கலங்கிக் கிடக்கட்டும் காலம்!.
உடல்கள் உறங்கி
பெரும்பாலும்
மனங்கள் விழித்திருக்கும்
நகரத்தின் வீதிகளில்
நகருகின்ற
யாருமற்ற பேரூந்தில்
நகராது அமர்ந்திருக்கிற
நானென நினைக்கிற உயிரும்
நகர்ந்து உள்ளே உயிர்த்திருக்கிற
நீயெனப்படுகிற நினைவும்
பேசிக்கொள்வதாய்
நிகழ்கிற ஒருகாட்சியில்
நீயும் நானும் செய்கிற காதலை
நீயும் நானுமே
நிசப்தமாய் நின்று
நிதானமாய்
நீண்டநேரம் ரசித்து
நீண்டநேரம் ரசித்து
நிறுத்தத்தில்
இறங்கி செல்கிறேன்
நான்...
என்னோடு நீயும்...
இன்னொரு நீயும்
இன்னொரு நானும்
இறங்க மறந்து
இன்னமும்
காதல் செய்துகொண்டே
கலங்கிக் கிடக்கட்டும் காலம்!.
Comments
Post a Comment