நண்பன் சங்கருக்கு அஞ்சலி..
சரியாக நினைவிலில்லை. சராசரியாக 1993 வாக்கில் இருக்கும். திருநெல்வேலி, சுத்தமல்லி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் (மந்தை ஸ்கூல்) ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்ததாய் நியாபகம். சரஸ்வதி டீச்சர் வகுப்பு ஆசிரியர். எல்லா நிலை மாணவர்களும் பெரிதாக எந்த வித பேதமுமின்றி பயின்ற காலம் அது.
அப்பொழுதெல்லாம் விவேகானந்த கேந்திரம் நடத்தும் போட்டிகள் அரசுப் பள்ளிகள் அளவில் பிரபலம். பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஒப்புவித்தல் போட்டி , இன்னும் சில போட்டிகள் என வருடா வருடம் நடக்கும். பள்ளியிலிருந்து சில சிறந்த மாணவர்களை தேர்வு செய்து அனுப்பி வைப்பார்கள். நானும் சென்றிருக்கிறேன். நான் சிறந்த மாணவரா??!! அப்படித்தான் நினைக்கிறேன்… ஆனால் பரிசெல்லாம் நமக்கு ரெம்பத் தூரம். போவது வருவதோடு சரி. ஒரு புளி சாதம் கட்டிக்கொண்டு ஜாலியாக போய் வருவதோடு சரி.
தூரமாக சங்கர் அறிமுகமானது அங்கிருந்துதான். எல்லா வருடங்களிலும், நிறைய போட்டிகளில் தொடர்ச்சியாக வென்று வருகிற ஒரு பிரைட் ஸ்டுடென்ட் . ஆளும் பிரைட் , அறிவும் பிரைட்.
அவனது ஆளுமை (personality ) பற்றியும் சொல்ல வேண்டும். மொத்தப் பள்ளியும் கறுப்பர் கூடம். முரட்டு பசங்க. நல்ல வெள்ளை வெளரென்று , கத்தை முடியோடு , சதைபிடிப்பாய் துறுதுறுவென்று இருக்கும் அவனை எல்லோருக்கும் தெரிந்திருந்தது, பிடித்திருந்தது. "ஆளு இப்பிடி இருக்காம் டே, அதான் இவனுக்கு எப்போதும் பரிசு குடுக்காணுவோ " இப்படி ஒரு மனநிலை நிறைய பேருக்கு இருந்தது. ஆனால் சங்கர் உண்மையிலேயே பிரைட் ஸ்டுடென்ட்.
இரண்டு வருடம் மந்தை பள்ளியில் படித்திருப்பான் என நினைக்கிறேன் (சரியாக நினைவிலில்லை). பிறகு கோபாலசமுத்திரம் பண்ணை வெங்கட்ராமய்யர் பள்ளிக்கு சென்றுவிட்டதாக நினைவு. எட்டாவது வரை அங்கு படித்திருப்பான் என நினைக்கிறேன். சங்கர் என்னைவிட ஒரு வகுப்பு அதிகமா படித்துக் கொண்டிருந்தான். நான் ஐந்தாவதெனில் அவன் ஆறாவது.
கோபாலசமுத்திரம் பள்ளி
அவனது குடும்பம் கீழ அக்கிரஹாரத்திலிருந்தது (கிழக் கிராமம்). அதன் பிறகு சில வருடங்களுக்கு பெரிய தொடர்பில்லை. நாங்கள் கோவில் பத்து தெருவில் குடியிருந்தோம். கீழக் கிராமம் கூப்பிடு தொலைவிருந்தும் பெரிதாக அங்கு சென்று விளையாடியதாய் நினைவிலில்லை.சில வருடங்களுக்கு தொடர்புகளில்லை.
