Posts

Showing posts from January, 2015

சப்பைமூக்குப் பெண்

Image
தினமும் காததூரம் நடந்த பின்புதான் அந்த பேரூந்து நிறுத்தம் வருகிறது வலமும் இடமும் உயர்ந்த கட்டிடங்கள் சூழ பனியில் தனித்திருக்கும் அந்த இருக்கையில் அமர்ந்துகொண்டு காண்கையில் எதிரில் நின்றுகொண்டிருக்கும் அந்த சப்பைமூக்குப்பெண் மிக அழகானவளாக காட்சியளிக்கிறாள் நான் ஏற முடியாத ஒரு பேரூந்து வருகிறது நிறுத்தத்திற்கு இருவர் இறங்க ஏனையோர் ஏற பேரூந்து கிளம்புகிறது இப்பொழுதும் அந்த சப்பைமூக்குப்பெண் மிக அழகானவளாக காட்சியளிக்கிறாள் அருகில் ஒருவன் புகைக்கிறான் பயணப்பலகையை படித்துக் கொண்டு ஒருவன் படபடக்கிறான் குளித்த சிகையினை சிக்கெடுத்துக் கொண்டு பெண்கள் சிலரும் என அந்த நகரத்து பேரூந்து நிறுத்தம் மனிதர்களால் நிறைகிறது இப்பொழுதும் பேரூந்து கிடைக்காத அந்த சப்பைமூக்குப் பெண் மிக அழகானவளாக காட்சியளிக்கிறாள் வந்தவர்கள் எல்லோரும் ஏதோ ஒரு பேரூந்தில் பயணப்பட்டுவிட நானும் சப்பைமூக்குப்பெண்ணும் பேரூந்து நிறுத்தமுமாக மட்டும் நின்றுகொண்டிருக்கிறோம் குளிரில் கைகள் விறைத்து மரக்கும்பொழுதில் சப்பைமூக்குப் பெண் பேசத் தொடங்குகிறாள் " அண்ணா! நீங்கள் ...

மூத்திர நாற்றம்

Image
மூத்திர அவசரத்திலும்  முழுதாய் ஒரு கவிதை  பிரசவ வழியில்  பிதுங்கும் குழந்தைபோல்  மூத்திரமடக்குதல்  மூளையைப் பிதுக்குமென்பதால்  மூத்திரத்தை கோப்பையிலும்  முக்கிநின்ற கவிதையை  முளைத்த வலைப்பதிவிலும்  பெய்து வைத்தேன்  மூத்திரநாற்றத்துக்கு  மூக்குபிடித்த சிலர்  முக்கி ய கவிதைக்கும்  மூக்கு பிடித்தனர்  மூத்திர வாசத்திற்கு  ஜவ்வாது பூச  பிடிக்காத காரணத்தால்  கவிதைக்கும்  கலப்படம் செய்யவில்லை  யாரும் சீண்டாவிடினும்  கவிதையின் நாற்றம்  காற்றின்வழி எல்லோரின்  கன்னம் சீண்டும்  காதுகள் தோண்டும்  பிடிக்கவிடினும்  தவிர்க்க இயலா தெருவோர  மூத்திர நாற்றம் போல!! 

அட்மிஷன்

Image
ஜன்னல்வழி வேப்பமரத்தில் ஜனித்து வசிக்கும் காகமும் அணிலும் அவளுக்கு நண்பர்கள் சக வயது நண்பர்களோடு சண்டையிடும் அவள் சண்டையிட்டதேயில்லை ஜன்னல்வழி நண்பர்களோடு காலையில் காகமும் அதன்பிறகு அணிலும் அனுதினமும் ஆஜராகி விளையாடுவார்கள் அவளோடு மட்டும் "காகத்திடம் சாப்பிட்டாயா" என சாதம் வைப்பதுவும் அணிலுக்கு காக்கா கடி தின்பண்டம் கொடுப்பதுவுமெனத் தொடங்கி இப்போது அவளுக்காய் காத்திருக்கும் அவர்களை ஜன்னலில் பார்க்கலாம் தினப்பொழுதுகளில் அன்று பள்ளி பற்றி பேசுகையில் சொன்னாள் "அணிலும், காகமும் படிக்கிற ஸ்கூலுக்குத்தான் போவேன், இல்லேன்னா போகமாட்டேன்" என அணிலுக்கும், காகத்துக்கும் அட்மிஷன் கேக்கவேண்டும் நான் அவளுக்கு புரியாத இந்த மட உலகத்தில்.

