நான்காம் ஆண்டில் வேலுவின் கவிதைகள்



இன்றோடு மூன்று ஆண்டுகள் முடிந்து நான்காவது ஆண்டு துவங்குகிறது வேலுவின் கவிதைகளுக்கு. முதலில் வழக்கம் போல் நண்பர் குருநாத் பனிக் கிரஹி அவர்களுக்கு நன்றிகள். அவரின் தொடர்ந்த ஊக்கமே நான் மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் இந்த கிறுக்கல்களை மறுபடித்தொடரக் காரணம். பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிப்பது மாதிரி அவருக்கு நன்றி சொல்லி ஆரம்பிப்பதுதான் சரி. ஒவ்வொரு ஆண்டும் இந்த ஆரம்ப பதிவுகளை எழுதும் போது என்ன எழுதிஇருக்கிறோம் கடந்த 365 தினங்களாக என முழுமையாகத் திரும்பிப் பார்க்கிறேன். சென்ற 2014 ஆகஸ்ட் மாதத்திலிருந்து இந்த பதிவினை எழுதுகிற வரை 174 கவிதைகளை எழுதியுள்ளேன். கடந்த சில நாட்களாகவே இந்த திரும்பிப் பார்த்தல் நடந்து கொண்டு இருந்தது. அவ்வப்போது நானே என்னுடைய கவிதைகளை வாசித்துக் கொண்டேன். குறை நிறைகளை அலசிக்கொண்டேன். ஒரு தெளிவு கிடைத்தது நமது திறமை பற்றி!. உண்மையாக சொல்ல வேண்டுமானால் ஒரு பத்து கவிதைகள் தேறும். மற்றவற்றை நிரம்ப பட்டி பார்க்க வேண்டும். புத்தகம் ஏதாவது வெளியிடும் போது அதைச் செய்துகொள்ளலாம் என்று விட்டு வைத்துள்ளேன். மிகச் சிறந்த கவிதையாக எனக்குப் பட்டது " குரங்குகளும் சில நினைவுகளும்" கவிதை. அதன் அமைப்பு, அந்த கவிதை எழுதும் போது இருந்த உணர்வு என எல்லாமே எனக்கு குறையின்றி பிடித்த விஷயங்கள். திரு அபிலாஷ் அவர்களும் " அருமை" என்று பாரட்டியிருந்தார். இதோ அந்த கவிதை.


இரெண்டொரு வருடங்களுக்கு முன்பு 
அருவிகள் வழிந்தோடும் ஊரின் 
அணைத்துக் கிடந்த இருளின் ஓரத்திலிருந்து 
அடிக்கடி கைப்பேசி ஒளிர 
கதைத்துக் கொண்டிருந்தோம் இருவரும்
நீ அங்கும் நான் இங்குமாக  

நீ, லட்டு பையன் என்னைப்போலவே 
உன்னை துரத்துவதாய் சொல்லிக்கொண்டிருந்தாய் 
உன்னுள் மட்டும் புதைத்து வைத்திருக்கும் 
பெயர்சொல்லாத  இன்னும் சிலபேரும் 
காதல் சொல்லியும், சொல்லாமலும் 
காத்துக்கிடப்பதாயும் பகிர்ந்து கொண்டாய் 

நாம் கதைக்கையில் 
சன்னல்வழி  வந்த சாரலும் 
என்னை நனைத்துக் கொண்டிருந்தது
சில குரங்குகளும் விழித்துக் கிடந்தன  

உன்னைச் சுற்றிவரும்
எல்லோரையும் ரசிப்பதாயும் 
பிடிப்பதாயும் நீ சொல்லிக்கொண்டிருக்கையில் 
குரங்குகள் சப்தமிடத் தொடங்கின 

மறுநாள் பெய்த மழையிலும் 
மறக்காமல் தொடர்ந்தது நம் கதைப்பு 
கொஞ்சம் அந்தரங்கம் பேசத்தொடங்கியிருந்தோம் 
சுயமைதூனம் செய்கையில் 
நின்னை பின்னிருந்து புணர்வதாக 
நான் கற்பனை செய்துகொள்வேன் 
எனச் சொல்லுகையில் 
நீ சிலநொடி மௌனித்து 
பின் ஆச்சர்யப்படுத்தினாய்

