கருவியாகும் நான்! :-



திறமையாக எடுக்கப்பட்ட 
புகைப்படத்தில் கிடைக்கிறது 
என்வழி எழுதப்படும் 
கவிதைக்கான முதல்வரி 

எண்ணங்களை திறக்கின்ற 
எந்தவொரு கவிதையும் 
எளிதாக விதைக்கிறது 
இரெண்டாம் வரி 

காதுகளிலும்
கண்கள் வழியும் 
நுழைகின்ற கதைகள் 
மூன்றாம் வரியினை பெரும்  
முயற்சிகளின்றி 
முன்னிருத்துகின்றன 

செவ்விதல் வழி 
செப்பி 
செவிமடுத்த உரையாடல்களோடு 
உறக்கத்தில் உழலுகையில்
நான்காம்வரி நசிகிறது

காதலும், கலவியும் 
இன்னபிற 
இவ்வாழ்க்கை இத்தியாதிகளும் 
உலுப்பியெடுப்பதில்
உதிர்கின்றன வரிகள் 
உன்னத கவிதைகளாய்
கவிதைக்காரனுக்கு 
வாழ்க்கைதோறும் கிடைக்கின்றன  
வரிகள் வஞ்சகமின்றி  
குடிகாரனுக்கு 
குடிக்கக்கிடைக்கும் 
காரணங்கள் போல் 

என் வழி பிறந்து 
எங்கெங்கோ போகிற 
வரிகள் யாருடையவை? 

மொழி மறந்த - வந்த 
வழி மறந்த பெரும்பான்மை 
வாசகர்களுள் 
யாருக்காய்  எழுதிக் குவிக்கிறது
காலம் எனை 
கருவி போல் 
கையாண்டு? 
இனிமேல் காலத்தையும் 
வாசிக்க கற்றுக்கொள்ளவேண்டும் 
கருவியாகும் நான்!.

Comments

Post a Comment

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

மயல்