3/222, கோவில் பத்து தெரு, சுத்தமல்லி
வீடென்பது
வெறும் செங்கலும் மணலும் கலந்து எழுப்பப்பட்ட கட்டிடத் தொகுப்பல்ல
ரத்தமும் சதையுமாய் வாழ்ந்த தலைமுறைகளின் கனவு
நினைவுகளின் தொகுப்பு
சொந்தவூரை விட்டு, சொந்த வீட்டை விற்றுவிட்டு
எங்கோ குடியேறுகிற ஓவ்வொரு ஆன்மாவும்
உள்ளுக்குள் அவ்வப்போது நினைவின் ஊனமாய்
அழுதுகொண்டேதான் இருக்கும்!.
- வேல்முருகன் பாலசுப்பிரமணியன்
சில வார இடைவெளிகளில் எனது தம்பியின் வீட்டிலிருக்கும் அப்பாவினை சந்தித்து பேசிக்கொண்டிருப்பது வழக்கம். பெரும்பாலும் எங்கள் சொந்த கிராமமான சுத்தமல்லி பற்றியே பேச்சு இருக்கும். தெருவாரியாக, வீடுகள் வாரியாக, மனிதர்கள் வாரியாக தற்போதைய நிகழ்வுகளை அப்பா சொல்லிக்கொண்டிருப்பார். கிட்டத்த 22 வருடங்களாக சென்னையிலும், பிற நகரங்களிலும் வசித்துக் கொண்டிருப்பதால், நான் சொந்த ஊருக்கு அந்நியனாகிப்போனேன். அப்பாவிடம் இருந்து வருகிற தகவல்கள்தான் விழிகளை விரியவைக்கும்.. பால்ய நினைவுகளை பலப்படுத்தும்.
பேச்சினூடே அப்பா சொன்னார், பாபு வீட்டை கிரையம் பண்ணிட்டாங்கடே, தெரியுமா?. கொஞ்சம் அதிர்ச்சியாகி, கொஞ்சம் மௌனமாகி " அப்படியா?' என்றேன். எனக்கு வீடென்பது, அதுவும் பூர்வீக வீடென்பது ரெம்பவும் உணர்வு பூர்வமான ஓன்று. அதை ஒருவர் விற்பதென்பது எப்பொழுதும் வினோதமான சிந்தனைகளை உருவாக்கும் நிகழ்வு. சில வருடங்களுக்கு முன்பு நண்பன் சங்கர் வீட்டினை கீழக் கிராமத்தில் விற்கின்ற பொழுது எழுந்த அதே உணர்வு இப்பொழுதும்.பால்ய நண்பர்கள் பலரும் பெரிய தொடர்பிலில்லை. பூர்வீக வீட்டினை அவர்கள் விற்கிறார்கள் என கேள்விப்படுகிறபொழுது, சொந்த ஊர் என்கிற சங்கிலியும் அறுபடுவது எனக்கு கொஞ்சம் வருத்தம் தருகிற நிகழ்வு.
பாபு வீடு, அப்பு வீடு, போலீஸ் ஸ்டேஷன் வீடு என பலபெயர்களுடன் நாங்கள் அழைக்கும் வீட்டினை இனி எவ்வாறு அழைப்பது என்கிற துயரம் எனக்கு.3/222, கோவில் பத்து தெரு என்பது அவர்கள் வீட்டு முகவரி. திருநெல்வேலி டவுனிலிருந்து சிறுவயதில் அவர்கள் குடும்பம் சுத்தமல்லிக்கு வந்து பின்பு அந்த பழைய போலீஸ் ஸ்டேஷனாயிருந்த வீட்டில் குடியேறியதாய் எனக்கு நினைவு. எனக்கு அது என் வீடு மாதிரிதான். நான் என் வீட்டில் செலவழித்த நேரங்களை விட, அந்த வீட்டில் செலவழித்த நேரங்கள் அதிகம். நிறைய நினைவுகள் எனக்கும் அவ்வீட்டிலுண்டு.
சொந்த ஊர், பூர்வீக வீடென்பது ஆண்களுக்கும் , பெண்களுக்கும் வெவ்வேறு விதமான புரிதல். ஆண்வழிச் சமூகத்தில் பூர்விக வீடென்பது ஆண்களுக்கு அடையாளம், உணர்வு பூர்வமானது, தந்தைக்கு பின் தனயன் என்ற வழியில். உரிமையும் அவ்வாறே. அதனால் தான் பூர்விக வீடு தந்தைக்கு பின் பெரும்பாலும் மகன்களுக்கு செல்கிறது, புதிய சொத்து குறித்த சட்டங்கள் சரிபாதி உரிமையை பெண்களுக்கு கொடுத்தாலும், இன்றும் ஆண்களே அந்த உரிமையை பரஸ்பரம் ஒப்பந்தங்களுக்குப் பிறகு வாங்கிக் கொள்கிறார்கள். பெண்களுக்கு கணவரின் வீடென்பது இரெண்டாம் முகவரியாவதால் அவர்கள் பெரும்பாலும் உணர்வுரீதியான பிணைப்பில் ஆண்கள் அளவுக்கு இல்லை என்பது எனது சிறிய புரிதல்.