முன், பின் ஆக்கிரமிப்பைப பற்றி
நான் சொல்லிக்கொண்டிருக்கையில் 
அதிகம் சத்தமிடுவேன் என நினைக்கிறேன் என்றாய்
பிறகு மன்னிப்பொன்றும் சொன்னாய்
எல்லைதாண்டியாதாய் நினைத்துகொண்டு 
கெளுக்கென்ற உன் மனதின் சிரிப்பொலி 
கேட்டத் தருணம் அது 

இளமை மருவி 
அங்கங்கள் ஸ்திரத்தன்மை 
இழந்துவிட்டதாய் சொன்னாய் 
வருத்தம் தெறிக்கும் தொனியில் 
எனக்கு நீயென்பது நின் உடலல்ல 
என்று சொல்லிக்கொண்டிருந்தேன்  

உன் அங்கங்களில் அளவுகளை 
சொல்லிக்கொண்டிருந்தாய் 
நான் குறித்து வைத்துக் கொண்டிருந்தேன் 
சாரல் வலுத்திருந்தது  
குரங்குகளின் சேட்டையும்

அடுத்தநாள் பெய்த 
எதிர்பாராத அடைமழையில் 
வானம் தெளிந்திருந்தது 
சாரல் தொலைந்திருந்தது 
சில குரங்குகள் மரித்திருந்தன
எண்ணற்ற இழைகள் உதிர்ந்தும் கிடந்தன  

அந்த நாட்களை எண்ணியெண்ணி 
இன்னமும் முனங்கிகொண்டிருக்கிறது
உன்னைத் தொலைத்துவிட்டு 
இன்னமும் என் நினைவு.

நல்ல கவிதைகளை எழுத இன்னும் தொடர்ந்து பல மைல்தூரம் பிரயாணிக்க வேண்டும்  . இந்த பயணத்தில் கிண்டர் கார்டன் முடித்திருக்கிறேன் என்றுதான் நினைக்கிறேன். இன்னும் வார்த்தைகள் அளவாகவும், அர்த்தமுள்ளதாகவும், சமூகம் குறித்தும் எழுத முயல வேண்டும். தேர்ந்தெடுத்து நிறைய கவிதை நூல்களை வாசிக்க வேண்டும். எனக்கு வழிகாட்டிகள் குறைவு என்பதாலும், நானே சுயமாக பெரும்பாலும் வழியினை தேடிச் செல்வதாலும், வேலைகளுக்கும் இதர பணிகளுக்கும் இடையே கவிதையை வைத்திருப்பதாலும் உள்ள நடைமுறைச் சிக்கல் இது. நிறைய கவிதைகளை தோன்றும் போது எழுத முடியாச் சூழலில் தொலைத்திருக்கிறேன். திரும்ப எழுத உட்காருகையில் அந்த எண்ணமே வராது தோற்றிருக்கிறேன். இதையெல்லாம் ஒரு சாக்காக சொல்லி ஆசுவாசப்படுத்திக் கொண்டாலும் இன்னும் கவிதைக்கு நியாயம் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கியிருக்கிறது. பார்க்கலாம்.

இரவு முழுவதும் உறக்கமின்றி, அதிகாலை நான்கு மணிக்கு தொடங்கி கிட்டத்தட்ட 3 மணி நேரமாக எதற்கு இப்படி எழுத வேண்டும்?. சென்ற வருட பதிவை 7 நண்பர்கள் மட்டுமே பார்த்ததாக ப்ளாக் சொல்லுகிறது. அதில் எத்தனை பேர் படித்தார்களோ?!. இந்த கவிதைகளை, இல்லை எதையாவது எழுதுவதன்பால் கிடைக்கிற சுயஉணர்தல் (self realization) மிக அலாதியானது. ஆச்சர்யமிக்கது. இன்று ஒரு மலையாள மொழி காதல் பாடலைக் கேட்க்கையில் ஒரு கற்பனை விரிந்தது. ஒரு வண்ணத்துப் பூச்சி என்னை வாஞ்சையாக தனது சிறகுகளில் இருத்தி, பறந்து எனது கடந்த கால காதல் தினங்களுக்கு கூட்டிச் செல்வது மாதிரி. விநோதமாகப் பட்டது அந்த கற்பனை. அந்த கவிதை எழுதும் முன்பு, எழுதும் போது, நினைக்கும் போதெல்லாம் இருக்கிற மனது, அடிநாக்கில் வைத்த அகலாத சார்க்கரை கட்டி மாதிரி, இனித்துக்கொண்டே இருக்கிறது. அந்தக் கவிதை இதோ...