சுத்தமல்லி அக்கிரஹாரம்
காமராஜர் பள்ளி ..பேட்டை
நான் எட்டாம் வகுப்பு மந்தை பள்ளியில் முடித்த பிறகு , பேட்டை காமராஜர் பள்ளியில் ஒன்பதாம் வகுப்புக்கு சேர்ந்தேன். சங்கர் அப்போது அதே பள்ளியில் பத்தாவது வகுப்பு. 10 C பிரிவு. ஒன்பதாம் வகுப்பு C பிரிவிலிருந்து 10ம் வகுப்பு C பிரிவு. பின் வகுப்பு ஆசிரியர் சங்கர வடிவு டீச்சருக்கும் சங்கர்தான் favorite .10C
பட்டராயன் (பட்டுராஜன்) சார் வகுப்பு. ஒன்பதாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்புக்கு மாணவர்களை பிரிக்கும் பொழுது ,எல்லோரும் அவர் வகுப்புக்கு போக ஆசைப்படுவோம். அவர் மக்குகளை மகானாக்கும் கைங்கர்யம் தெரிந்தவர் என்பதால். சங்கர் இயல்பிலேயே bright student , இதில் பட்ராஜன் வகுப்பு வேறு. மறுபடியும் எங்களுக்குள் மறு அறிமுகம். அவன் bright student என்றால் நான் quite opposite. dark student . both on skin tone and brain tone! அப்பொழுது ஆங்கிலப் பரிட்சையில் comprehensive writing என்று ஒரு 10 மதிப்பெண் வினா வரும். rough copy , fair copy அப்படீன்னு ஏதோ எழுதி வைப்போம். அப்புறம் இந்த preposition, articles, tenses என்று எந்த சாமாச்சாரமும் நமக்கு வராது. ஆங்கிலம் நமக்கு அந்நிய மொழி!எதுக்குடா இந்த English படிக்கிறோம் என்கிற அளவுக்கு நமக்கு ஒவ்வாமை ஆங்கிலத்தோடு. அப்போது படிப்பாளி, நம்ம ஊரு என்கிற உரிமையில் சங்கரிடம் போய் இந்த ஆங்கில சிக்கல்களை வெல்வது எப்படின்னு அடிக்கடி கேட்பதுண்டு. அவனும் சலிக்காது சொல்லித்தருவான் ஆனாலும் நமது ஆட்டு மூளைக்கு ஒன்னும் புரியாது என்பது வேறு கதை.
பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் எந்த வகுப்பு மாணவர் முதலிடம் வருவார் என்று ஒரு அமைதியாக மாணவர்களுக்குள் ஒரு பேச்சு, போட்டி ஓடிக் கொண்டிருக்கும். எல்லா வகுப்புகளிலும் top 5 மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் பெயர்களை மதிப்பெண்களோடு எழுதி வைத்திருப்பார்கள் அந்தந்த வகுப்பு கரும்பலகைகளில். 10 வது C பிரிவில் சங்கர் எப்போதும் இரண்டாம் இடத்திலும் அவ்வப்போது முதல் இடத்திலும் இருந்ததாய் நியாபகம். He was one among the top contestant on that competition. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான பொழுது மனக்காவலம் பெருமாள் என்றோரு பையன் 10A பிரிவிலிருந்து முதலிடம் பெற்றதாய் நியாபகம். சங்கர் 4வது இடம் என்று நினைக்கிறேன். அவனிடம் இருந்து பெற்ற அறிவை வைத்து நான் என்ன செய்தேன் என்று நீங்கள் கேட்க கூடாது. As I told, I was a dark student. Both on skin tone and brain tone!
நான் ஒன்பதாவது படித்துக்கொண்டிருந்த பொழுது சங்கர்,அவனது அண்ணா ஹரி, அவரது வகுப்பு தோழன் சுப்பையா @ பாபு (பாபு), அவரது தம்பி அப்பு (சங்கரலிங்கம்) எல்லோரும் அதே பள்ளியில் வெவ்வேறு வகுப்புகளில் படித்துக் கொண்டிருந்தோம். பின்னாளில் நாங்கள் ஐவரும் பஞ்ச பாண்டவர்களாய் ஒரு gang ஆனது வேறு கதை. செய்த சேட்டைகள் தனிக்கதை.
சங்கர் 10வது படித்துக் கொண்டிருத்தபோது அவனது அண்ணா ஹரி, மேற்ச்சொன்ன பாபு 12வது படித்துக் கொண்டிருந்தார்கள். எனது அக்கா (சகோதரி) உட்பட எல்லோரும் மணி சுந்தரி மிஸ் அவர்களிடம் டியூஷன் படித்துகொண்டிருந்த பருவமும் அது சார்ந்த நிகழ்வுகளும் இன்னும் நினைவிலிருக்கிறது. பின்பு அதே மணி சுந்தரி அக்காதான் எனக்கும் படிப்பு வரும், அறிவு ஏதோ கொஞ்சம் இருக்கிறது என்று என்னை நம்ப வைத்து எனக்கே நிரூபித்தவர்!
