மன்னிப்பென்ற மாயை
கடந்த பாதை
கருதி வருந்துகையில்
சில மன்னிப்புகள்
எப்பொழுதும்
உடனிருக்கின்றன
கேட்கப்படாமலேயே
திரும்பிப் பார்க்கையில்
தினமும் கடக்கின்ற பாதை
கடந்த பாதையாகி
கனம் சேர்க்கிறது
மன்னிப்புகளோடு
பரிசுத்தனாய்
தேவதூதனாய்
மாறுகின்ற நொடிகள்
நீளுவதேயில்லை
என்னாலும்
என் சார்ந்த எல்லாவற்றாலும்
கனங்கள் குவிவதும்
மன்னிப்புகள் பெருகுவதும்
தவிர்க்கமுடியா நிகழ்வாவது
தலைக்கே உறைக்க
தேவையான தனிமை
வாய்ப்பதுவுமில்லை
வாய்ப்பினும் வசப்படுவதுமில்லை
கேட்கப்படும் மன்னிப்புகளும்
பெரும்பாலும்
பாயப் பதுங்கும்
பம்முதலாகவே பார்க்கப்படுகையில்
எப்பொழுதோ
ஜனிக்கின்ற எல்லா
தேவதூதன்களும் இறக்க நேரிடுகிறது
சரியும் தவறும்
மனம் பொறுத்து
மனிதர்கள் பொறுத்து
மாறுகையில்
மன்னிப்பென்ற ஒன்றே
மாயை எனப்படுகிறது.
Comments
Post a Comment