August 2024
உன் சுவாசக் காற்றையும்
என் சுவாசக் காற்றையும்
தாங்கிச் திரிய போகிறது
இந்நகரம்
இன்னும் சில தினங்களில்
நிதானமாக இருக்க
என் இதயத்தைக் கேட்டுக் கொள்கிறன்
உன் பேரன்பை பாதுகாக்கும்
பெரும் பொறுப்பும்
உற்சாகத்தில்
பித்து பிடிக்கும் மனமும்
வாய்க்கப்போகிறது
உன்னுடைய
எல்லா நேரமும்
எனக்கு வேண்டும்
எனும் குழந்தை மனதும்
எல்லாம் புரிந்த
பக்குவ மனதும்
சண்டையிடப்போகின்றன..
உலகின்
அதி வேகமான
இரு வாரங்களில்
என் இதயம்
செயலிழக்காது இருக்கட்டும்.
************************************************************************
உன் வருகையை
எதிர்பார்த்துக் காத்திருக்கும்
பொழியாத மேகத்தைக் கண்டேன் நேற்று
காத்திருக்கும்
வளை கடைகளையும்
நீ அணிந்து தேர்ந்தெடுக்க
சண்டையிட்டு காத்திருக்கும்
துணியகங்களையும்
நேற்று கண்டேன்
நீ விமான நிலையம்
வந்தடைந்து
திரும்பிச் செல்லும்வரை
மகிழ்ந்து ஒளிரப்போகும்
இந்நகரைக் காண
அத்தனை ஆவலாயிருக்கிறது.
*****************************************************************************
இலேசாக
தூறிக்கொண்டிருக்கிறது
மழை
நனைய அடம்பிடிக்கும்
நகரத்தை
சிறிது நனைத்தவாறே
எங்கோ ஒலிக்கும்
அந்த பெண்குரலின்
தாபப்பாடல்
இலேசாக கேட்கிறது
உயிரின் உள்ளே
தேகம் சிலிர்க்கும்
இவ்வூசிக் குளிரின்
ரம்மியத்தில் திளைத்திருக்கையில்
இனிப்பைக் கண்ட
எறும்பாய்
வந்து விடுகிறது
உன் நினைவு.
****************************************************************************
நேற்று
நீ
என் அருகில் இருந்தாய்
நாம் அதிகம்
பேசிக் கொள்ளவில்லை
உன் வாசனை
நுகர இயலா
தொலைவுதான்
சில நொடிகள்
மட்டுமே
கவனித்திருப்பேன்
ஆனால்
உன் கண்களில்
அந்தக் காற்றினில்
என் ஆழ்மன ஆழத்தில்
நாம் இருந்தோம்..
********************************************************************************
Am I greedy?
All I need is your little time
All I wish is a coffee with you
All I want is little moments with you
Am I greedy?
All I ever want is a small place in your heart
All I ever want is a tiny place in your world
All I ever want is finger touching walk for few meters
Am I really greedy?
My world is small
You occupied a bigger space
I am happy being you in my thoughts
I am happy being you in my poems
I am happy being hold my plans for you
I am happy being giving priority to your priorities..
Remeber one evening of your time
Keep a plant alive
Keep a heart healthy
Keep a hope alive
Keep a life prosperous..
Am I greedy mams?
****************************************************************************
நீ
வேண்டாமென்று
சொல்லுகையிலும்
வேண்டுமென்றும்
சொல்லுகையிலும்
எதிர்பார்ப்பிலும்
ஏமாற்றத்திலும்
இனி இந்த காலம்
எளிதாகக் கிடைக்காதே
என வேதனையிலும் பெருகும்
என் பாரத்தைச் சுமக்கும்
சிலுவையே
இந்தக் கவிதையும்
பகிர்வும்..
******************************************************************************
உன்னோடு
பருக காத்திருக்கும்
தேநீரும்
உன்னோடு நடக்க
காத்திருக்கும்
என் வீட்டுச் சாலைகளும்
நான்
உன்னை அழைத்து
வருவதாய் நம்பியிருக்கும்
உணவங்களும்
உன்முகம் காட்ட
நான் எண்ணிய
ஆதரவற்ற இல்ல
சீறார்களும்
ஏன்
இந்த மரமும்
செடியுமாகிய
என் உலகம் முழுவதும்
ஏமாற்றத்தான்
போகின்றன..
தூரத்து விண்மீன்
ஓரு போதும்
பூமிக்கு சொந்தமில்லை.
