வெயில்


என் நிழலை
என்னோடே
கூட்டிவரும் அதனை 
நான் கூட்டிவருவதாய்
நினைக்கையில்
சுடுகிறது வெயில்

கொதிக்கின்ற வெப்பின்
கூரான மூலையிலெங்கோ
கொஞ்சம் சுகம்
கொட்டித்தான் கிடக்கிறது

தொட்டுத் தழுவும் தென்றலின்
தேவசுகம் முழுதும் தெரிய
தேவை கொஞ்சம் வெப்பும்
தேம்பும் வியர்வை உப்பும்

கருத்ததேகம்
கவனித்துப் பார்ப்பவர்க்கு தெரியும்
எனக்கும் வெயிலுக்குமான
ஏகாந்த உறவு

உதிக்கின்ற வியர்வைத்துளி
உடல்நனைத்து முடிவில்
உள்ளம் நனைக்கையில்
விண் பார்க்கிற கண்ணில்
தெக்கிநிற்கும் 
மழைத்துளி ஏக்கம் கவிதை

வீதிவரை வந்து
தொட்டு விட்டு
வீடு நுழைகையில்
விட்டுவிடும் வெயில்
தீண்டாமைச் சிந்தனையை கொஞ்சம்
தீண்டத்தான்  செய்கிறது.

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

மயல்