கழுத்தில் பதித்த முத்தம்
உழைத்து களைத்து
ஓய்ந்து திரும்புகையில்
நீ கழுத்தில்
பதித்த முத்தம் குறித்த
கனவு வருகிறது
நிலைகுத்திய பார்வைகளோடு
நெட்டிமுறித்தும் தொடர்கிறேன்
விழித்திருக்கும் கண்கள்வழி
விடியல் தரும்
முத்தக் கனவினை
நீ பூர்வஜென்மத்தில்
காட்டேரியாய்
ரத்தம் உறிஞ்சியிருக்கவேண்டும் -என்
மொத்தமும் உறிஞ்சுகிறாய்
முத்தம் வழி
பசலை நோயை
பக்குவமாய்
பயங்கரமாய்
பரப்பியிருக்கிறாய்
முத்தம்வழி ரத்தமெங்கும்!
கைகள் நடுங்கினும்
கால்கள் தள்ளாடினும்
உதிரம் குறையினும்
உயிர் மகிழ்வதால்
நீ கழுத்தில் பதிக்கும் முத்தம் வேண்டி
கனவுக்குள் மறுபடி
விழுகிறேன்
வீழ்கிறேன்.
Comments
Post a Comment