Posts

Showing posts from August, 2015

நீயின்மையின் சாட்சியாய்

Image
தூசிபடிந்த அறையினுள் நான் வழக்கமாய் நடக்கும் பாதை வெயில் படுகையில் புலனாகிறது அருந்திவிடுவதாய் வாங்கிவைத்து அழுகிக்கொண்டிருக்கின்றன வண்ணவண்ண வனப்புத் திரவக்குடுவைகள் குளிரூட்டியில் பகலில் கொறித்துவிட்டு மறந்துபோன இனிப்பினை சூழ்ந்து கொண்டாடிக் கொண்டிருந்தன இரவில் எறும்புகள் அழுங்கல் குழுங்களில்லாது வைத்தது வைத்தபடி அசிங்கமாய்க் கிடக்கிறது அலமாரியின் அங்கங்கள் நீயின்மையின் சாட்சியாய் நீளும் வீட்டில் உனக்காக வாங்கின சிறு உணவருந்தும் தட்டினை திரும்பத்திரும்ப துடைத்து விட்டு நாட்கள் தேய்கிறதா என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

இளையராஜாவும் திருவாசக சிம்பொனியும்

Image
இளையராஜா சிம்பொனி இசையில், திருவாசகத்தின்  ஐந்து பாடல்களுக்கு இசையமைத்து 2005 ஆண்டிலேயே வெளிவந்திருந்தாலும், அதனை கேட்கும் பேறு சமீபத்திலேயே வாய்த்தது. அதிலொரு பாடல் கீழ்க்கண்ட "புற்றில் வாழ் அரவும் அஞ்சேன்" என்ற அச்சப்பத்து தொகுதியில் வருகின்ற திருவாசக பாடல்களின் தொகுப்பு. ஒரு 20 முறை இந்த இரவில்  கேட்டிருப்பேன். அப்படியே மாணிக்கவாசகரின், திருவாசகத்தின் காலத்திற்கு கூட்டிச் செல்கிற இசை அது. மேல்நாட்டு சிம்பொனி இசையை திருவாசகத்திற்கு பொருத்தி இசையாட்சி செய்திருக்கிறார் இளையராஜா. ஒவ்வொரு பாடலைப் பற்றியும் பேசிக்கொண்டே இருக்கலாம். ஒருமுறை இரவின் அமைதியில் கேட்டுப்பாருங்கள். நிச்சயம் நீங்கள் மாணிக்கவாசகரோடு கைகோர்த்து அவர் காலத்திற்கு சென்று வருவீர்கள்.அதற்கு நானல்ல இளையராஜா உத்திரவாதம். இளையராஜா அவர்கள் வருங்காலங்களில் திரையிசை பாடல்களுக்கு இசையமைப்பதை விட்டுவிட்டு சங்க இலக்கிய பாடல்களுக்கு இசையமைத்து வாழ்வியல் பேறு அடைந்து எல்லோருக்கும் வழங்கலாம். அந்த பாடல் இதோ... புற்றில் வாள் அரவும் அஞ்சேன்; பொய்யர் தம் மெய்யும் அஞ்சேன்; கற்றை வார் சடை எம் அண்ணல்,...

வெயில்

Image
என் நிழலை என்னோடே கூட்டிவரும் அதனை  நான் கூட்டிவருவதாய் நினைக்கையில் சுடுகிறது வெயில் கொதிக்கின்ற வெப்பின் கூரான மூலையிலெங்கோ கொஞ்சம் சுகம் கொட்டித்தான் கிடக்கிறது தொட்டுத் தழுவும் தென்றலின் தேவசுகம் முழுதும் தெரிய தேவை கொஞ்சம் வெப்பும் தேம்பும் வியர்வை உப்பும் கருத்ததேகம் கவனித்துப் பார்ப்பவர்க்கு தெரியும் எனக்கும் வெயிலுக்குமான ஏகாந்த உறவு உதிக்கின்ற வியர்வைத்துளி உடல்நனைத்து முடிவில் உள்ளம் நனைக்கையில் விண் பார்க்கிற கண்ணில் தெக்கிநிற்கும்  மழைத்துளி ஏக்கம் கவிதை வீதிவரை வந்து தொட்டு விட்டு வீடு நுழைகையில் விட்டுவிடும் வெயில் தீண்டாமைச் சிந்தனையை கொஞ்சம் தீண்டத்தான்  செய்கிறது.

கலவி நுணுக்கம்

Image
நாட்டுக்குள் நுழைந்த  மதம்பிடித்த யானையாய்  நிகழ்கிறது கூடல்  இடித்தும், தகர்த்தும்  ஏத்தியும் சுத்தியும்  முடிக்கையில்  ஒழுங்கற்று கிடக்கும்  நாடாக உடல்கள் பிளிறின் கையில்   பிணையாய் சிக்காது  பேரமைதி தாங்கி  பறக்கும் பறவைபோல்  மனங்கள் மட்டும்!

