முத்தம் ( மீள் )
மகளின் முத்தம்:-
கன்னத்தோடு கன்னம் ஒட்டி அவள் இமைகளுக்கிடையில் பார்வைதனைச் செலுத்தி அவள் விழி வழி இவ்வுலகம் காண விழைகையில் என் கன்னத்தில் பதிகிறது ஒரு ஈர முத்தம். முத்தம் என்பது என்ன?. ஏன் ஒரு குழந்தை முத்தமிடுகிறது? முத்தத்திற்க்கு முன் பின் நடக்கும் உடற்செயலியல் என்ன? ஏன் முத்தங்கள் பொதுவாக கன்னங்களிலும், உதட்டிலும், புறங்கையிலும், நெற்றியிலும் மட்டும் அதிகமாக இடப்படுகிறது?. குழந்தையின், காதலியின், நட்பின்,பெற்றவர்களின் முத்தங்கள் ஏன் வெவ்வேறு உணர்வுகளை உணரச்செய்கிறது என்ற எண்ணற்ற சிந்தைனைகளை மனம் கடக்கையில் இன்னொரு முத்தம் கிடைக்கிறது எனக்கு. என் மகளின் முத்தம் கிடைத்த மறுநொடி நான் மரித்துப் போனால் சொர்க்கம் கிடைப்பதாக நான் கனவுகள் கூட காண்பதுண்டு.குழந்தைகளுக்கு முத்தம் பற்றிய அறிவென்பது முத்தம் மூலமாக குழந்தைக்கு கடின உணவுகளை தாயானவள் மென்று ஊட்டிய பழக்கம் (Kiss Feeding) மூலமாக பதிவான பழக்கமென அறிவியல் சொல்கிறது. அப்படியெனில் தாய்தான் முத்தத்தின் ஆதாரம்.என் மகளில் முத்தங்களில் மனைவியும் ஒளிந்திருக்கிறாளோ?. பைபிளின் பழைய அதிகாரத்தில் முத்தங்களைப் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் முத்தங்களைப் பற்றிய ஆய்வுகள் நிரம்ப நடந்திருக்கின்றன. சார்லஸ் டார்வின் கூட சில ஆய்வுகளை மேற்கொண்டு இருந்திருக்கிறார்.முத்தம் பற்றிய ஆய்வுகளுகென்று ஒரு துறையே 19 ஆம் நூற்றாண்டில் இருந்து வந்திருக்கிறது "Philematology" என்பது அத்துறைக்கு பெயர். இணையம் முழுவதும் முத்தங்கள் பற்றிய தகவல்கள் நிரம்பக் கிடக்கின்றன. அனால் மகளின் முத்தம் குறித்த தகவல்கள் அதிகம் இல்லை!!.
என் மகள் என்னை முத்தமிடுகையில் என்ன உந்துதல் அவளை அவ்வாறு செய்யத்தூண்டியிருக்கும் என்ன யோசிக்கையில் முத்தம் குறித்த உடற்செயலியலை கொஞ்சம் பேச விழைகிறேன் இங்கே. முத்தம் என்பது 146 முக மற்றும் போஸ்டுரல் சதைகள் (34 facial muscles and 112 postural muscles) ஒருங்கே கூட நிகழும் ஒரு நிகழ்வு!!. முத்தமிடவேண்டுமென்ற உந்துதல் மூளை நரம்பு ஒருங்கிணைப்புச் செயல் என்கிறது மருத்துவ அறிவியல். மிகந்த ஈடுபாட்டுடன் முத்தமிடும் பொழுது 3 -4 கலோரிகள் ஆற்றல் செலவிடப்படுகிறது என்பது மற்றுமொரு முக்கிய குறிப்பு. மேலும் முத்தமிடும் பொழுது எபிநெப்ரீன், நார்எபிநெப்ரீன் ( epinephrine and norepinephrine) என்ற இரு ரசாயனங்கள் உடலில் சுரப்பதால் ரத்த ஓட்டமும் அதிகரிக்கிறது. எனவே உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த முத்தத்தினை பிரயோகப்படுத்துங்கள். எந்த உணர்வுக்கு எங்கு முத்தவிட வேண்டுமென்று பொதுவாக எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என நம்பி அதை தவிர்க்கிறேன் இங்கே!!.
காதலர்கள் தினம் நெருங்கும் வேளையில் முத்தம் பற்றிய இந்தக் கட்டுரை நிச்சயமாக பிரயோசனப்படும் என நம்புகிறேன்!!. என் மகள் முத்தம் குறித்து எழுத நினைத்து இது வெறும் முத்தத்தைப் பற்றிய கட்டுரையாகிப் போனாலும் முடிவாக என் மகள் முத்தம் குறித்த கவிதை ஒன்றினை பகிர்கிறேன்.
முத்தச் சுவடுகள்:-
காலையில்
கண்விழிக்கையில்
முத்தச்சுவடொன்று
என் கன்னத்தில்
காய்ந்திருக்கக் கண்டேன்...
எந்த உதடுகள்
பதித்திருக்கும்
என யோசிக்க விடாத
முத்தச் சுவடுகள் அவை...
எழுந்து வருகையில்
இன்னுமொரு கன்னத்தில்
இன்னுமொரு
முத்தச் சுவடு
சற்றே ஈரப்பதத்துடன்...
எங்கிருந்து வந்தாய் நீ
என எழுப்பிக் கேட்டேன்
உலரத் தொடங்கியிருந்த
உன்னத முத்தச்சுவடினை...
இன்னொன்றுக் கிடைக்கும்
கிடைக்கையில்
விழித்திருந்து
கண்டு பிடித்துக்கொள்
என்றவாறு
உலர்ந்து போயிருந்தது அது...
தேநீர் பருகுகையில்,
குளித்து வருகையில்
உணவு உண்ணுகையில்
மறுபடியும்
இரவு உறக்கத்தில் என
ஒவ்வொரு
நொடியிலும்
ஒவ்வொன்றாக
இரவு துளிர்க்கையில்
நான் முத்தச்சுவடால்
மூழ்கடிக்கப் பட்டு
முத்தச் சுவடன் ஆகியிருந்தேன்
கண்விழித்து நான்
நனவு உதிர்க்கையில்
அருகினில்
என் மகள்
உலராத உதடுகளோடு
உறங்கிக்கொண்டிருந்தாள்
காற்றில் முத்த வாசம்
வீசிக்கொண்டிருந்தது.
முடிவாக தங்க மீன்கள் ராமின் வரிகளை நினைவு கூர்ந்து முடிக்கிறேன்.
"மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்குத்தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று".
Comments
Post a Comment