணித் தந்தாலும்
போதும்!
உன்னை
ஒருதலையாகவாவது
காதலிக்க
அனுமதிதான்
அது!
தினமும்
கனவில் வரும்
அந்த ஆதிசிவன்
நீதான்
எனக்கு!
நீ
உள்ளிருக்கையில்
உனது
வீட்டினைச் சுற்றுதலே
கிரிவலம்
எனக்கு!
ஆன்மீகம்
எனக்கெதற்கு
பெண்மீகம்
நீயிருக்கையில்!
நீ எங்கேயோ
அருகிலோ
தொலைவிலோ
இருக்கிறாய்
என்பது மட்டும்
ஆறுதல்!
நீ
ஏற்காது போயினும்
நிராகரிக்காத
பிரியம்
வரம்!
எப்போதும்
அது
போதுமெனக்கு..
Comments
Post a Comment