அவள்களுக்கு அவன்களாய் மட்டுமிரு
அவரை மணந்து கொள்ளும் முன்
எத்தனை அவள்களிடம் பிடித்திருக்கிறதா
எனக் கேட்டார்கள்
தெரியவில்லை
குருட்டுபூனை விட்டத்தில்
பாய்வதுபோல்
முரட்டு மனிதர்களோடு
முந்தானை கோர்த்தனர்
பிடித்தல் குறித்தும்
பிடிக்காமைகள் குறித்தும்
எத்தனை அவள்களுக்கு
இன்று வரை
எவ்வளவு தெரியும்?!
தெரியவில்லை
வாழ்வு குறித்தும்
வாழ்தல் குறித்தும்
வரிந்துகட்டி நியாயம் பேசும்
இன்றைய நாம்
அன்றைய அவள்களின்
வாழ்க்கை வழி
ஒரு இன்பச் சுற்றுலாவாவது
போய்வரலாம்
வ(ழி)லியுணர்கையில்
ஞானம் கிட்டக்கூடும்!
சாணம் தரைமொழுகி
சனத்துக்கு வடித்து கொட்டி
கரிதொட்டு
கரண்டியெல்லாம் விலக்கி
இடைவலித்தும்
இன்பம் உய்வித்த
இசம் எனக்கான ஒரு அவள்
தொட்டிலில் ஒருபிள்ளை
தோளிலே ஒருபிள்ளை
அங்கமெங்கும் தொங்கித்திரியும்
அடுத்தடுத்த பிள்ளைகளென
சிதறிய பருக்கைகளை
சிரித்து உண்ணும்
சிறியவர் போல்
அலுப்பில் தோய்ந்தே
அண்ணம் உண்டவள்
வாழ்நாளெல்லாம்
பெண்மை விரும்பும்
உண்மைகள் பறித்து
கண்மை கரைய
அவள் கரைந்த பொழுதுகள்
நல் கணவனாக்கின
கொஞ்சமேனும் என்னை
புகுத்திய அறிவு
புலப்படவில்லையெனினும்
அகத்தின் அறிவு
அவ்வளவு சுத்தம்
அகப்படாது போவது
அவன்களின் குத்தம்
பிதுக்கித் தள்ளிப்
பிறப்பித்த போதும்
ஒதுக்கித் தள்ளா
உயரத்தில் அவள்கள்
சுற்றம் பேணி
உற்றம் பேணி
உள்ளளவும்
உதவியாயிருக்கும்
ஒன்றே செய்யும்
செப்பனிட்டு
செய்துகொடுத்த
கருவறை வீற்றிருக்கும்
கடவுள்கள் போலன்றி
கருவறையே வாய்த்திருக்கும்
கடவுள்கள் அவள்களை
வழிபட மறப்பினும்
வலியுறச் செய்யா
வாழ்வு நல்க
நல் மகனாயிரு
நலம் பேணும் சகோதரனாயிரு
நாளும் நல்ல கணவனாயிரு
பொறுப்புடை தகப்பனாயிறு
பொறையுடை தாத்தனாயிறு
புன்னகை நண்பனாயிரு
என்றும் மாறும்
இப்புவியுலகில்
அவள்களுக்கு அருகில்
என்றும் மாறா - உண்மை
அவன்களாய் மட்டுமிரு.
Comments
Post a Comment