சங்கர் படிப்பில் கில்லி. இன்று போல் பெரிய நவீன ப்ளூ பிரிண்ட் களும், டியூஷன், கோச்சிங் கிளாஸ் என ஏதும் இல்லாத காலத்தில் இயல்பாய் படித்தவன். He was born intelligent.
நன்றாக நீச்சல் வரும், சைக்கிள் அவ்வளவு வேகமாய் ஓட்டுவான். படிப்பில் சுட்டி. வாய்க்காலில், தாமிரபரணி ஆற்றில் நீந்திக் குளித்த அது சார்ந்த நினைவுகள் ஏராளம் எனக்கு, எங்களுக்கு. தாமிரபரணி ஆற்றில், சாத்தாங்கோயில் மணற்பரப்பில் சோறு கட்டிக்கொண்டு போய் ஆடிய கிரிக்கெட் ஆட்டமெல்லாம் குரோமோசோமில் பதிந்திருக்கிறது. நாங்கள் எல்லோரும் சத்தம் போட்டு படிக்கிற பொழுது சத்தமே இல்லாமல் படித்து மார்க் எடுக்கிற அறிவாளி. அதிகம் பேசக்கூடிய குணம் கிடையாது அவனுக்கு. பல நேரங்களில் அது அவனோடு பழக கொஞ்சம் இடைஞ்சல். பின்னாட்களில் அதை உணர்ந்திருக்கிறேன் அவனிடத்தில் அதைச் சொல்லியும் இருக்கிறேன். பாபு வீட்டில் கிரிக்கெட் முதல் carrom board வரை அவ்வளவு சேர்ந்து விளையாடியிருக்கிறோம். அவ்வளவு நினைவுகள் இருக்கின்றன. திருனாங்கோயிலுக்கு ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் சனிக்கிழைமைகளில் போன நினைவுகளும், வருடம் ஒரு முறை குற்றாலம் சென்ற நினைவுகள் எவ்வளவு முறை பேசினாலும் அலுக்காதவை.
கல்லூரிக் காலங்களில் மிகவும் நெருக்கமான நட்பு ஆரம்பித்தது அவனோடு. 1999 - 2002 இளங்கலை இயற்பியல் batch . மா.தி.தா .இந்து கல்லூரியில். அவனது கல்லுரித் தோழர்கள் பெரும்பான்மையானவர்களை நான் அறிவேன்.சுடலை, ஜானி,பத்து ,முருகேசன், பிரேம், என எல்லோரோடும் நியாபங்கள் இருக்கின்றன. அவனது அண்ணா ஹரி வேலை பொருட்டு பெற்றோர்களோடு, சென்னை சென்ற பிறகு, இரெண்டாண்டு கல்லூரி காலங்களில் கிட்டத்தட்ட எல்லா நாட்களிலும் அவனோடு இருந்திருக்கிறேன். குழந்தை பாட்டி! பில்டர் காபி என அவை golden period of our friendship. இருவரும் சேர்ந்து எல்லோரையும் கிண்டல், கேலி செய்தது முதல், கிரிக்கெட், ஆற்றுக்கு குளியல், வெயிலுகந்தஅம்மன் கிரவுண்ட், முருகன் கோவில் வயற்காடு கிரிக்கெட், சுத்தமல்லி அய்யப்பன்கோவில் ஜிம், சேர்ந்து சாப்பிட்டது, உறங்கியது என அவனுக்கு எல்லாமுமாய் நான் இருந்த காலங்கள் அவை. சங்கர் வேலு என்று இசையமைப்பாளர்கள் சங்கர் கணேஷ் போன்று எங்களை அப்போது அழைப்பவர்கள், அறிந்தவர்கள் அனேகம். கேப்டன், Sriram, சதீஷ், இங்கிலீஷ், sorna Ganesh, மணிகண்டன், கிட்டு, நம்பி, Bhuvanesh, பாஸ்கர் அண்ணா, ராம்ஜி அண்ணா.. என சிறிதும் பெரிதுமாய் நிறைய முகங்கள்.