நடமாடும் கடவுள்கள்

Image
"ஏன் என்ன விட்டுட்டுப் போன" என ஒவ்வொரு அழைப்பிலும் காதுக்குள்ளோ கதவருகில் ஒளிந்துகொண்டோ ஒலிக்கிறது அந்தப் பிஞ்சுக்குரல் "ஒண்ணுமில்ல அவ இன்னைக்குப்பூராம் இப்படித்தான் அழுதுகிட்டேயிருக்கா என உண்மைமறைத்து சமாதானம் சொல்லுகிறது" பெரியகுரல் பிரிவாற்றாமையில் பெரும்பள்ளத்தில் பெருங்குரல் வீழாதிருக்கவேண்டி கடக்கின்ற சகமனிதரை தினந்தினம் பார்க்கையில் இவன் இங்கே தனித்திருப்பானோ என முகம்படிக்க எத்தனிக்கிறது பெருங்குரல் உயிர்விட்டு உடல்கள் மட்டும் உழைக்கிற பெருங்குரல் வசிக்கின்ற நகரமெங்கும் சோகத்தில் நனைகின்றன இரவில் அலைபேசிகள் காதலும்,காமமும் கனிவும் அன்பும் அத்தனையும் கடத்தி, கடத்தி அயர்ந்துபோகிறது இணையம்கூட இங்கு இரவில் குளிர்ந்த இரவு கடந்து கொதிக்கும் பகலில் நடக்கையில் கால்களில் படுகின்றன உதிரமாய் ஒழுகிய பெரும் கண்ணீரின் கறைகள் நகரமெங்கும் திட்டுத்திட்டாய் அவளுக்காய், அவர்களுக்காய் வாழ்தலை அடகுவைத்து வாழ்கின்ற நடமாடும் கடவுள்களால்தான் நகர்கிறது இந்த அன்னியதேசம்.

தனித்த இரவு

Image
ஒரு மசூதிக்குள் தேவாலயத்துக்குள் கோவிலுக்குள் அன்னையின் கால்களில் வீழ்ந்து கிடக்கையில் வாய்க்கின்ற கனத்த அமைதிதான் வியாபித்திருக்கிறது இன்றைய அறையில் நிசப்தம் நீண்ட நெடிய சப்தத்தினை தொடர்ந்து எழுப்பிக் கொண்டே நகர்கிறது ஒரு நள்ளிரவு குடுகுடுப்பைக்காரனைப் போல சிவத்த தோல்களுடைய சிரிக்க மறந்திருந்த - சில சிந்தனை மனிதர்களுடன் உணவருந்தி வந்தது உடல் வயிறு நிறைந்து மனம் பசிக்கும் மறக்கமுடியா மற்றுமொரு இரவு இது அறைக்குள் உடலும் ஆகாயத்தில் மனமும் இறக்க உறங்குவேன் இந்த நீண்ட தனித்த இரவில்.

அவ்வளவுக்கும் பிறகு :-

Image
முன்சென்ற சீருந்து உன்னை முன்னிருத்தியதில்  ஆச்சர்யமில்லை பின்பக்கம் காரணமாயிருக்கலாம் சீருந்துகளை பெரும்பாலும் ஆண்கள்தான் வடிவமைக்கக் கூடும் அமைப்புகள் பெண்வாடை பேசுவதால் பள்ளங்களற்ற சாலையில் படபடவென ஓடுகிறது பழுதடைந்திருக்கும்  என்பதாலோ என்னவோ உன்னை போலவே எவ்வளவு முயன்றாலும் சீருந்துகளை முந்துவது சீக்கிரம் செயலாவதில்லை அவைகளும் அவற்றை விரும்புவதுமில்லை இங்கேயும் உன்போலவே   வேகமாகப் பின்தொடருகையில் எதிர்பாரத்தருணத்தில் இடப்புறமோ, வலப்புறமோ சைகையின்றித் திரும்பி தொடரமுடியா வேகத்தில் தொலையும் அனைத்து சீருந்துகளுக்கும் உனக்கும் தொடர்பில்லை என்று என்னால் எவ்வாறு சொல்லமுடியும்? அவ்வளவுக்கும் பிறகு. 