******************************************************************************
நீ வரும் போது
மழையையும்
கூட்டிவந்திருந்தாய்
உனக்கு முன்னால்
வர எத்தனித்து
பின்னாலேயே வந்தேன்
நான்
தினம் வசிக்கும் வீடு
அத்தனை
அழகாயிருந்தது
நீயிருக்கும் வரையில்
அன்பில்
இப்படி ஒளிரும்
வீட்டினை நான்
கண்டதேயில்லை
கிடைக்கும்
வாய்ப்பிலெல்லாம்
உன்னைச் சுற்றியே
எனது பார்வையிருந்தது
உரையாடல்
கண்களோடும்
நிகழ்ந்த வண்ணமிருந்தது
உனது
அருகாமையில்
எனது
ஆத்மா மகிழ்ந்திருந்தது
யாருக்கும் தெரியாது
இந்த வருடத்தின்
ஆகச்சிறந்த தினம்
எனக்கு இன்றுதான்
உடல்நலக்குறைவால்
அந்த ஒளி குறைந்த முகம்
கொஞ்சம் வருத்தப்படுத்தினாலும்
உனது வருகை
வழக்கம்போல்
எனது வரலாற்றில்
எழுதப்படும்
நீ போகும் போது
கூட்டிச் சென்றது
மழையை மட்டுமல்ல..
Tuesday 6th August.
******************************************************************************
நீ
என்மீது நிஜமாக
கோபமுருகையில்
பெரும் நிதானத்தையும்
மிகுந்த கவனத்தோடு
வார்த்தைகளையும்
ஆழத்தில்
அதீத அன்பையும்
கொண்டிருக்கிறாய்
நான்
அன்பின் அதீதத்தால்
ஏற்படுத்தும்
அதீத அக்கறையின்
சங்கடங்களை
எதிர்கொள்ளும்
பொழுதிலும் கூட
நீ
காதலில்
என்னைவிட
மிகச்சிறந்தவளென
ஏதும் சொல்லாமல்
நீருபிக்கிறாய்
உன் பிரியத்தின்
மொழியினை
புரிந்து கொள்ள
அதிக காலமெடுக்கும்
அறிவீலி நான்.
******************************************************************************
இந்த இரவில்
இந்த இருளில்
மனம் அழுத்த
துளிர்க்கும் சிறுதுளி
உனக்கானது.
********************************************************************************
நீ
சொல்லாத
அன்பினை
சொல்லியதாய் எண்ணி
பூதம் காப்பதுபோல்
காத்துக்கொண்டிருக்கிறேன்
இம்மனதை
இனி திரும்பியும்
போக இயலாது
உனது கரங்களைப்பற்றியோ
இல்லை
கனவினைப்பற்றியோ
கழியட்டும்
இவ்வாழ்வு!
*****************************************************************************
பிரியத்தை துறத்தலென்பது
பிரியத்தை மறத்தலென்பது
பெரும் துயரம்
நினைவுகள் மறத்தல் போல
வாழ்வின் அர்த்தம் தொலைதல் போல
தினம்தினம்
பாரம் அதிகரித்து
வலியில் துடிதுடித்து
மரணிப்பது போல
பெருங்கொடுமை
முடிந்தவரை
நேசிப்பவரை நேசிப்போம்
பெரும் மழையில்
செடிக்கு தேவையெல்லாம்
துளி ஈரம்தான்!
*****************************************************************************
நாளையோடு
இந்தப் பயணம்
முடிவுக்கு வரும்
பரபரப்பான நாவலின்
இடை அத்தியாயம் போல
எத்தனை நினைவுகள்
எத்தனை உணர்வுகள்
எத்தனை மனிதர்கள்
எத்தனை மனநிலைகள்
பயணங்கள் போதிப்பதை
ஒருபோதும் மறப்பதில்லை
உன்னைச் சுற்றிச் சுழன்ற ஆட்டம்
மறுபடி வரும் வரை
மட்டுப்படும்
எனக்கு நிறைய நினைவுகள்
உள் நோக்கிய அனுபவங்கள்
நீ எப்போதும்
விதைப்பவள்
அழுத்தமாக இம்முறையும்
எல்லைகளை தீர்க்கமாக
வரையறுத்து
வாழ்வையும்
கற்றுத் தந்திருக்கிறாய்
உலகம் எப்பொழுதும்
உருண்டையென
சொல்லாமல் சொல்லியிருக்கிறாய்
கடந்த முறை போன்றதொரு
முகமும் வாய்க்கவில்லை
அனுபவமும் அளிக்கவில்லை
நேரமும் கிடைக்கவில்லை
உன் மனம் அறிவேன் என
இன்னும் நம்புகிறேன்
நிர்பந்தம்
அன்பின் அழகியலை
அழித்துவிடுமாதலால்
அமைதியே சாசுவதம்
என் பிரியம்
குழந்தை அழுகையாக
உணரப்பட்டிருக்கிறதோ
என்ற வருத்தங்கள்
தலையணை நனைத்தது
ஆழமான
நல்லுணர்வு
எதிர்பார்ப்பில்லாத
பிரியத்தை
காதலை
பழகிக் கொள்ள வேண்டும் நான்
மற்றபடி
எப்போதும் போல்
நீ எனக்கு
மகிழ்வோடு சென்று
மறுபடியும் வா.
************************************************************************