இளையராஜாவும் திருவாசக சிம்பொனியும்




இளையராஜா சிம்பொனி இசையில், திருவாசகத்தின்  ஐந்து பாடல்களுக்கு இசையமைத்து 2005 ஆண்டிலேயே வெளிவந்திருந்தாலும், அதனை கேட்கும் பேறு சமீபத்திலேயே வாய்த்தது. அதிலொரு பாடல் கீழ்க்கண்ட "புற்றில் வாழ் அரவும் அஞ்சேன்" என்ற அச்சப்பத்து தொகுதியில் வருகின்ற திருவாசக பாடல்களின் தொகுப்பு. ஒரு 20 முறை இந்த இரவில்  கேட்டிருப்பேன். அப்படியே மாணிக்கவாசகரின், திருவாசகத்தின் காலத்திற்கு கூட்டிச் செல்கிற இசை அது. மேல்நாட்டு சிம்பொனி இசையை திருவாசகத்திற்கு பொருத்தி இசையாட்சி செய்திருக்கிறார் இளையராஜா. ஒவ்வொரு பாடலைப் பற்றியும் பேசிக்கொண்டே இருக்கலாம். ஒருமுறை இரவின் அமைதியில் கேட்டுப்பாருங்கள். நிச்சயம் நீங்கள் மாணிக்கவாசகரோடு கைகோர்த்து அவர் காலத்திற்கு சென்று வருவீர்கள்.அதற்கு நானல்ல இளையராஜா உத்திரவாதம். இளையராஜா அவர்கள் வருங்காலங்களில் திரையிசை பாடல்களுக்கு இசையமைப்பதை விட்டுவிட்டு சங்க இலக்கிய பாடல்களுக்கு இசையமைத்து வாழ்வியல் பேறு அடைந்து எல்லோருக்கும் வழங்கலாம். அந்த பாடல் இதோ...

புற்றில் வாள் அரவும் அஞ்சேன்; பொய்யர் தம் மெய்யும் அஞ்சேன்;
கற்றை வார் சடை எம் அண்ணல், கண் நுதல், பாதம் நண்ணி,
மற்றும் ஓர் தெய்வம் தன்னை உண்டு என நினைந்து, எம் பெம்மாற்கு
அற்றிலாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!

வன் புலால் வேலும் அஞ்சேன்; வளைக் கையார் கடைக் கண் அஞ்சேன்;
என்பு எலாம் உருக நோக்கி, அம்பலத்து ஆடுகின்ற
என் பொலா மணியை ஏத்தி, இனிது அருள் பருக மாட்டா
அன்பு இலாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!

கிளி அனார் கிளவி அஞ்சேன்; அவர் கிறி முறுவல் அஞ்சேன்;
வெளிய நீறு ஆடும் மேனி வேதியன் பாதம் நண்ணி,
துளி உலாம் கண்ணர் ஆகி, தொழுது, அழுது, உள்ளம் நெக்கு, இங்கு,
அளி இலாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!

பிணி எலாம் வரினும், அஞ்சேன்; பிறப்பினோடு இறப்பும் அஞ்சேன்;
துணி நிலா அணியினான் தன் தொழும்பரோடு அழுந்தி, அம் மால்,
திணி நிலம் பிளந்தும், காணாச் சேவடி பரவி, வெண் நீறு
அணிகிலாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!

தறி செறு களிறும் அஞ்சேன்; தழல் விழி உழுவை அஞ்சேன்;
வெறி கமழ் சடையன், அப்பன், விண்ணவர் நண்ண மாட்டாச்
செறிதரு கழல்கள் ஏத்தி, சிறந்து, இனிது இருக்க மாட்டா
அறிவு இலாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!

கோண் இலா வாளி அஞ்சேன்; கூற்றுவன் சீற்றம் அஞ்சேன்;
நீள் நிலா அணியினானை நினைந்து, நைந்து, உருகி, நெக்கு,
வாள் நிலாம் கண்கள் சோர, வாழ்த்திநின்று, ஏத்தமாட்டா
ஆண் அலாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!

புற்றில் வாள் அரவும் அஞ்சேன்; பொய்யர் தம் மெய்யும் அஞ்சேன்;
கற்றை வார் சடை எம் அண்ணல், கண் நுதல், பாதம் நண்ணி,
மற்றும் ஓர் தெய்வம் தன்னை உண்டு என நினைந்து, எம் பெம்மாற்கு
அற்றிலாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