கருவியாகும் நான்! :-

Image
திறமையாக எடுக்கப்பட்ட  புகைப்படத்தில் கிடைக்கிறது  என்வழி எழுதப்படும்  கவிதைக்கான முதல்வரி  எண்ணங்களை திறக்கின்ற  எந்தவொரு கவிதையும்  எளிதாக விதைக்கிறது  இரெண்டாம் வரி  காதுகளிலும் கண்கள் வழியும்  நுழைகின்ற கதைகள்  மூன்றாம் வரியினை பெரும்   முயற்சிகளின்றி  முன்னிருத்துகின்றன  செவ்விதல் வழி  செப்பி  செவிமடுத்த உரையாடல்களோடு  உறக்கத்தில் உழலுகையில் நான்காம்வரி நசிகிறது காதலும், கலவியும்  இன்னபிற  இவ்வாழ்க்கை இத்தியாதிகளும்  உலுப்பியெடுப்பதில் உதிர்கின்றன வரிகள்  உன்னத கவிதைகளாய் கவிதைக்காரனுக்கு  வாழ்க்கைதோறும் கிடைக்கின்றன   வரிகள் வஞ்சகமின்றி   குடிகாரனுக்கு  குடிக்கக்கிடைக்கும்  காரணங்கள் போல்  என் வழி பிறந்து  எங்கெங்கோ போகிற  வரிகள் யாருடையவை?  மொழி மறந்த - வந்த  வழி மறந்த பெரும்பான்மை  வாசகர்களுள்  யாருக்காய்...

ரவா தோசை :-

Image
இன்னைக்கு என்ன டிபன் பண்ண என்ற கடினக் கேள்வியோடு தான் ஆரம்பிக்கும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளின் காலைப் பொழுதுகள் பொங்கலை நாளைக்கு ஒதுக்கி பொடிதோசை செய்வதென்று நான், மனைவி, மகள், அம்மா,சகோதரர் என ஐவர்குழு ஒப்புதலளித்து செயல்கள் செவ்வனே தொடங்கின இடையில் பொடி இருப்பினை கருதி பொடிதோசை ரவா தோசையானதில் அடியேனுக்கு வாய்த்தது அவசரகதியில் கடைக்கு பயணிக்கும் கஷ்டம் மைதா வாங்க!! கொஞ்சம் உடைத்த மிளகும், நனைத்த ரவையும், மைதாவும் சேர முந்திரியும், காரட்டும் மிதக்க வந்தது ரவாதோசை பி.கு. பார்க்க அழகாக!! குளித்து பசித்த கதியில் விழுங்க ஆரம்பித்திருந்த பொழுதில் எப்படியிருக்கு தோசை?? தோசையை விட வேகமாக விழுந்தது கேள்வி என் தட்டில் மட்டும் ம்ம்ம். நல்லாயிருக்கு என்ற முடித்தவுடன் சட்னி என்று அம்மா சொன்னதில் என்ன புரிந்ததோ ரவா தோசை அடை தோசை கணத்தில் வரத்தொடங்கியிருந்தது.!! 

கிளரிகள் :-

Image
மனதின் ஆழத்தில் புதைந்திருக்கும் உனது நினைவு மறுபடி மறுபடி கிளறப்படுகிறது ஏதேனும் ஒரு கிளறி வாயிலாக ஒரு போதும் கிளறி தேடி அகப்படுவதில்லை நான் கிளரியென்றறியாது அகப்படுகையில் கொஞ்சம் இன்பமும் கொடுமையான பீறிடும் துன்பமும் வாய்க்கின்றன கிளரிகளிடம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் நான் கிளரிகள் எத்தகையன எவ்வடிவுடையான எத்திசையிலிருந்து வருவன யார் யார் எய்வர் என்கிற பிரஞ்கையின்றி எங்கனம் தவிர்ப்பது? கண்ணிவெடிகளை கண்டறிய கருவிகள் இருக்கலாம் கன்னிகளால் வெடிக்கும் வெடிகளை கண்டறிய கருவிகள் இருக்கிறதா என்ன?! அகப்பட்டு அழல்வதுதான் விதியென்கையில்.