நான்காம் ஆண்டில் வேலுவின் கவிதைகள்

Image
இன்றோடு மூன்று ஆண்டுகள் முடிந்து நான்காவது ஆண்டு துவங்குகிறது வேலுவின் கவிதைகளுக்கு. முதலில் வழக்கம் போல் நண்பர் குருநாத் பனிக் கிரஹி அவர்களுக்கு நன்றிகள். அவரின் தொடர்ந்த ஊக்கமே நான் மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் இந்த கிறுக்கல்களை மறுபடித்தொடரக் காரணம். பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிப்பது மாதிரி அவருக்கு நன்றி சொல்லி ஆரம்பிப்பதுதான் சரி. ஒவ்வொரு ஆண்டும் இந்த ஆரம்ப பதிவுகளை எழுதும் போது என்ன எழுதிஇருக்கிறோம் கடந்த 365 தினங்களாக என முழுமையாகத் திரும்பிப் பார்க்கிறேன். சென்ற 2014 ஆகஸ்ட் மாதத்திலிருந்து இந்த பதிவினை எழுதுகிற வரை 174 கவிதைகளை எழுதியுள்ளேன். கடந்த சில நாட்களாகவே இந்த திரும்பிப் பார்த்தல் நடந்து கொண்டு இருந்தது. அவ்வப்போது நானே என்னுடைய கவிதைகளை வாசித்துக் கொண்டேன். குறை நிறைகளை அலசிக்கொண்டேன். ஒரு தெளிவு கிடைத்தது நமது திறமை பற்றி!. உண்மையாக சொல்ல வேண்டுமானால் ஒரு பத்து கவிதைகள் தேறும். மற்றவற்றை நிரம்ப பட்டி பார்க்க வேண்டும். புத்தகம் ஏதாவது வெளியிடும் போது அதைச் செய்துகொள்ளலாம் என்று விட்டு வைத்துள்ளேன். மிகச் சிறந்த கவிதையாக எனக்குப் பட...

கனவு வரின்!

Image
உன்னால் மட்டும் கனவு வரின் நான் ஒருதலைக் காதலன்! உன்னோடு கனவு வரின் நான் காதலன்! உன்னோடு ஓரிருவர் கனவில் வரின் நான் கணவன்! உனை தவிர்த்து கனவு வரின் நான் முதியவன்! கனவே வராது போயின் நான் கண்டிப்பாய் காலமானவன்! 

வண்ணத்துப் பூச்சி நீயோ!!

Image
வண்ணத்துப்பூச்சி முதுகில்ஏற்றி  பறக்கிற சுகவாய்ப்பு நினைவில் தோய்ந்து கிடக்கும் காதல் தருணங்கள்  விரிகிறது காதல்பிடித்து  நடந்த கடந்த காலம்  கருவிழி உள்ளிருக்கும்  ஆடிக்கு மங்கலாய்  காதலாய் நீ புலனான  தருணம் கடக்கிற வண்ணத்துப்பூச்சி ஒருவேளை நீயோ?! கிழிக்கிற கதிரொளி கழிக்கிற காற்றொலி   கலைக்கிற - வான்வெளியில்  கடக்கிற யாவும்  நின் கண்ணசைவே  காதல் பிசைவே மலர்வனம் வர  மனம் அது உளற  மணக்கிற வாசம்  சுகிக்கிற நேசம் வழுக்கி விழுகையில்  தாங்கும் இன்னொரு  வண்ணத்துப் பூச்சியும் நீயோ!!

கலங்கிக் கிடக்கட்டும் காலம்!.

Image
உடல்கள் உறங்கி பெரும்பாலும் மனங்கள் விழித்திருக்கும்  நகரத்தின் வீதிகளில்   நகருகின்ற  யாருமற்ற பேரூந்தில்  நகராது அமர்ந்திருக்கிற  நானென நினைக்கிற உயிரும்  நகர்ந்து உள்ளே உயிர்த்திருக்கிற  நீயெனப்படுகிற நினைவும்  பேசிக்கொள்வதாய்   நிகழ்கிற ஒருகாட்சியில்  நீயும் நானும் செய்கிற காதலை  நீயும் நானுமே  நிசப்தமாய் நின்று  நிதானமாய் நீண்டநேரம் ரசித்து  நிறுத்தத்தில்  இறங்கி செல்கிறேன்  நான்...  என்னோடு நீயும்... இன்னொரு நீயும்  இன்னொரு நானும்  இறங்க மறந்து   இன்னமும்  காதல் செய்துகொண்டே   கலங்கிக் கிடக்கட்டும் காலம்!.

விடியல் வருமட்டும்

Image
சுழலும் விசிறியின்  இறக்கைகளில் படிந்திருக்கிறது  கடந்தகாலத்தின் கசப்புகள் கண்கசக்கும் தூசுகளாய்   ஒவ்வொருமுறை  சுழற்றும்போதும்  உதிர்க்கின்றன  நியாபகத்தின் எச்சங்களை  இருண்ட அறையின்   எங்கோ மூலையில்  ஒளிந்திருக்கக்கூடும்  நினைவின் அடுக்குகள்  கண்ணிறுக்கம்  கொள்ளும்போது  கட்டவிழ்த்து விழுகின்றன  தாங்கமுடியா கணங்களோடு  மரணமொட்டிய நிகழ்வுகள்  பயப்படும் கனவுகளாகையில்  இரவு காத்திருக்கிறது  விடியல் வருமட்டும்.!