கடைசியாய் திருநெல்வேலியிலிருந்து சென்னை பேருந்து ஏற்றி விட்டதும் நான் தான். பிறகு அவன் gati யில் வேலைக்கு சேர்ந்தது நான் 2003 இல் சென்னை வந்தது என வாழ்க்கை கொஞ்சம் சீரியஸ் ஆக சுழல ஆரம்பித்தது. சென்னை வந்த புதிதில் ஒரு second hand Suzuki வைத்திருந்தான். அது முதல் அவனை Suzuki என்றே கூப்பிடுவோம்.எனது mobile contact ல் இன்னும் Suzuki என்றே பதிந்து வைத்திருக்கிறேன்.
சங்கர் வாழ்வில் மாற்றங்கள் வரத்தொடங்கியிருந்தன. புது சூழ்நிலைகள் புது மனிதர்களை அறிமுகப்படுத்த தொடங்கியிருந்தன. காலையில் எழுந்து, குளிச்சு, மேற்க பாத்த பிள்ளையார் கோவிலுக்கு போய்விட்டு வீட்டுக்கு வந்து பூஜை செய்தபிறகு சாப்பிடும் சங்கர் கொஞ்சம் மாறத்தொடங்கியிருந்தான் ஆரோக்கியமாக. எப்போதும் வேட்டியே அணியும் அவன் கொஞ்சம் பெர்முடா டிரௌசர் அணியத்துவங்கியிருந்தான். நகரம் எல்லோரையும் போல் அவனையும் கொஞ்சம் ஆக்கிரமிக்கத் தொடங்கிய காலங்கள் அவை. அப்பொழுதும் நான் வெஸ்ட் மாம்பலத்திலும் அவன் குரோம்பேட் வெங்கட்ராமன் நகரிலும் இருந்தாலும் வாரம் ஒருமுறை சந்தித்துக்கொள்வோம். சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் சேர்ந்து சுற்றியிருக்க்கிறோம். பிறகு நான் நாகர்கோயில் சென்ற பிறகு, (2004-2007) சமயம் கிடைக்கும் போதெல்லாம் சந்த்தித்த நியாபகங்கள் நிறைய இருக்கின்றன. மேலராமன் புதூர், திற்பரப்பு அருவி, மீனாட்சி புரம் ,மூர்த்தி மாமா வீடு, உமா , காயத்ரி, மாமி , தாத்தா என நிறைய நியாபகங்கள்.
பிறகு நான் 2007 இல் மறுபடியும் சென்னை வந்தேன். மறுபடியும் காலஓட்டத்தில் இடைவெளி அதிகரித்தாலும் சந்தித்துக் கொண்டுதான் இருந்தோம்.திருமணமாகி இருவரும் குடும்பமாகவும் நட்போடவே இருந்து வந்திருக்கிறோம். 2015 ல் நான் அமீரகம் சென்ற பிறகு தொடர்பு கொள்வது குறைந்து போனது, சந்திப்பும். அதற்கு பிறகு 2019 ல் நான் சென்னை திரும்ப வந்த பிறகும் சந்திக்கவேயில்லை. வெவ்வேறு காரணங்கள் , சூழ்நிலைகள்.
இப்போது யோசித்தால் தவறிழைத்து விட்டதாகவே தோணுகிறது. சந்தித்திருக்கலாம், தொடர்ந்து பேசியிருக்கலாமென. கனவிலும் யோசிக்கவில்லை இப்படி ஒரு நிகழ்வு நிகழுமென.
நண்பர் விஷ்ணு அழைத்துச் சங்கர் இறந்துவிட்டதாய் சொன்னபோது மனம் நம்பவேயில்லை.இச்செய்தி பொய்யாய் இருக்கக்கூடாதா என எண்ணிய மனம் அண்ணா ஹரியை அழைத்தது உறுதி செய்த பிறகே இது உண்மை, நிதர்சனம் எனப் புரிந்துகொண்டது.ஆனாலும் மறுநாள்தான் நம்பத் தொடங்கியது.
