காத்துக்கொண்டேயிருப்பேன்!



சற்றே பனிசூழ்ந்திருக்கும் 

காலைப்பொழுதில் 

கதிராக ஊடுருவும் 

உனது நினைப்பில் 

மகிழ்ந்திருக்கிறேன்!


இப்பொழுதெல்லாம் 

அடிக்கடி 

கண்கள் பனிக்கின்றன 

மனது இலகுவாக 

இருக்கிறது 

அன்பின் அதீதம் 

என்னை புரட்டிப் போடுதலை 

உணரமுடிகிறது 


நேற்று 

நீ உதிர்த்த 

அந்த வரலாற்றுச் சொற்றொடரை 

வரிகளாய் 

வார்த்தைகளாய் 

பிரித்து கோர்த்து 

விளையாடும் குழந்தையாய் 

மனதை மாற்றி விட்டிருக்கிறாய்!


எனக்கே தெரியாத 

என் ஆழ்மன உணர்வுகளை 

வீணையின் 

நரம்புகளாய் 

மீட்டி இசையாக்குகிறாய் 

எப்பொழுதும்!


நீதான் வேண்டுமென 

அடிக்கடி 

அழுகின்ற 

அடம் பிடிக்கிற - இந்த 

ஆழ்மனக் குழந்தையை  

உன்னிடம் சேர்ப்பிக்க 

காலம் 

கூடவே கூடாது போலும்!


நீ 

விரைவில் 

வருவதாய் 

சொல்லியிருக்கிறாய் 

நாட்களை 

எண்ணத் தொடங்கிவிட்டேன்!


காலம் 

இனி 

மின்னல்வேகத்தில் 

என் மனதோடு 

இயைந்து ஓடும்!


இதயம் படபடக்கத் 

தொடங்கியிருக்கிறது 

அதை ஆசுவாசப்படுத்தவும் 

நீயே வேண்டுமென  

விதியெழுதி காத்திருக்கும் 

உருகி உருகி 

உனை நேசிக்கும் 

விசித்திரம் நான்!


உன்னைப் பார்க்கும் 

நொடியில் 

கண்களில் நீராய் 

காதல் பெருக்கெடுத்து 

நான் நிலைகுலையும் 

அந்த தருணத்துக்காக 

எத்தனை ஜென்மம் 

வேண்டுமானாலும் 

மறுபடி மறுபடி 

காத்துக்கொண்டேயிருப்பேன்! 

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