இரவு இன்னும் விடியவேயில்லை
நீ பேசி நீண்ட
நேற்றைய இரவு
இன்னும் விடியவேயில்லை..
இந்த பகலிரவில்
எனக்கு மட்டும் தெரிகின்ற
நட்சத்திரங்களுடே
உன்னை பார்த்துக் கொண்டிருக்கிறேன்..
காய்ந்த நிலத்தில்
பொழிந்த மழைபோல்
நேற்றைய இரவில் நீ!
ஈரம் என்றும் மிஞ்சும்..
தூரிகை கொண்டு வரையும்
ஓவியன் போல்
இரவில் நீ சிரிக்கும் போதெல்லாம்
கந்தர்வமாக உன்னை
வரைந்து கொண்டேன்
நீ வராதே போயின்
வாழ்ந்து கொள்ள..
நேற்று நீ பேசி முடிக்கும் வரை
நிலவும் நின்றிருந்தது
வானில்
அதற்கும் காத்திருப்பு
அவசியப் படுகிறது
என்போல்..
இலேசாகி கனக்கும்
இதயமும்
பயந்து தெளியும்
மனமும்
நீ அருளிய வரங்கள்
இந்நாட்களில் எனக்கு..
நின் எல்லா காரணங்களையும்
புரிந்து கொண்டு
ஏற்காத மனம்
எனக்கு வரமும் சாபமும்..
நான் இறக்கும் போதாவது
உன் எல்லைகளை தகர்த்துவிட்டு
இதழில் முத்தமிட வேண்டும்
நீ என்னை..
நீ பேசி நீண்ட
நேற்றைய இரவு
என்றும் விடியப்போவதேயில்லை
Comments
Post a Comment