வாழ்க்கை பெரும் போராட்டம், நேற்றிருப்பது இன்று இருப்பதில்லை, எதுவும் நிரந்தரமில்லை என இரவு முழுவதும் கண்ணீரால் கரைய, மறுநாள் அவனது இறுதிச் சடங்கிற்கு சென்று வந்தேன். சிரித்த முகத்தோடு உறங்கிக்கொண்டிருப்பது போல்தான் இருந்தான். "டேய் எந்திருடா" என்று அவனை கிராமத்தில் உறக்கத்திலிருந்து எழுப்பியது போல் இன்றும் எழுப்பிவிடலாமா என மனம் வேண்டிக்கொண்டிருந்தது. ஆனால் அது சாத்தியமில்லையே!. நிறைய நண்பர்கள் வருத்தத்துடன் வந்திருந்தார்கள். அவனைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தோம். இறுதிப்பயணத்தில் கண்ணீர்மல்க நடந்தபோது, இதுதான் அவனோடு நடக்கிற கடைசி நடை என்று மனம் நம்ப மறுத்தது.
இடுகாட்டில் நான் ஒரு முறை சளிக்கு தைலம் தேய்த்த அவனது மார்பில் நெருப்பைக் கொட்டியபோது, வாழ்வு ஒரு பெரும் சாபமாய் போனது எனக்கு.
அடுத்த ஒரு மணித்துளிகளில் அஸ்தியாய் ஆகி பிறிதொரு அரைமணி நேரத்தில் அதை குளத்தில் போட்டுவிட்டு கிளம்பியபோது, என் நண்பன் அவனது நினைவுகள் கடந்த காலமாய் ஆனது புரியத்தொடங்கியது.
மிகச்சுருக்கமான நினைவுகள் மட்டுமே இது. 30 வருட நினைவுகளையெல்லாம் எழுதித் தீர்த்துவிடமுடியாது.
எனது அம்மா, அக்காக்கள், எங்களது பால்ய நண்பர்கள் எங்களது பள்ளி, கல்லூரித் தோழர்கள் என எல்லோரும் அழைத்து அவர்களது ஆற்றாமையை சோகத்தை வெளிப்படுத்திக்கொண்டேயிருந்தார்கள்.பால்ய கதைகளை, ஒவ்வொருவரும் அவருக்கு தெரிந்த சங்கரைப் பற்றி பேசிக்கோண்டேயிருந்தனர். யாராலும் நம்ப முடியாதது நடந்து, முடிந்தும் விட்டது. இப்பிரபஞ்சத்தின் பதில் தெரியா எனது கேள்விகளில் சங்கரின் மரணமும் இனி சேர்ந்து கொள்ளும்.
நான் அடிக்கடி அவனைப்பற்றி சொல்வதுண்டு.."இவன் கூட இருந்தா கஷ்டமே தெரியாது" என்று. இப்போது எல்லாம் தலைகீழாக.
உன்னை நியாபகப்படுத்த ஆயிரம் நினைவுகள் உண்டு நண்பா, மறக்க ஒன்றுமேயில்லை என்பதுதான் இனிவரும் வாழ்வு பூராவும் நான் சுமந்து அலையப்போகிறத் துயரம்.
சங்கரது துணைவி ராதாவுக்கும் , மகள் ஷிவானிக்கும் இந்த இயற்கை எல்லாத் தைரியத்தையும் அளிக்கட்டும்.
போ நண்பா. பிறிதொரு நாளில் மறுபடியும் சந்திப்போம்.
பால்ய நண்பன்
வேலு.
அவனது நினைவுகளால் உழலும் மனதுடன் நண்பன் சுடலைமுத்து . வேலு இனி எந்த லோகத்தலடா அவன பார்ப்பேன்.
ReplyDelete😭
ReplyDeleteRIP
ReplyDeleteI don't know the health history of Mr shankr.. but it's too early.. seems to be very nice guy with good heart.. may be God also loved him lot.. went early to rest in his feet..
ReplyDeleteOHM SANTHI......
ReplyDeleteஎனது வகுப்பு தோழன் நண்பன் சங்கர் அவர்களின் இறப்பு செய்தி கேட்டு மிகவும் மனம் வருந்தினேன் ... வேலு நீங்க சொன்ன சில ஞாபகங்கள் கூட என்னிடம் சில சங்கரைப் பற்றிய ஞாபகங்கள் உண்டு ..... பாரபட்சம் பார்க்காத மனிதர்களில் சங்கரும் ஒருவர் ..
ReplyDelete