ஏனடா இத்தனை அவசரம்!






இன்று 
குளிர்சூடி உதித்த
சூரியனும்
மழைதாங்கி வீசுகின்ற காற்றும்
என்றும் போலன்றி
இதயம் கணக்கச் செய்கின்றன

நேற்றுவரை  நீயிருந்தாய் 
பால்யத்தின் நீட்சியாய் - நீண்ட 
பயணத்தின் சாட்சியாய் 
இன்று இல்லை 
போய் விட்டாய் 
காலனழைக்க 
காததூரம் 
காலத்தின் வீழ்ச்சியாய்!

திரும்பி 
வரவே முடியாத,  
சந்திக்கவே முடியாத 
சாவின் தூரம்… 
உனக்கு மட்டும் 
முன்னதாகவே 
நீ நிகழ்த்திக் கொண்ட  
முற்றுப்பயணம்!

நினைவுகள் அழுத்த
புலம்பித் திரிகிறோம்
உன் உற்றமும்
நட்புச் சுற்றமும்
அழுகை குரலோடு
அழுத்தும் கேள்விகளோடு

அவள்களும்
அவன்களும் 
அவர்களும் 
நெஞ்சம் விம்மி 
நேசம் பொருட்டு 
கண்ணில் கோர்க்கிறார்
கண்ணீர் துளிகள்

சில துளிகள்
வெளிப்படையாகவும்
சில இரகசியமாகவும் உதிர்ந்து 
இதயங்கள் உடைபடும்
ஓசைகள் கேட்கின்றன
எல்லாமும் 
என் இதயத்திற்கருகில்  
இடைவிடாது கேட்பதுதான் 
துயரம்
எவ்வளவுதான் 
தாங்கும் 
இந்த ஒருசோடிக் காதுகளும் 
ஒற்றை நெஞ்சமும்!

ஏனையோரை 
இரவில், இருளில் 
அழ வைத்திருக்கிறாய் நீ!

எல்லோரும் 
அவரறிந்த உன்னை 
கதைத்துக் கொண்டேயிருக்கிறார்கள் 
தீராது பெருகுகிறது 
எல்லோருக்கும் ஆற்றாமை 
எல்லோருக்குள்ளும் சோகம்
எல்லோருக்கும் பயம் 
எல்லா மனதிலும் கோபம் 

நீ 
அழகானவனாய் இருந்தாய் 
அறிவானவனுமாய் இருந்தாய் 
நட்சத்திரங்களை நோக்கிய
உன் கொண்டாட்டத்தில்
ஜனித்த பூமியை
கொஞ்சம் மறந்து போனாய்
அதனாலேயே 
தூரிதகதியில்
துறந்தும் போனாய்

உன் நியாபகங்களை
இனி சுமந்து அழுத்தும் 
மறதி மறந்த 
இந்த பாழ்நெஞ்சம்,
நினைவுகளை 
ஓட்டி, ஓட்டி 
உறக்கம் கெடுக்கும்
உனை நேசித்த 
ஆழ்மனது கொஞ்சம்

எல்லோருக்கும் 
நல்ல நண்பன் நீ
மரணத்திற்குமா
என்பதுதான்
நிதர்சன அங்கலாய்ப்பு

உன் நினைவு தாங்கி 
நியாபகங்கள் தாங்கி 
சுற்றிவருவேன் 
சுத்தமல்லியை - அறிவுச் 
சுடரேற்றிய 
சுத்த பள்ளியை 
அறிந்தவற்றை - வளர்ந்து 
தெரிந்தவற்றை 

நெஞ்சில் கங்கிட்டு 
நெருப்புக்கு கொடுத்தபின் 
அஸ்தி கரைத்து 
அணைந்து திரும்புகையில் 
வானம் பொழிந்தபோது
எண்ணிக் கொண்டேன் 
நீ அணையவில்லை 
கொஞ்சம் அவசரமாக 
ஒளிர்ந்திருக்கிறாயென

ஒருநாள்
எல்லோரும் வருவோம் - நீ 
சென்றவிடம் நோக்கி
அப்போது 
உன்னை அடித்துக் கேட்டு
அறிந்து கொள்கிறேன்

ஏனடா இத்தனை அவசரமென!

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