அட்மிஷன்
ஜன்னல்வழி
வேப்பமரத்தில்
ஜனித்து வசிக்கும்
காகமும் அணிலும்
அவளுக்கு நண்பர்கள்
சக வயது நண்பர்களோடு
சண்டையிடும் அவள்
சண்டையிட்டதேயில்லை
ஜன்னல்வழி நண்பர்களோடு
காலையில் காகமும்
அதன்பிறகு அணிலும்
அனுதினமும்
ஆஜராகி விளையாடுவார்கள்
அவளோடு மட்டும்
"காகத்திடம்
சாப்பிட்டாயா" என
சாதம் வைப்பதுவும்
அணிலுக்கு காக்கா கடி
தின்பண்டம் கொடுப்பதுவுமெனத் தொடங்கி
இப்போது
அவளுக்காய் காத்திருக்கும்
அவர்களை ஜன்னலில்
பார்க்கலாம் தினப்பொழுதுகளில்
அன்று பள்ளி பற்றி
பேசுகையில் சொன்னாள்
"அணிலும், காகமும்
படிக்கிற ஸ்கூலுக்குத்தான்
போவேன், இல்லேன்னா போகமாட்டேன்" என
அணிலுக்கும், காகத்துக்கும்
அட்மிஷன் கேக்கவேண்டும் நான்
அவளுக்கு புரியாத
இந்த மட உலகத்தில்.
Comments
Post a Comment