வாழ்வைப் புணர்தல்
ஒரு ஊழிக்காலத்தில்
இருளின் ஒளியில்
அவளின் அருகாமையில்அவனுக்கும்
அவனின் அருகாமையில் அவளுக்கும்
தொடங்கியோ, தொடர்ந்தோ
இன்னும் தொக்கிநிற்கும்
உணர்வது
கனவுகள் மேல் மிதக்க
கன்னங்கள் தழுவிக் கிடக்க
ஒருவராய் உயிர்த்துக் கிடந்த
கோடி நொடிகள்
மட்டும் கொண்ட
கொண்டாட்ட வாழ்தலது
அன்று பகல் இருண்டும்
இரவு ஒளிர்ந்தும்
புரிதல் விளக்கி
புதியவைகள் சொல்லித்தந்து
விலங்குகள் பல உடைத்து
விவரம் புரிய வைத்தன
வாழ்தல் குறித்து
ஒருவரான இருவருக்கும்
உடலைப் புணர்தல்
உலகமறியும்
அறிவைப் புணர்தல்
அறிவீரோ? என
வினாக்கள் எழும்பி
விடையும் கிடைத்து
அரியவகைப் புணர்தல்
அத்தனையும் நிகழ்ந்தது
கருவிழிகள் கலந்தபோது விழைந்த
கதிரவன் ஒளிதனில்
விலங்கு இச்சையில்
உயர் மனிதம் புகுத்தி
நிகழ்ந்த நிகழ்வில்
அவள், அவன் கடந்து
அதுவாக மற்றும்
உணர்ந்திருந்தார்கள்
உடல்கள் தனித்து
உள்ளங்கள் புணர்தலும்
உள்ளங்கள் தனித்து
உடல்கள் புணர்தலும்
பெரும்பாலும் நிகழும் -
இப்பீடை உலகில்
யாருக்கு வாய்க்கும்
அறிவோடு புணரும்
இவ்வரிய நிமித்தம்
நிமித்தம் முடிந்து
நிமிடங்கள் கடக்கையில்
உடலுக்கு உடையுடுத்தி
மனங்களுக்கு ஏதேதோயுடுத்தி
அசிங்கமாகி
ஆயத்தமாயினர் புறப்பட
மறுபடியும்
இரவு இருளாகவும்
பகல் ஒளியாகவும்
புலர்ந்த பொழுதிலிருந்து
புணரத்தொடங்கியிருந்தனர்
அவர்கள் சுயவாழ்வதனை
அனைவருக்காகவும்
அர்த்தமின்றி.
Comments
Post a Comment