பாபு வீட்டின் முன்பு ஒரு தெரு தண்ணீர்க் குழாய் இருந்தது. சிறு வயதில் அந்த பைப் அடியில் விளையாடியாதாய் நியாபகம் இருக்கிறது. அவர்கள் வீடு போலீஸ் ஸ்டேஷனாய் இருந்ததால் அந்த தெரு பைப்பிலிருந்து வீட்டில் உள்ளிருந்த ஒரு தொட்டிக்கு தண்ணீர் செலுத்துகின்ற வசதி இருந்தது. பிங்க் நிற தாள் பூ மரம் ஓன்று இருந்தது ரெம்ப நாள்களாய். வீட்டினை மராமத்து செய்கையில் அதனை வெட்டிவிட்டதாய் நியாபகம்.
எந்த தருணத்தில் நட்பு உருவானது என்பது நினைவில் இல்லை. பாபுவின் அப்பா பாரத் மோட்டார்ஸ் ல் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். சவுரி, காயர் எல்லாம் வைத்து பந்து மாதிரி செய்து கிரிக்கெட் விளையாடிய பொழுதில் பழக்கம் தொடங்கியிருக்கும் என நினைக்கிறேன். உடைந்த மாடிப் படிக்கட்டு அதன் அருகிலிருந்த மஞ்சள் பூ மரம் எல்லாம் பால்ய நினைவுகள். ஒரு முருங்கை மரமும் இருந்தது பின்பு ஒரு பப்பாளி மரமும் இருந்தன. தென்னை மரமும் , மா மரமும் பின்பு வந்ததாய் நினைவு.
பழைய போலீஸ் ஸ்டேஷன் என்பதால் அந்த வீட்டின் அமைப்பு மத்த நார்மல் வீடுகள் மாதிரி இல்லை. வாசல் இருப்பு கேட்டிலிருந்து நான்கு புறமும் கதவுகள், அறைகள் இருந்த நடு வீடு முதல் எல்லாமே கொஞ்சம் வித்தியாசமான அமைப்பு.
மாடிக்கு செல்ல வழி இல்லாததால் சுவர் வழியாக ஏறித்தான் போக வேண்டும். சாகச மனநிலை கொடுத்த நாட்கள் அவை. நெல் அவித்து தகர கொட்டகை இடுக்கு வழியாக கொடுத்து மடியில் காயவைத்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன. தாத்தா அறை என்ற ஒரு அறை உண்டு. ஒரு பழைய கிரீச் கிரீச் என்று சப்தமிடும் மரக் கட்டில் ஓன்று இருந்தது. கொஞ்ச நாட்கள் அவர்களது தாத்தா பாலசுப்பிரமணியன் தங்கியிருந்தார். அதனால் தான் அது தாத்தா ரூம். அவரும் எனது தாத்தா உலகநாதனும் நண்பர்கள் என்பது ஒரு கிளைக்கதை எழுதும் வாய்ப்புள்ள ஏரியா.
எனக்கு எல்லாவித நவீன விளையாட்டுகளும், பெரிய அளவில் வாசிப்பும் பாபு வீட்டிலிருந்தே ஆரம்பித்தது. கிரிக்கெட், carrom , டென்னிஸ், சீட்டுக்கட்டு, என விளையாட்டுகளும், சிறுவர் மலர், வார மலர், தீபாவளி மலர், அம்புலி மாமா, மாயாவி கார்ட்டூன் கதைகள் என வாசிப்பின் பெரு உலகம் அவர்களின் வீட்டிலிருந்தே தொடங்கியது. பாபுவின் அம்மா அவர்களை பற்றி சொல்லியே ஆக வேண்டும். வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் தினமலர் வாங்குவதில் தொடங்கி ( வெள்ளிக்கிழமை சிறுவர் மலரும், ஞாயிற்றுக்கிழமைகளில் வாரமலரும் வருமென்பதால் அப்போது இவ்விரு தினங்களிலும் சொற்ப வீடுகளில் செய்த்தித்தாள் வாங்கும் பழக்கமிருத்தது). அவர் அதீத வாசிப்பின் ரசிகை. சொற்ப வருமான சூழ்நிலைகளிலும் புத்தகங்கள் வாங்குவதை, வாசிப்பதை அவர் ஊக்குவித்துக் கொண்டிருந்தார். இப்பொழுதும் கண்களில் கண்ணாடி அணிந்து எதையாவது வாசித்துக் கொண்டுதான் இருப்பார். பிள்ளைகளில் வாழ்வு குறித்த பெருங்கனவைக் சுமந்து கொண்டிருந்தவர் அவர்.
