இறைவி - கண்டிப்பாக தரிசிக்க வேண்டியவள்

"என்னவே புள்ள அழுதுகிட்டே இருக்கு, மனுஷன் தூங்க வேண்டாமா எடுத்துகிட்டு வெளியிலே போவே, மனுசன் நாளைக்கு வேலைக்கு போவேண்டாமா?"...
எங்கே எடுத்துகிட்டு போறது... பகல் பூராம் நாங்களும் தான் வேலைசெஞ்சோம்...எங்களுக்குத்தான் தூக்கம் வருது... நாங்க யாருகிட்ட சொல்ல"
இது பால்யத்தின் இரவில் அடிக்கடி கேட்ட உரையாடல். இன்றும் சில சமயங்களில் உபயோகிக்கிற உரையாடல். இது போன்று எத்தனையோ உரையாடல்கள். அசரீரி மாதிரி ஒலித்துக் கொண்டே இருந்த சூழ்நிலைகளவை.
உண்மையை சொல்லவேண்டுமானால் பெரும்பான்மைக்கும் அதிகமான ஆண்கள் ஆணாதிக்கவாதிகள் தான் என்னையும் சேர்த்து. சிறுவயதில் கிராமத்தில் அம்மா காலையிலேயே எழுந்து வாசல் கூட்டி, சாணம் தெளித்து கோலமிட்டு, அடுப்பு மொழுகி, காப்பி போட்டு எல்லோரையும் எழுப்புவார். அப்பா எழுந்து குளிக்கப் போயிருப்பார். நாங்கள் யாருமே, ஏன் அம்மா அதிகமாக உழைக்கிறார் என்று யோசித்தது இல்லை. காரணம் எல்லா அம்மாக்களுமே அப்படித்தான் இருந்தார்கள்..இப்பவும் இருக்கிறார்கள்.. ஆணென்பவன் வெளியில் சென்று உழைத்து ஊதியம் பெறுகின்ற காரணத்தால் அன்று சமூகம் அப்படி இருந்தது என்று ஒப்புக்கு சொல்லிக்கொள்ளலாமே தவிர பெண்கள் அப்பொழுதும் வீட்டினுள் ஆண்களை விட அதிகமாக உழைத்துக் கொண்டுதான் இருந்தார்கள் என்பது எல்லோரும் மறுக்க வழியின்றி ஒப்புக்கொள்கிற நிதர்சனம். பெண்கள் சமமாக உழைத்து பொருள் ஈட்டுகின்ற இந்த காலகட்டத்திலும் நிலைமை பெரும்பாலும் அப்படியே இருக்கிறது.
ஏன் என யோசிக்கையில் காலங்காலமாக பெண்களை அடிமைப்படுத்த ஆண்கள் கையாண்டு வந்திருக்கிற வழிமுறைகள் பெருங்காரணம். அதை பெண்களே புரிந்தோ, புரியாமலோ ஏற்று கொண்டது, அது இன்றும் தொடர ஒரு காரணம். ஆதிகாலம் தொட்டே பெண்கள் , உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாய், ஆண்களுக்கு அடங்கி ஒடுங்கி சேவைகள் செய்யும் அடிமை மனநிலையோடு இருக்க மூளைச்சலவை செய்யப்பட்டவர்களாய் இருந்து வந்திருப்பது நமது முன்னோடிய பெண்களை கவனித்து யோசிக்கையில் புரியும். இன்றும் பெரும்பான்மையான பெண்களின் மனது அந்த அடிமை மனநிலையினை தெளிவாக புரிந்து கொள்ளவில்லை என்பதாலும், தெளிவு குறித்த வழிகளை தேட எத்தனிக்கும் வாய்ப்பு இன்மையும் ஆண்களுக்கு வசதியாக உள்ளன.
அதிகாலையில் எழுந்து அடுப்படி பணிகளை முடித்து, குழந்தைகளை கவனித்து வேலைக்கு சென்று இரவில் மறுபடியும் அடுப்படிக்குள் புகுந்து கொள்கின்ற வேலையை பெண்கள் விரும்பியெல்லாம் செய்வதில்லை. வேறு வழியில்லையே என்றும், தனது குழந்தைகளை, சுற்றத்தை தன்னையன்றி யார் பார்த்துக்கொள்வது என்று உணர்ச்சி மேலிட்ட பொறுப்பு மிகுதியிலும்தான். எல்லோர் வீடுகளிலும் நடக்கும் அதிகாலை உரையாடல்களே இதற்கு சாட்சி.
