சப்பைமூக்குப் பெண்




தினமும் காததூரம்
நடந்த பின்புதான்
அந்த பேரூந்து நிறுத்தம்
வருகிறது

வலமும் இடமும்
உயர்ந்த கட்டிடங்கள் சூழ
பனியில் தனித்திருக்கும்
அந்த இருக்கையில்
அமர்ந்துகொண்டு காண்கையில்
எதிரில் நின்றுகொண்டிருக்கும்
அந்த சப்பைமூக்குப்பெண்
மிக அழகானவளாக
காட்சியளிக்கிறாள்

நான் ஏற முடியாத
ஒரு பேரூந்து வருகிறது
நிறுத்தத்திற்கு
இருவர் இறங்க
ஏனையோர் ஏற
பேரூந்து கிளம்புகிறது
இப்பொழுதும்
அந்த சப்பைமூக்குப்பெண்
மிக அழகானவளாக
காட்சியளிக்கிறாள்

அருகில் ஒருவன்
புகைக்கிறான்
பயணப்பலகையை
படித்துக் கொண்டு ஒருவன்
படபடக்கிறான்
குளித்த சிகையினை
சிக்கெடுத்துக் கொண்டு
பெண்கள் சிலரும் என
அந்த நகரத்து பேரூந்து நிறுத்தம்
மனிதர்களால் நிறைகிறது
இப்பொழுதும்
பேரூந்து கிடைக்காத
அந்த சப்பைமூக்குப் பெண்
மிக அழகானவளாக
காட்சியளிக்கிறாள்

வந்தவர்கள் எல்லோரும்
ஏதோ ஒரு பேரூந்தில்
பயணப்பட்டுவிட
நானும் சப்பைமூக்குப்பெண்ணும்
பேரூந்து நிறுத்தமுமாக மட்டும்
நின்றுகொண்டிருக்கிறோம்

குளிரில் கைகள்
விறைத்து மரக்கும்பொழுதில்
சப்பைமூக்குப் பெண்
பேசத் தொடங்குகிறாள்
" அண்ணா! நீங்கள் எந்த பேரூந்துக்காக
 காத்திருக்கிறீர்கள் என "

இப்போது
அந்த சப்பைமூக்குப்பெண்
மிகச் சுமாரானவளாகவும்,
மிகுந்த அழகானவளாகவும்
மாறி மாறி
காட்சியளிக்கிறாள்!. 

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