தனித்த இரவு
ஒரு மசூதிக்குள்
தேவாலயத்துக்குள்
கோவிலுக்குள்
அன்னையின் கால்களில்
வீழ்ந்து கிடக்கையில்
வாய்க்கின்ற
கனத்த அமைதிதான்
வியாபித்திருக்கிறது
இன்றைய அறையில்
நிசப்தம்
நீண்ட நெடிய
சப்தத்தினை தொடர்ந்து
எழுப்பிக் கொண்டே நகர்கிறது
ஒரு நள்ளிரவு
குடுகுடுப்பைக்காரனைப் போல
சிவத்த தோல்களுடைய
சிரிக்க மறந்திருந்த - சில
சிந்தனை மனிதர்களுடன்
உணவருந்தி வந்தது உடல்
வயிறு நிறைந்து
மனம் பசிக்கும்
மறக்கமுடியா மற்றுமொரு
இரவு இது
அறைக்குள் உடலும்
ஆகாயத்தில் மனமும்
இறக்க உறங்குவேன்
இந்த நீண்ட
தனித்த இரவில்.
Comments
Post a Comment