முந்தைய நொடிவரை
ஒளிரும்
நீள் செவ்வக திரையில்
வந்தமர்ந்து வாழ்ந்து செல்லும்
கார்ட்டூன் கதாபாத்திரங்களோடு
உயிராவதும்
கைகளில் துடைப்பங்கொண்டு
குப்பைகள் சிதறி
சுத்தப்பாடம் சொல்வதும்
வார்த்தைகளற்ற வரிகளில்
இசை கோர்த்து
சந்தம் சேர்த்து
பாடலாக்கி பாடுவதும்
நொடிகளில்
விழிகள் உருட்டி
ஆத்திரத்தையும்
அன்பையும்
பொழிவதும்
உறங்க, உண்ண
தாய்மடி வேண்டி
கதைகள் கேட்டு
கனவோடு துயில்வதுவும்
வாஞ்சை பொங்கி
வழியும் தருணங்களிலெல்லாம்
இதயம் மலர
ஈர முத்தம் தருவதுவும்
வரிகளிலும், வார்த்தையிலும்
அடங்காத அசைவுகள்
ஆயிரம் உதிர்த்து
ஆத்மா நிரப்புவதும்
செய்கின்ற அவள்
சிறுமியென்றே
இத்தனை நாள் நினைத்திருந்தேன்
அகல விரிந்து கிடந்த
அங்காடி தன்னில்
தாய் தொலைத்து
தடுமாறி அழுத
தன்வயதொத்த சிறுவனின் நினைவில்
வெகுநாட்கள் கழித்து
"பாவம்ல..அவன் அவங்க அம்மாகிட்ட
போயிருப்பான்ல"
என்று மனிதம் பொங்க
கேட்டதற்கு முந்தைய நொடிவரை.
Comments
Post a Comment