கவிதைக்கலைப்பு
தொழுகைக்கான அழைப்புமணி
ஒலிக்கையில்
தொலைக்காட்சியில்
இந்துத்துவா தலைவரெனப்படும்
ஒருவர் ஒலிப்பெருக்கி முன்நின்று
ஒலியெழுப்பிக் கொண்டிருக்கையில்
கானல் நீராய்
கண்ணில் தெரிந்து
கடந்து போனதது
சாலையோரப் பூங்காவில்
தண்ணீர் தெரிப்பதற்கு நடுவே
விளையாடிக் கொண்டிருந்த
இரு சிறார்களுக்கிடையேயும்
இமைப்பதற்குள்
இலகுவாய் மறைந்து போனதது
பத்தொன்பதாம் மாடி
பணியறையில் இருந்து
பள்ளம் பார்க்கையில்
கண்ணில் அகப்பட்டு
கையில் சிக்காது
கரைந்து போனதது
இரவின் இருளில்
இருளின் ஒளியில்
ஓரமாய் ஒளிந்து
உயரமாய் உதித்து
எழுந்து உட்காருகையில்
ஏங்கவைத்து
மறைந்து போனதது
உதிக்கின்ற உனக்கு
உருவம் கொடுக்காத பொழுதுகள்
பசிக்கும் குழந்தைக்குத்தர
பால் சுரக்கா
தாயின் வலிக்குச் சமம்
அலுவல் அவசரத்தில்
அலுப்பு சோம்பல்களில்
ஆயிரம் காரணங்கள் சொல்லி
தினம் உனைத்
தொலைக்கிற நான்
கருக்கலைப்பு போல்
கவிதைக்கலைப்புச் செய்கின்ற
பாவங்கள் குவிக்கும்
பரிதாபக் கவிஞன்.
Comments
Post a Comment