நேற்று அப்படித்தான் இருந்தது



நேற்று அப்படித்தான் இருந்தது
குளிருக்கு முந்தைய 
பொழுதிலேயே நீ வருவதாய் 
சொல்லியிருந்தாய் 
மனதுக்கு கம்பளி 
போர்த்த தொடங்கியிருந்தேன் 

நீ வந்த பொழுதில் 
உள்ளும் புறமும் 
என்னை உளரச் செய்துகொண்டு
குளிரும் இருந்தது

இறுதியில் நீயும் வந்தாய் 
அருகினில் 
அணைக்கும் தொலைவிலிருந்தும் 
நீயே தெரியாதவாறு 
சூழ்ந்திருந்தது குளிர் என்னை 
என்ன சோதனை! 

அங்கம் முழுவதும் -நீ 
ஆடையால் மூடித்திரிய 
காரணமான இந்த 
அதீத குளிர்மீது
அத்தனை கோபம் எனக்கு

கொஞ்சம் கண்களும் 
நீண்ட அழகு
கை, கால் விரல்களும் மட்டும் 
காணக் கிடைத்தது வரம்!

மனதை உன்னோடு 
கோர்த்துவிட்டு 
நடந்து கொண்டிருந்தது  உடல் 
யாரோடோ!

உன் உதடு உதிர்த்த 
ஓரிரு வார்த்தைகளை 
திரும்பத் திரும்பக் 
கோர்த்து கலைத்து 
விளையாடிக் கொண்டிருக்கிறது 
வினைசெய்யும் நெஞ்சம் 

நின் ஓரக்கண் பார்வை 
தந்த அழுத்தத்தில் 
அகவை உருகி -நான் 
அழகாகியிருந்ததை நீ 
கண்டிப்பாய் 
கவனித்திருக்கக்கூடும்

நொடிகள் கரைந்து 
நீ கிளம்புகையில் 
முத்தமிட்டாய் குழந்தைக்கு 
என்னை நினைத்துக்கொண்டுதான்  
என்று இன்னமும் 
எண்ணிக் கொண்டிருக்கிறேன் 

நீ ஏறியமர்ந்து 
வாகனம் நகரவும் 
பிய்ந்த இதயம் 
இரத்தம் கசிய 
உன் வாகனம் பற்றியது 

அப்பவும் 
குறையாத குளிர் 
இரத்தம் கசியும் 
இதயத்தையும் பற்றியது.

இன்றும்கூட நேற்றுபோல் 
அப்படித்தான் இருக்கிறது! 

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