மாயக்காரி! (Magician)




எப்பொழுது விடியுமங்கு 

என்றுதான் 

இங்கு எனக்கு 

தினம் விடிகிறது 


காத்திருப்பில் 

காலம் கரைகையில் 

இதயம் என்னவெல்லாமோ 

செய்கிறது 


காற்றில் குளிர் வீசும் 

இப்பொழுதில் 

பறக்கும் ஒற்றைப் பட்டாம்பூச்சியை 

உன்னித்துப் பார்த்தவாறே 

சிரித்துக் கொண்டிருக்கிறேன் 


நேற்று 

அவ்வளவு கணமாக , 

காலநிலை போல 

இருண்டே இருந்தது 

மனமும் 


உன்னிடம் பகிர்ந்தும் 

அவ்வளவாக குறையவில்லை 

இடியாய், மின்னலாய் 

அழுத்திய பாரம் 


நீ 

குரல் வழி அனுப்பிய 

இரவு, இறுதிக் 

குறுஞ்செய்தியில் 

மலையளவு பாரம் 

இறகாய் பறந்து போனது 


நீ 

எனக்காக 

எப்பொழுதும் 

சொற்களின் வழி 

புன்னகையின் வழி 

தரிசனங்களின் வழி 

மாயங்கள் நிகழ்த்துகிறாய் 

மந்திரங்கள் செய்கிறாய் 

மகுடிப் பாம்பாய் 

என்னை வியாபித்துக் கொல்கிறாய்!


ஆயிரம் வண்ணத்து பூச்சிகளையும் 

ஒரு  கோடி நட்சத்திரங்களையும் 

சில நூறு நாய்குட்டிகளையும் 

கொஞ்சம் வண்ண பூக்களையும் 

மானசீகமாய் 

உன் பாதங்கள் சேர 

தினமும் அனுப்புகிறேன் 

கவிதைகள் வழி


நீ 

விழிகள் அகல விரித்து 

மகிழ்வில் 

புன்னகைக்கும் 

அந்த ஒரு நொடிக்காக 


என்னுடனே 

எப்பொழுதும் 

இப்படியே 

மாயங்கள் புரிந்துகொண்டே இரு 


இதயம் 

எப்பொழுதும் தேடும் 

என் மாயக்காரியே!

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

மயல்