Posts

Showing posts from February, 2015

தனிமையில் பாடுகின்ற அவன்

Image
கூரையிலிருந்து உமிழுகின்ற கொஞ்ச விளக்குகளின்  கூடிய ஒளியினை விட  கொஞ்சம் குறைவான  ஒலியளவில்  ஒன்றி, உருகிப் பாடுதல்  அருகில் அவளற்ற  தனிமையைக் கழிக்க அவன் கையாளும் உத்தி  உத்தியோகப் பொழுதுகளில்  இளம்வயதில் -குடும்ப  பாரம்சுமக்க  பயணப்பட்டு வந்த  பாதிப்பு வழியும்  முகக்கலை அவனது எப்பொழுதோ இருக்கும்  என்முகம் போல் அவன்  தினமும்   வருகையிலும்  போகையிலும்  நீங்கள் பார்த்தீர்களானால்  இழப்பின் சோகம்  இழையோடும் உடல்மொழியில்  இயங்குவதை காணலாம்  அவன் பாடும்  இந்த அற்புதப் பாடல்கள்  அவன் தங்கைக்கோ  தந்தைக்கோ  தாயுக்கோ  கேட்காது போனாலும்  கேட்காமலே போகாது  தூரங்கள்  உடல்களை வேண்டுமானால்  அந்நியப்படுத்தலாம்  உள்ளங்களை ஒருபோதுமல்ல  நானும் அவனும்  தேநீர் அருந்தப் போகிறோம்  அவர்களை உள்ளிறுத்தி  அவன் பாடிய  அந்தப் பா...

மன்னிப்பென்ற மாயை

Image
கடந்த பாதை கருதி வருந்துகையில் சில மன்னிப்புகள் எப்பொழுதும் உடனிருக்கின்றன கேட்கப்படாமலேயே திரும்பிப் பார்க்கையில் தினமும் கடக்கின்ற பாதை கடந்த பாதையாகி கனம் சேர்க்கிறது மன்னிப்புகளோடு பரிசுத்தனாய் தேவதூதனாய் மாறுகின்ற நொடிகள் நீளுவதேயில்லை என்னாலும் என் சார்ந்த எல்லாவற்றாலும் கனங்கள் குவிவதும் மன்னிப்புகள் பெருகுவதும் தவிர்க்கமுடியா நிகழ்வாவது தலைக்கே உறைக்க தேவையான தனிமை வாய்ப்பதுவுமில்லை வாய்ப்பினும் வசப்படுவதுமில்லை கேட்கப்படும் மன்னிப்புகளும் பெரும்பாலும் பாயப் பதுங்கும் பம்முதலாகவே பார்க்கப்படுகையில் எப்பொழுதோ ஜனிக்கின்ற எல்லா தேவதூதன்களும் இறக்க நேரிடுகிறது சரியும் தவறும் மனம் பொறுத்து மனிதர்கள் பொறுத்து மாறுகையில் மன்னிப்பென்ற ஒன்றே மாயை எனப்படுகிறது.  

தவறுகளின் நீட்சிகள்

Image
பீடித்துக் கிடக்கும் சொல்லெனா நீட்சிகொண்ட தவறென்றப் பள்ளத்தில் விரும்பி வீழ்கிறேன் திரும்பத் திரும்ப விழுகின்ற பொழுதெல்லாம் வீணடி படுகிறார் என்னோடு சிலர் ஏதுமறியாது எனைப்புரியாது தவறி விழுகிறோமா தள்ளி விழுகிறோமா தனித்து யோசிக்கையில் தவறியும் தள்ளியும் விளையாடுகிறது விதி ஊழ்வினை பொருட்டு உள்வினைப் பொருட்டு சரியும் தவறு தவறும் சரி காலத்தின் போக்கில் எனத் தத்துவம் உதிர்க்கும் தவறுகளின் நீட்சிகள் தவிக்கின்றன தனிமையில் எமப் பொழுதுகளில் என்கைகள் சிக்காத தருணங்களில் விளிம்பு கரையில் ஒதுங்கி நிற்கும் தயக்க என்னை தவறாது இழுத்து தம்பட்டமாய் மகிழ்கின்றன சரியெனத் திரியும் தவறுகளின் நீட்சிகள் எனக்கும் மெய்க்காது ஏனையோருக்கும் வாய்க்காது மாற்றமோ ஏமாற்றமோ எனக் குழப்பத்தில் கழிகிறது கடந்ததில் ஆரம்பித்து நிகழ்வில் தொடரும் கண்ணிய வாழ்க்கை!.

