ஆரம்பத்தில் ஆரம்பம்
பேருந்துக்கு காத்திருக்கும்
பெரும் பொழுதுகளில்தான்
பெயர்க்க மறந்த
பெரும் வேலைகள்
நினைவுக்குவருகின்றன
மறத்தல் குறித்த அயர்ச்சியில்
எதிர்நின்று
மனதை மயக்கும் அழகியும்
அவள்பொருட்டு உதிக்கின்ற
அழகு கவிதைகளும்
அலட்சியம் பெறுகின்றன
எரிச்சலில்
கால்கள்
தரைதனை உதைக்கின்ற
தருணங்களில்
கிளம்புகின்ற தூசுத்துகள்கள் - என்
புகைப்படக்காரனைத் தட்டியெழுப்பி
ஒருங்கிணைக்க
எல்லாவற்றையும் மறந்து
கவிதைக்கான புகைப்படத்தையும்
புகைப்படத்துக்கான கவிதையையும்
யோசித்து மயங்குகையில்
அழகியும் நகர - ஏறி
அமர இடமிருந்த பேருந்தும்
நகர்ந்திருக்கிறது
மறுபடியும்
ஆரம்பத்தில்
ஆரம்பிக்கிறேன்
பேருந்துக்கு காத்திருப்பவனாய்.
Comments
Post a Comment