வாரமலரில் குறுக்கெழுத்துப் போட்டி நிரப்புவதில் ஒரு அலாதியான போட்டி நிகழும். சிறுவர் மலரினை யார் முதலில் படிப்பது என்று ஒரு கலகமே நடந்த மகிழ்வு தினங்கள் அவை. அப்புவுக்கு சிறுகதைகள் எழுதும் ஆர்வம் நிரம்ப இருந்தது. காலப்போக்கில் அவன் அதைத் தொடரவில்லை. பாபு, அப்பு, நான், ஹரி, மறைந்த நண்பன் சங்கர் என புழுதி பறக்க அந்த வீட்டில் விளையாடியதை யாரும் மறக்க முடியாது, பெரிய விளையாட்டு உபகரணங்கள் இல்லை, பெரிய மைதானங்களோ, இடமோ இல்லை ஆனாலும் ஆன்மா சுத்தமாகும் அளவுக்கு விளையாடி மகிழ்ந்திருக்கிறோம். அந்த வீட்டின் பிறவாசலில் அவ்வளவு நினைவுகள் இருக்கின்றன.
எனது பால்ய வீட்டின்
எல்லா சுவர்களிலும்
எல்லா கதவுகளிலும்
எல்லா மூலை முடுக்குகளிலும்
மரப்பல்லியைப் போல்
எனது ஆன்மா
எப்பொழுதும் இறுக்கமாக
ஓட்டிக்கொண்டே இருக்கிறது.
அவர்களது தாத்தா இறந்த பிறகு, பாபு வேலைக்கு சென்ற பிறகு அந்த அறை கொஞ்சம் உரு மாறியது. அங்கே ஒரு தொலைக்காட்சி பெட்டி வந்தது நானும் பாபுவும் நிறைய சினிமாக்களை அந்த அறையில் பார்த்திருக்கிறோம். "மின்னலே " படம் எனக்கு இன்னும் நியாபகம் இருக்கிறது. எத்தனையோ இரவுகள் எத்தனையோ நினைவுகள். carrom board குறித்து தனியாக எழுதலாம்.
மாடிப்படி கட்டிய பிறகு அந்த மாடியில் கடந்த இரவுகள், தேர்வுகளுக்கு படித்தது , அங்கேயே உறங்கி எழுந்த காலங்கள் என நிறைய தினங்கள் இன்று நடந்தது போல் நினைவில் இன்றும். நான் நாகர்கோயில் விட்டு சென்னைக்கு வந்த பின் ஊருக்கு செல்கையில் எப்போதாவது போகின்ற மாதிரி ஆனது.ரோகிணி அக்கா , பாபு திருமணங்கள் முடிந்த பிறகு, அவ்வீடு கொஞ்சம் கொஞ்சமாய் அமைதி உரு பூண்டது.
வீடென்பது
மனிதர்களும்
அவர்களாவது வாழ்வுமே
கூட்டம் கூட்டமாய்
வாழ்ந்த வீட்டில்
யாருமற்று போவது
ஏற்க முடியாவிட்டாலும்
நிதர்சனமே..
பாபு அப்பாவின் சைக்கிள் , அப்புவின் சைக்கிள், பாபு கல்லூரி செல்ல வாங்கிய சைக்கிள் என சைக்கிள்களும் அந்த வீடும் என ஒரு கதை எழுதலாம். ரோகிணி அக்கா கல்லணை பள்ளி காலங்கள், ராகவேந்திரா மில், தாமிரபரணி ஆறு, ஹரி சங்கர் கிழக்கு கிராம நினைவுகள், பிள்ளையார் கோவில் , VK புரம் சித்தப்பா, AP , சுகி ஆச்சி என நினைவுகள் விரிந்து கொண்டே செல்கின்றன.
அந்த வீடு இப்பொழுது பாபு, அப்பு, ரோகிணி அக்கா வீடில்லை என்பது என்னவோ செய்கிறது.
அடுத்த முறை அவ்வீட்டில் நுழைய நேரின், "ஏ பாரு வேலு வந்திருக்கான்" எனச் சொல்ல யாரும் இருக்கப்போவதில்லை என நினைக்கையில் கொஞ்சம் நெஞ்சம் கனத்தாலும், புதிதாக ஒரு அப்புவும், பாபுவும், ரோகிணி அக்காவும் அவ்வீட்டில் வரக்கூடும், புதிதாக ஒரு வேலும் வரக்கூடும் எனபதுதான் ஆசுவாசம். இந்த சிறு நினைவுகளின் பதிவு எனது ஆற்றாமையின், துயரத்தின் வெளிப்பாடு.
காலம் எல்லாவற்றையும் உருவாக்கும், உருமாற்றும், நினைவுகளில் தங்கச் செய்யும். 3/222, கோவில் பத்து தெரு, சுத்தமல்லி என்கிற முகவரியும் அவ்வாறே.
- வேல்முருகன் பாலசுப்பிரமணியன்.
Comments
Post a Comment