கனவினி

Image
கனத்த கன்னங் கொண்டு - சற்றே  கருத்த தேகங்கொண்ட வெள்ளைமன தேவதை  விடியும் பொழுதுகளில்  முடியும் கனவுகளிலூடே  நெடியாய் வருவதுண்டு   எங்கோ எனைக் கடந்த - இல்லை  நான் கடந்த  பிரதிகளின் பிம்பத்தொகுப்பு போல எனப் எப்பொழுதும் போல்   பெரிது படுத்தியதில்லை - எனினும்  தொடர்ந்து படுத்தி தொல்லைகள் பெரிதானது  ஊழ்வினை வழியேயான  உலகமதில்  உருண்டு செல்லுகையில்  படுத்தி பெரிதான பாவைப் பிம்பமதின்  பளிச்சென்ற பிரதியைக்  கண்டேன், கொண்டேன்  கனவின் காதலை  நனவில் வர்ணனை தேக்கமுற்ற  வார்த்தைகள் தோற்றுப்போன  கனவினியால் விழைந்த  கையறு நிலையது  கைக்கிளை கிளையது  கருவிழி புகுந்து  கனத்த இதயமது நுழைந்து  கண்டுகொண்டேன்  கண்டுகொண்டாள்  கனாவினை, அதெழுப்பிய  வினாவினை, விடையினை  அதிக நேர்முகமில்லை  அடிக்கடி அறிமுகமில்லை  முகவரியற்ற கனவுகள்  முடிவற்றதாய் தொடர...

நீ!

Image
உனக்கும் எனக்குமாய் தனித்தனியே கழிந்த தருணங்கள் நமக்காய் மாறி நம்முடையதாய் தொடரக் காரணமான இந்த காதலர் தினத்தில் கணத்த காதல் சிந்தனையொன்று என்னுள் உதிக்கிறது உன் குறித்து முதன்முதலாய் பார்த்த பருவம் கருவறை நினைவுபோல் கலையாமல் மறந்துகிடக்கிறது என்னுள் எங்கோ அரைக்கால் சட்டைதனை அழகாய் நான் அணியத்தொடங்கயிலோ அடிக்கடி அழுவதை குறைத்தபொழுதினிலோ நிஜத்தில் தரிசித்து நினைவில் பதிந்திருப்பாய் நீ! கரிய பொழுதுகளின் ஒளியாகவும் கலைப் பொழுதுகளின் களி யாகவும் - என்னுடன் என்னைக் கழிப்பவள் நீ! விளையாட்டுப் பொருளை தொலைத்து அழுது தூங்கி மறக்கும் துடிப்புச் சிறுவனாய் வீரிய வாழ்வை வினையின்றி கடக்க விதையான காரணம்  நீ! எனை மறந்து எங்கோ நான் தொலைந்து திரிகையில் தொடர்ந்து வந்து தொன்மம் பெருக்கும் உன்மம் நீ! சாத்தான்கள் சப்தமாய் சண்டையிடும் எனக்குள் சாத்வீக தேவதைகள் சட்டென சந்திக்க சாகாயமானவள் நீ! தனியனாய் தனிப்பயணங்கள் தளர்ந்து போகையில் உடலை அங்கிருத்தி உள்ளத்தை உடனனுப்பும் உன்னதம் நீ! சிறு துளிதனை உற்றுப்பார்க்கவும் செவ்வுளத்...

ஆரம்பத்தில் ஆரம்பம்

Image
பேருந்துக்கு காத்திருக்கும் பெரும் பொழுதுகளில்தான் பெயர்க்க மறந்த பெரும் வேலைகள் நினைவுக்குவருகின்றன மறத்தல் குறித்த அயர்ச்சியில் எதிர்நின்று மனதை மயக்கும் அழகியும் அவள்பொருட்டு உதிக்கின்ற அழகு கவிதைகளும் அலட்சியம் பெறுகின்றன எரிச்சலில் கால்கள் தரைதனை உதைக்கின்ற தருணங்களில் கிளம்புகின்ற தூசுத்துகள்கள் - என் புகைப்படக்காரனைத் தட்டியெழுப்பி ஒருங்கிணைக்க எல்லாவற்றையும் மறந்து கவிதைக்கான புகைப்படத்தையும் புகைப்படத்துக்கான கவிதையையும் யோசித்து மயங்குகையில் அழகியும் நகர - ஏறி அமர இடமிருந்த பேருந்தும் நகர்ந்திருக்கிறது மறுபடியும் ஆரம்பத்தில் ஆரம்பிக்கிறேன் பேருந்துக்கு காத்திருப்பவனாய்.

கழுத்தில் பதித்த முத்தம்

Image
உழைத்து களைத்து  ஓய்ந்து திரும்புகையில்  நீ கழுத்தில்  பதித்த முத்தம் குறித்த  கனவு வருகிறது  நிலைகுத்திய பார்வைகளோடு  நெட்டிமுறித்தும் தொடர்கிறேன்  விழித்திருக்கும் கண்கள்வழி விடியல் தரும்  முத்தக் கனவினை  நீ பூர்வஜென்மத்தில்  காட்டேரியாய்  ரத்தம் உறிஞ்சியிருக்கவேண்டும் -என்  மொத்தமும் உறிஞ்சுகிறாய்  முத்தம் வழி  பசலை நோயை  பக்குவமாய்  பயங்கரமாய்  பரப்பியிருக்கிறாய்  முத்தம்வழி ரத்தமெங்கும்! கைகள் நடுங்கினும்  கால்கள் தள்ளாடினும்  உதிரம் குறையினும்  உயிர் மகிழ்வதால்  நீ கழுத்தில் பதிக்கும் முத்தம் வேண்டி  கனவுக்குள் மறுபடி  விழுகிறேன்  வீழ்கிறேன்.