நடமாடும் கடவுள்கள்
"ஏன் என்ன விட்டுட்டுப் போன"
என ஒவ்வொரு அழைப்பிலும்
காதுக்குள்ளோ
கதவருகில் ஒளிந்துகொண்டோ
ஒலிக்கிறது
அந்தப் பிஞ்சுக்குரல்
"ஒண்ணுமில்ல
அவ இன்னைக்குப்பூராம்
இப்படித்தான் அழுதுகிட்டேயிருக்கா
என உண்மைமறைத்து
சமாதானம் சொல்லுகிறது"
பெரியகுரல்
பிரிவாற்றாமையில்
பெரும்பள்ளத்தில்
பெருங்குரல்
வீழாதிருக்கவேண்டி
கடக்கின்ற சகமனிதரை
தினந்தினம் பார்க்கையில்
இவன் இங்கே
தனித்திருப்பானோ என
முகம்படிக்க எத்தனிக்கிறது
பெருங்குரல்
உயிர்விட்டு
உடல்கள் மட்டும் உழைக்கிற
பெருங்குரல் வசிக்கின்ற
நகரமெங்கும்
சோகத்தில் நனைகின்றன
இரவில் அலைபேசிகள்
காதலும்,காமமும்
கனிவும் அன்பும்
அத்தனையும் கடத்தி, கடத்தி
அயர்ந்துபோகிறது
இணையம்கூட இங்கு இரவில்
குளிர்ந்த இரவு கடந்து
கொதிக்கும் பகலில்
நடக்கையில்
கால்களில் படுகின்றன
உதிரமாய் ஒழுகிய பெரும்
கண்ணீரின் கறைகள்
நகரமெங்கும் திட்டுத்திட்டாய்
அவளுக்காய், அவர்களுக்காய்
வாழ்தலை அடகுவைத்து
வாழ்கின்ற
நடமாடும் கடவுள்களால்தான்
நகர்கிறது இந்த
அன்னியதேசம்.
Comments
Post a Comment