வண்ணத்துப்பூச்சி முதுகில்ஏற்றி 
பறக்கிற சுகவாய்ப்பு
நினைவில் தோய்ந்து கிடக்கும்
காதல் தருணங்கள் 
விரிகிறது காதல்பிடித்து 
நடந்த கடந்த காலம் 

கருவிழி உள்ளிருக்கும் 
ஆடிக்கு மங்கலாய் 
காதலாய் நீ புலனான 
தருணம் கடக்கிற
வண்ணத்துப்பூச்சி
ஒருவேளை நீயோ?!

கிழிக்கிற கதிரொளி
கழிக்கிற காற்றொலி  
கலைக்கிற - வான்வெளியில் 
கடக்கிற யாவும் 
நின் கண்ணசைவே 
காதல் பிசைவே
மலர்வனம் வர 
மனம் அது உளற 
மணக்கிற வாசம் 
சுகிக்கிற நேசம்
வழுக்கி விழுகையில் 
தாங்கும் இன்னொரு 
வண்ணத்துப் பூச்சியும் நீயோ!!


இதுதான் எழுத்து தருகிற போதை என்று நினைக்கிறேன். தொடந்து எழுதுபவர்கள் இத்தகைய போதையின் வீழ்ந்து, மகிழ்ந்து, லயித்து,சுகித்து மீண்டும் மீண்டும் எழுத விழைகிறார்கள் என்பது என் எண்ணம். எனக்கு எழுத்து அப்படித்தான் இருக்கிறது இப்போதைக்கு. இல்லாவிட்டால் வருமான அதிகமில்லாத, சமூக அந்தஸ்து எளிதில் தராத, நேரம் பிடிக்கும் இந்தப் பணியினை எதற்கு ஒருவர் செய்ய வேண்டும்?. உடம்புக்கு கெடுதல் என்றாலும் குடித்து  லயிப்பது மாதிரியான போதை இதுவும். என்ன இது உடலுக்கும் மனதுக்கும் கேடில்லை. பேறு. ஏதோ நினைத்து எழுத ஆரம்பித்து, முடித்து பின்பு யோசிக்கையில் புரியும் நாம் எத்தனை தூரம் இந்த வரிகளுக்காக எழுத்தினுள்ளே பிரயாணித்திருக்கிறோம் என்பது. அது தருகிற புரிதல், சுகம் அலாதியானது. சில நல்ல எழுத்தாளர்களின் சில கவிதைகளை, கட்டுரைகளை, கதைகளைப் படிக்கிற பொழுது "எப்படி இப்படி வித்தியாசமாக இவர்களால் மட்டும் யோசிக்க முடிகிறது என்று அடிக்கடி தோன்றும். யோசித்து பார்க்கையில், எழுத்து எழுதுபவனை உள்வாங்கி தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது வெவ்வேறு வடிவங்களில் என்றுதான் நினைக்கிறேன். நாம் போகின்ற பாதையினை குத்து மதிப்பாக தீர்மானித்துக் கொண்டுதான் பிரயாணிக்கிறோம். ஆனால் எதிர்பாராத வியப்பளிக்க கூடிய இடத்திற்கு சிறப்பாக வந்து சேர்கிற மாயம் எல்லா எழுத்துக்கும் எழுதுபவன் கண்ணோட்டத்தில் நிகழ்வதாய் நினைக்கிறேன். அது எழுத்தின் சக்தி. எழுதுபவனுக்கே தீர்மானிக்க முடியாது எழுத்தின் போக்கினை. ஆரம்பிப்பதுதான் எழுதுபவன் வேலை. தொடர்தலை எழுத்தே எடுத்துக்கொள்வதாயும் தோன்றுகிறது சமயங்களில். இப்படியிருக்கையில் நல்ல எழுத்து விளைவதை எப்படி எழுதுபவன் மட்டும் செய்ததாகச் சொல்லமுடியும். எழுத்து ஒவ்வொருவர் கையின் வழியும் தன்னை வெவ்வேறு விதமாக, காலத்துக்கு ஏற்றவாறு  எழுதிக்கொள்கிறதோ என நினைக்கத் தோன்றுகிறது. 

