நீ!
உனக்கும் எனக்குமாய்
தனித்தனியே
கழிந்த தருணங்கள்
நமக்காய் மாறி
நம்முடையதாய் தொடரக்
காரணமான
இந்த காதலர் தினத்தில்
கணத்த
காதல் சிந்தனையொன்று
என்னுள் உதிக்கிறது
உன் குறித்து
முதன்முதலாய்
பார்த்த பருவம்
கருவறை நினைவுபோல்
கலையாமல்
மறந்துகிடக்கிறது
என்னுள் எங்கோ
அரைக்கால் சட்டைதனை
அழகாய் நான்
அணியத்தொடங்கயிலோ
அடிக்கடி அழுவதை
குறைத்தபொழுதினிலோ
நிஜத்தில் தரிசித்து
நினைவில் பதிந்திருப்பாய்
நீ!
கரிய பொழுதுகளின்
ஒளியாகவும்
கலைப் பொழுதுகளின்
களி யாகவும் - என்னுடன்
என்னைக் கழிப்பவள்
நீ!
விளையாட்டுப் பொருளை
தொலைத்து அழுது
தூங்கி மறக்கும்
துடிப்புச் சிறுவனாய்
வீரிய வாழ்வை
வினையின்றி கடக்க
விதையான காரணம்
நீ!
எனை மறந்து
எங்கோ நான்
தொலைந்து திரிகையில்
தொடர்ந்து வந்து
தொன்மம் பெருக்கும்
உன்மம்
நீ!
சாத்தான்கள் சப்தமாய்
சண்டையிடும் எனக்குள்
சாத்வீக தேவதைகள்
சட்டென சந்திக்க
சாகாயமானவள்
நீ!
தனியனாய்
தனிப்பயணங்கள்
தளர்ந்து போகையில்
உடலை அங்கிருத்தி
உள்ளத்தை
உடனனுப்பும்
உன்னதம்
நீ!
சிறு துளிதனை
உற்றுப்பார்க்கவும்
செவ்வுளத் தூய்மையை
கற்றுப்பார்க்கவும்
கற்பித்த
கலைமகள்
நீ!
அங்கம் அழியினும்
ஆவி தொலையினும்
இங்கிருக்கும்
இப்போதைய
நல்ல நான்
எப்போதும்
நீ!.... நீ!.... நீ!
Comments
Post a Comment