வசவுக் கவிதை
இன்றைக்கு
இந்த மாலை
இன்பம் அளிப்பதாக
இருக்கிறது
இருக்கட்டும்
காரணம் நீ!
அறிவாய்.
திட்டுவதன் மூலமும்
மகிழ்விக்க முடியுமென
உலக பிரியங்களின்
வரலாற்றில்,
நமது பிரியங்களின்
வரலாற்றில்
ஓரு புதிய கண்டுபிடிப்பினை
முழு முதலாக
நீ அழுத்தமாக
பதிவு செய்திருக்கிறாய்.
பிரியந்தோய்ந்த
சிறு பிள்ளையின்
இதழ் கணத்தில்
விழுந்த வசவுகளில்
பெருமழை பொழிந்த
சுடு நிலமாய்
மகிழ்ந்தேன்.
அன்பின்
எல்லா இலக்கணங்களையும்
நம் பிரியங்கொண்டு
நாமே உடைப்போமே
வரலாறு வணங்க!
இப்போது
உணர்கிறேன்
உனது புகைப்படத்தை
கட்டமாக
சட்டம் செய்து
விட்டம் உயர்ந்த
வீட்டில்
ஏன் மாற்றினேனென!
ஆத்மாவிற்க்கு
அன்றே புரிந்தது
அறிவிற்கு புரிய
இத்தனை காலம்
எத்தனை காலம்!
நீ எனக்கு
புத்தருக்கு வாய்த்தது போன்ற
போதிமரம்
உன்னிலிருந்து பெற்ற
இப்பிரியத்தின்
பெரும் ஞானத்தை
பேறாகக் கருதி
பொற்றி, போற்றி
பாதுகாப்பது
எனக்கு
வரலாற்றுக் கடமை!
எத்துனை காலத்திற்க்குத்தான்
ரோமியோ, ஜூலியட்
கதைகள்!!
நம் சந்ததிகள்
நம் கதைகளைப் பேசட்டுமே!
உன்னைப் பேசட்டுமே!
உன் மெளனத்தின்
ஆழ்பிரியத்தைப் பேசட்டுமே!
என்னுள்
என் கண்களில்
இந்நாட்களில்
சந்தோச ஈரம்
சட்டென துளிர்க்க
அருகிலும், தொலைவிலும்
ஒருத்தி இருக்கிறாய்!
நீ இருக்கிறாய்!
எப்போதுமிருப்பாய்!
இந்நாட்களில்
என்னுளிருந்து
நீ எழுதுவதுதான்
கவிதை
இதுவும் கூட..
நான் கருவி மட்டுமே!
நீ என்னை
பதின் பருவத்திற்க்கு
விநாடிக்குள் அழைத்து செல்லும்
விந்தை!
என்னை என்றும்
இளைஞனாய்
உணர்விக்கிற
மெய்ஞான அதிசயம்!
என்னை
தனிமையில்
தன்னிலை மறக்க வைக்கும்
தவம்!
என்னுள்
பேரின்பம் விதைக்கும்
இம்மானிட மகத்துவம்!
இப்படியே
உன்னை காதலித்தவாறே
இருந்து விட்டும்
இறந்துவிட்டும் போகிறேனே.
நான் இறக்கையில்
என் கல்லறையில்
எழுதட்டும் காலம்
நான் உன் காந்தர்வக் காதலலென!.
Comments
Post a Comment