மயான வாசம்




நேற்றுவரை உணராத
கரப்பான் பூச்சிகளின்
உமிழ்நீர் வாசனையை
நாசி உணரத் துவங்குகையில்
வீடு வெறுமையாயிருக்கிறது

அகம் அமைதியாயிருக்க
அவள்கள் புழங்கிய வீடு
அப்படியே கிடக்கட்டும்
அழகான அழுக்குகளோடு

குவிந்து கிடக்கும்
அணிந்த துணிகளில்
அவள்களின் வாசனையை
நுகர்ந்து வாழ்வதே
இனி உயிர்காக்கும்

கிறுக்கிய சுவரில்
கிழிந்த அடுப்புத்துணியில்
எச்சில் ஒழுக உறங்கிக்கிடந்த
ஒற்றைத் தலையணையில்
என அவள்களைத்
தேடிஅலைவதே
என் மனிதனுக்கு சாபம்
கவிஞனுக்கு வரம்

மெத்தென்ற விரல்களை நானும்
ரோமக்கன்னங்களை அவளும்
தழுவி நேரும் உறக்கங்கள்
இனி வாய்ப்பது அரிது
இரெண்டொரு வாரங்களுக்கு

கணிப்பொறி பார்த்து
காய்கின்ற கண்களுக்கு
உலராதிருக்க
இனி அவ்வப்போது
பிரிவாற்றாமையின்
கண்ணீர் கிட்டும்

மனதை அனுப்பிவிட்டு
உடலாய்  வந்த உயிர்
ஊமையாய் உலாவும்
வினோதம்
நிகழும் இனி

உருக்குலைக்கும்
உயிரருக்கும்
தனிமை தவிர்க்க - இனி
தரணி தழுவ எத்தனிக்கவேண்டும்

மனைவியும் மகளும்
இல்லாதவொரு வீட்டினை
மயானமின்றி
வேறேன்னவென்று சொல்ல..  

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