கவிதையாதல்
தங்கக் கம்பியாய் நீண்டு
வாழ்விடமெங்கும்
வனப்பாய் நுழையும்
காலைக்கதிரின் லயிப்பில்
பச்சைப் பசும்புல்லில்
நீர் விசிற
பரவும் மணத்தில்
ஈச்சமர அடிநிழலில்
கொஞ்சி சண்டையிட்டு
கூடிக் களிக்கும்
மைனாக்களின் ஈர்ப்பில்
தடித்த உடல்மொழியோடு - நிலம்
கடிக்க நடைபயிலும்
குணவதிகளின் பார்ப்பில்
பின் காட்டி
முன் சிந்திக்கச் செய்யும்
யுவதிகளின் கடப்பில்
என எல்லாவற்றிலும்
ஒளிந்திருந்தாலும்
புதரடியில்
அனாதையாய் இறந்துகிடக்கும்
சிறுகுருவியின் துயரந்தான்
நெஞ்சடைத்து
கவிதையாகிறது.
Comments
Post a Comment