வீடு என்பது பெரும்பாலும் பெண்கள் மட்டுமே பணி செய்யும் இடமாகவும், ஆண்களுக்கு அது அவ்வாறில்லை என்பதுவே ஒரு திணிக்கப்பட்ட சமூகக் கட்டமைப்பாகப் படுகிறது. விதிவிலக்கிருந்தாலும் கூட, பெரும்பான்மை பெண்களின் சுதந்திரம் ஆண்களின் சுதந்திர, விருப்பு, வெறுப்பு எல்லைகளுக்குட்ப்பட்டே அமைகிறது. ஒரு பெண் என்ன உடுத்த வேண்டும், உண்ண வேண்டும் என்பது மாதிரியான அடிப்படை உரிமைகள் கூட நேரடியாகவோ, மறைமுகமாகவோ, ஆண்களாளேயே தீர்மானிக்கப்படுகின்ற பெரும்பான்மை சமூக அமைப்பில் மாற்றத்தை நிகழ்த்த இந்த மாதிரியான வெகுசன கலைப்படைப்புகள் அவசியம்.
பெண்கள் பெரும்பாலும் அடிமைகளாகவே பிறக்கிறார்கள். "பொண்ணா பொறந்திருக்கு!" என சுற்றம் விழியுயர்த்துகையில் தொடங்குகிறது அது. தொடர்ந்து அடிமைகளாகவே பெரும்பாலும் வளர்கிறார்கள். சில பெண்களுக்கு திடீரென்று கிடைக்கும் சுதந்திரம் அவர்களை குழப்பவே செய்கிறது.. சிலர் தெளிந்து மாற்று பாதையை முன்னெடுக்கிறார்கள். ஆண்களுக்கும் வழிவழியாக பெண் குறித்த புரிதல்கள் தவறாகவே, பெரும்பாலும் பெண்களாலேயும் கற்பிக்கப்படுகின்றன. அவன் அம்மாவை, ஆச்சியை, அக்காவை, தங்கையை அப்படியே பார்க்கப் பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறான். பெண்களை சரிநிகர் சமானமாய் பார்க்க முயன்றாலும் தொட்டில் பழக்கம் தொடரவே செய்கிறது. கடவுள்களில் கூட ஆண்கடவுள்களை உயர்வாகவும், மதிப்புமிகுந்தும், பெண் கடவுள்களை சற்று முக்கியத்துவம் குறைந்தும் வழிபடுகின்ற ஆணாதிக்க சமூகம் இது. இது ஆண்டுகள் தேயத் தேய மாறும். ஆண் அடிமைப்படும் காலமும் வருமெனத் தோன்றுகிறது.
ஆணெண்பவன் பெண்களால் பிறந்து பெரும்பாலும் பெண்களாலேயே வளர்க்கப்படுகிறான். அவனது முதல் சமூகப்பார்வை அவன் அன்னையிடமிருந்துதான் என்பது என் எண்ணம். பெண்கள் குறித்து பெண்கள் சரியாகப் புரிந்து கொண்டு, ஆணுக்கும் அதை சரியாகப் போதிப்பின் நிகழ்ந்து கொண்டிருக்கிற மாற்றம் விரைவுபடும் என்பது எனது நம்பிக்கை.
இறைவி ஒரு சிறு பொறியை விதைத்திருக்கிறது. இந்தப்படத்தில் மூன்று பெண்கள் வருகிறார்கள். மூவருமே புரையோடிய ஆணாதிக்க கணவர்களால் தனது சுயத்தை தொலைத்து அதை மீட்கப் போராடி விரக்தியில் மாற்றுப்பாதையினை முன்னெடுப்பதாய் கதை முடிகிறது. ஒரு கதையோ, நாவலோ, கவிதையோ செய்யமுடியாதை ஒரு சினிமா செய்ய முடியும் காரணம் அதன் வீச்சு பெரியது. அதை இறைவி செய்திருக்கிறது. இறைவியின் உருவாக்கம் பற்றி எல்லோரும் பேசுவர். நிறைய குறைகளையும் சுற்றிக்காட்டுவர். ஆனால் அது எல்லாவற்றையும் மீறி சினிமா எனும் வணிக ஊடகத்தில் பெண்சுதந்திரம் குறித்தும் ஆண்களின் ஆதிக்க மனநிலையின்பால் கேள்விக்குறியாகும் பெண்களின் வாழ்வு குறித்தும் எடுக்கத் துணிந்த கார்த்திக் சுப்புராஜ் பாராட்டப்படவேண்டியவர்.
இறைவி கண்டிப்பாக தரிசிக்க வேண்டியவள்.
Very awesome great pride to woman,,,,,👍👍👍👍👍👏👏👏👏
ReplyDelete