உரத்தத்தோல் பாரதிகள்
வெடித்துப் பொங்கும்
எரிமலைக் குழம்பினையும்
ஆவியாக்கவல்ல வெப்பம்
அறிவற்ற ஆணையின்
அடிபணிதலில்
அடிபடுகையில் வாய்க்கும்
நாய்க்கும்!
உதாசீனத்தின் வெப்பும்
உள்ளம் வெறுக்க
அடங்குதலின் வெப்பும்
ஒருசேருகையில்
பொறுப்புகள் கண்முன் வருகின்
பிழைக்கத்தெரிந்த
பிணம்போன்றது வாழ்வு!
மோதிமிதித்து விட
முகத்தில் உமிழ்ந்துவிட
முடியா வாழ்வில்
எச்சில் பூசிக்கொண்டு
எருமையினும் மேலாய் வாழ்கிற
உரத்தத்தோல் பாரதிகள்
உயிர்விடுவது நலம்!
அங்கு ஒரு வணக்கம்
இங்கு ஒரு வந்தனம்
என செயற்கையாய்க்
கூறிக் கூறி
குனிந்த முதுகெலும்பில்
குடித்தனம் நடத்துவதற்க்கு
கூத்தியாள் வேலை சுகம்!
காரியத்திற்கு அண்ணன் என்பதுவும்
கடந்ததுவும் அடடே என்பதுவும்
கரிய சொறிய நரிகளின்
கள்ளப் புத்தி
கைவந்தப் புத்தி!
மன்னித்தல் பொருட்டும்
மனிதம் பொருட்டும்
மேற்சொன்ன கவிதை மறத்தல்
கயமை மறத்தல்
மேதகு மனம் கொண்ட
கவிஞன் மனம்
கலையின் குணம்.!
கலையின் குணம்.!
Comments
Post a Comment