வெயிலுக்கு எப்பொழுதும் உந்தன் நிறம்!
வழக்கத்திற்கும் மாறாக
சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது
வெயில்!
தாய்க்கோழியின்
கதகதப்பில்
ஓடி ஒளிந்து கொள்ளுகிற
சிறு குஞ்சுகளாய்
குளிர் நிழல் தேடும்
நெஞ்சம் நமது!
என்றோ தோல் கறுக்க
அலைந்துதிரிந்த தினங்களும்
வயற்காட்டு அறுவடையும்
அம்மாவின் மொட்டைமாடி
வடகமும், நீர்மோரையும்
நியாபகத்திற்குக்
கொண்டு வருகிறது
இவ்வெயில்!
குயிலும், குருவியும்
மயிலும்,
மரண வெயிலில்
என் செய்யுமோ
என பதைபதைப்பையும்
நெஞ்சில் விதைக்கிறது
இச்சுடு வெயில்!
இந்தச் சூடு சுடும்
வெயிலை நான் ரசிக்க
சுவாரஸ்யமான காரணம்
ஒன்றுண்டு
அது என்னவெனில்
வெயிலுக்கு எப்பொழுதும்
உந்தன் நிறம்
அது
அழகு மஞ்சள் நிறம்!
Comments
Post a Comment