நான் பார்த்த, பார்க்கின்ற, என்னை பாதித்த, பாதிக்கிற எல்லா உணர்வுகளையும், நிகழ்வுகளையும், மனிதர்களையும் கவிதையாக்க பெரும்பாலும் முடிவதில்லை. அப்படியே முயன்று ஆக்கினாலும் அதில் திருப்தியிருப்பதில்லை. அதனால் இந்த ஆண்டின் துவக்கத்திலிருந்து சிறுகதை எழுதும் முயற்சியையும் சேர்ந்து செய்யலாம் என்றிருக்கிறேன்.
சிறுவயது முதல் இன்றைய நிகழ்காலம் வரை கடந்த எல்லாவற்றையும் என்னை காலம் அழிக்கையில் அழியாதிருக்குமாறு சேமிக்க என்னென்ன வலிகள் உண்டோ அத்தனையும் செய்வது எனது ஒரு வாழ்வியல் நோக்கம். அதற்கு எழுத்து ஒரு வழி. அதில் கவிதைகளுக்கு அடுத்து இந்த சிறுகதை முயற்சி. சிறுகதை எழுதுவது குறித்த பயிற்சியோ, பெரும் புரிதல்களோ இல்லை. ஏகலைவன் மாதிரி முயன்று பார்க்கலாம். கைகூடிய மட்டும் இலாபம்.என்கிற ஒரு மனநிலை மட்டும் எப்போதும் இருப்பது கொஞ்சம் வரம். எனக்கு இன்னமும் எனது மூதாதையர்களின் உலகத்தை பற்றி தெரிந்து கொள்ள, வரலாற்றினை திரும்ப புரட்ட, பின்னோக்கிப் பயணம் செய்வதில் இருக்கும் ஆர்வம் என்னை இவ்வாறு சிந்திக்க தூண்டுகிறது. எனது தந்தையின், தாயின், தாத்தாவின், ஆச்சியின் பால்யம் குறித்த, பருவங்கள் குறித்த சிறு வயது பகிர்தல்கள் எனக்குள் ஆழமாக ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவு இதுவென நினைக்கிறேன். அவற்றை திருப்பி பார்க்கிற வாய்ப்பு கிடைப்பின் அது எத்தனை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அந்த வியப்பின் வடிகால்களே இந்த கிறுக்கல்களின் நோக்கம். நான் எதிர்ப்பார்க்கிற அளவிற்க்கு அவர்கள் யாரும் அதை பதிவு செய்து வைக்கவில்லை. வாய்வழியாக சொல்லிய கொஞ்ச கதைகளே தெரியும். பெரும்பாலான அவர்களது வாழ்க்கை நிகழ்வுகள் அவர்களுக்கு நியாபகம் இல்லை. இல்லை ஏதேனும் தயக்கம் காரணமாக அவர்கள் சொல்லுவதில்லை. எனக்கு அத்தகைய குணமோ, நிர்பந்தமோ இல்லை என்பதுவும் ஒரு வசதி, இப்படி உயில் மாதிரி எழுதி வைப்பதிலே. எனது பின்வரும் சந்ததியினருக்கு தெரியப்படுத்தவே இந்த எழுத்து முயற்சிகள் எல்லாம். எனக்கு எழுத்தின் இலக்கணம் குறித்தோ, வரைமுறைகள் குறித்தோ பெரிய அறிவு, கரிசனம் இருப்பதாகத் தோன்றவில்லை. நான் எழுத முயற்சிப்பது நான் கடந்து வந்த வாழ்வை, கடக்க போகின்ற வாழ்வை. அதுவும் ஒரு சுயசரிதை எழுதி வைக்கிற மாதிரி. அவ்வளவே.ஆகையால் எனது எழுத்துகள் தொழில்முறை எழுத்தாளர்கள் மாதிரி இல்லை என நினைப்பவர்கள் கொஞ்சம் மன்னித்து வாசியுங்கள்.  

நான்காவது ஆண்டில் என்ன நடக்கப்போகிறது என்ற சுவாரஷ்யம் எனக்கும் அதிகமுள்ளது. பெரிய திட்டமிடுதலெல்லாம் எதுவும் இல்லை. எழுத்து என்னை இழுக்கிற போக்கில் போக முயல்கிறேன் வழக்கம் போல.எனது எழுத்தை வாசித்த, வாசிக்கப்போகிற, நான் எழுத உந்து சக்தியாயிருக்கிற அனைவருக்கும் நன்றிகள். வணக்கங்கள்.      

எல்லோருக்கும் 68வது சுதந்திரதின வாழ்த்துக்கள்.

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