எனது துருவநட்சத்திரம் 🌟



 
உணர்ச்சிகள் மேலிட
வார்த்தைகளற்று போகிறேன்
இந்நாட்களில்

நீ அருகிலிருக்கையில்
தொலைவிலும்
தொலைவிலிருக்கையில்
அருகாமையிலும் உணர்தல்
பல சமயங்களில்
ரணமாகவும்
துயராகவும்
இருக்கிறதாகிறது வாழ்வு!

பிரியத்தின் ராட்சசியை
அருகிலிருந்தும் பாராது
தொலைவு நோக்கிய
நெஞ்சம் கணக்கிற
இரத்த அழுத்தம் அதிகரிக்கிற
மரணச்சிந்தனை எழுகிற பயணம்
யாருக்கும் வாய்க்காதிருக்கக்
கடவதாக! 

நீ ஒவ்வொரு முறை 
நீங்கிச் செல்கையிலும்
என் இதயம் பிய்ந்து
கதறும் குழந்தையென
நின் கால்கள் பிடிக்க
வருவதனை 
என் கண்பார்வை வழி
நீ உணர்ந்திருக்கக்கூடும்! 

ஒரு நொடி
கோபமுற்று
மறு நொடி
விரக்தியின் விளிம்பில் 
மீண்டும்
பிரியம் பெருக்கெடுக்கிறது
உன் மேல்!

உனது 
இந்த வருகை
எனக்கு எனையும்
நானறியாத
உனையும்
அருகிலழைத்து வந்து 
பிரியத்தின் பேரலையை
மறு அறிமுகம்
செய்திருக்கிறது!

எனது பலமும்
பலவீனமாகிய நீ
எனது பேரண்டத்தின்
புன்னகைக்கும் 
துருவ நட்சத்திரம்! 🌟

நீ இல்லம் வந்த தினம்
எனக்கு பிடித்த
வசந்த தினம்!

இன்றும் நினைவில்
இங்கிருந்து போகாதிருக்கிற
உன்னை
நீ பேசியவற்றை
அமர்ந்த இடங்களை
உனது அதிசய முகபாவங்களை
நம் நடந்த நடையை
உனது கரம்பற்றிக்
கதகதப்புணர்ந்த 
அந்த நொடியென
மகிழ்வில் 
மனம் பிறழ்ந்தவனாய்
அடுத்த சந்திப்பு 
நிகழும் வரையில்
நினைத்து மகிழ
கொஞ்சமேனும்
வரமழித்திருக்கிறது 
இவ்வாழ்வு! 

நீ முகமூடியணிந்து 
கடந்த தருணங்கள்
அழகியலற்றவை
நான் விரும்பாத
நிஜங்கள் அவை 
ஆனாலும்
நிரந்தரம் அவை!

உன்னையும் 
என்னையும்
தள்ளிவைத்து 
விளையாடும்
இவ்வாழ்வை
கனத்த இதயத்தோடு
சபிப்பதைத் தவிர வேறு
வழிகளில்லை எனக்கு!

இருப்பினும்
நான் உன்னை விட்டு 
விலகப்போவதுமில்லை
நீயென் பிரியத்தைக் 
கைவிடப்போவதுமில்லை!
 
இவ்வுலகில்
இச் ஜென்மத்தில்
என்னைப்போலெருவன்
இனி உன்னை 
நேசிக்கப்போவதேயில்லையென்று
உன் சிறுவிதழ்கள் கூடி
உதிர்க்கும் தினத்தில்
எனது ஆத்மாவை 
உனதருகில் உலாவ 
அனுப்பிவிட்டு
உயிர்துறப்பேன் யான்!!💞

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