வினோதங்களின் வினோதம் நீயெனக்கு!
வினோதங்களின்
வினோதம் நீயெனக்கு!
நீ உனதன்பை
உரைக்கும் தருணத்தில்
உன் மடியில்
பெருமகிழ்வில்
உயிர் விடுதல்
பெறுதற்கரிய பெருவரமென்று
எண்ணுவதுண்டு.
யாருமற்றதாயிருக்கும்
இரயிலில்
மயக்கும்
அவ்விரு கன்னங்களையும்
கதைகள் பேசும்
ஆச்சர்ய விழிகளையும்
பருகிக்கொண்டே
பயணிக்கும் கனவு
எனக்குண்டு.
சாலையில்
அழகிய மாலையில்
என் பின்னமர்ந்து நீயோ
உன் பின்னமர்ந்து நானோ
மயங்கிப் பயணிக்கும்
நாள்களை நனவாக்கும்
பிரக்கை எனக்குண்டு
உனது
நீண்ட கால் விரல்களைப்
பற்றிக் கொண்டு
கை விரல்களையும்
பிணைத்துக் கொண்டு
அந்த ஒளிரும்
கண்களை நோக்கியவாறே
மனனமாய்
கவிதை படிக்கும்
ஆழ் விருப்பமுண்டு
நான் நம்பாக் கடவுளர்களை
உன் மகிழ்விக்காய்
வேண்டிக்கொண்ட
வரலாற்று மாயங்கள்
நிகழ்த்துமுன்னை
உச்சிமுகற
நான் செய்யும்
தவங்கள் நிறையவுண்டு..
உனதடிவயிற்றின் குளிர்ச்சியில்
அங்கங்கள்
கொஞ்சங்கொஞ்சமாய் வளர
உன் வழி பிரசவித்து
மார்ப்புப் பாலுண்டு
உன் மகவாய்
மடியில் தவழும்
போராசை
எல்லாப் பிறவியிலும்
எனக்குண்டு..
"டேய்" என்றும்
"சொல்லுடா" என்றும்
என்னருகில் வந்தமர்ந்து
என்னைச் செயலிழக்கச் செய்யும்
அந்த அன்பை
அந்த அழகை
பிய்த்துத் திங்கும்
காதல் பிசாசின்
எண்ணங்கள் ஏகமாயுண்டு.
மெத்தென்ற
முகம் புதைந்து
நளின நாசிகள் உரசி
இச்சென இதழ்கள் புதைந்து
நான் ஏங்கிக் கிறங்கும்
நடு மார்பகச் சூட்டில்
நினைவு துறக்கும்
உன்மத்த உணர்வுமுண்டு
நீ
உன்னையே மறக்குமாறு
மயங்கித் துயிலும்
லீலைகள் புரிந்து
உன்னையே
மகளாயும்
நம் வழிப் பிறப்பிக்கும்
மாபெரும் கனவு
இவ் மா தவ வாழ்வில்
மறக்காமல் எப்பொழுதும் உண்டு..
எப்பொழுதும்
வினோதங்களின்
வினோதம் நீயெனக்கு!
Comments
Post a Comment