புரட்டியெடுக்கும் அவளது நினைவு
நேற்று முதல்
என்னை புரட்டியெடுக்கும்
அவளது நினைவு
அப்படித்தானிருக்கிறது
இருதயத்தில் மெல்லென
வழுக்கிக்கொண்டு இறங்கும்
ஒரு கூரிய கத்தியைப்போல
கொடும்பசியில்
வயிற்றினை பீடித்திருக்கும்
பசியுணர்வுபோல
தலைக்குள் மட்டும்
ஏதோ அமிலமழை
பொழிதலைப் போல
நேற்று முதல்
என்னை புரட்டியெடுக்கும்
அவளது நினைவு
அப்படித்தானிருக்கிறது
ஆவிபறக்க
கொதிக்கின்ற நீரில்
அமிழ்ந்து விட்டாற்ப் போல
ஆகாயத்தின்
மேலிருந்து வீழ்கிற
அருவியின் மேலேறிக்
குதிக்கிறாற்ப் போல
நேற்று முதல்
என்னை புரட்டியெடுக்கும்
அவளது நினைவு
அப்படித்தானிருக்கிறது
தேகம் களைத்து
தேடியெடுத்து
எண்ணைத்
தொடர்புகொண்டு
என்னைச் சொன்னேன்
அவளிடம்
நான் சாதாரணமானவள்
எனக்குப் போய்
ஏன் இவ்வளவு
யோசிக்கிறாய் என்றாள்
ஏன் பெண்களுலகம்
எப்போதுமே
விசித்திரமாயிருக்கிறது??!!
Comments
Post a Comment