அன்பு மகளுக்கு
எனைப்போலவே
ஏதாவதொன்றை
நீ தினம் செய்வதாய்
அவள் சொல்லிக்கொண்டே
இருக்கிறாள்
உனைப்போலவே
தினந்தோறும்
நான் செய்யும் ஏதாவதை
உன்னிடத்திலும் - ஏன்
என்னிடத்திலுமே
சொல்ல யாருமில்லை
நீ என்றாவது ஒருநாள்
வாசிப்பாய் என
எழுதப்படும் இக்கவிதையைத்தவிர
உன்போல முகந்தாங்கிய
குழந்தையையும்
குறும்புகள் புரிகின்ற
குழந்தையையும்
எங்காவது
கடந்து கொண்டே
இருக்கிறேன்
எனது கால்கள் வேகமாக
நகருகின்றன
உன்னை நோக்கி
நம் குறித்த
இரக்கமின்றி
மெதுவாக நகரும்
காலம் போலன்றி
ஒரு பழைய
புகைப்படம் பார்த்து
நீ அழுவதாகக்
கூறுகையில்
வாழ்வையும்
வாழ்தலையும்
பழிக்கிறேன் நான்
உனக்கும் சேர்த்து
நாம் தள்ளியிருப்பதாக
உலகம் நினைத்துக்கொள்ளட்டும்
மீண்டும் உடற் பிரிவின்றி
இணைந்திருக்க
உள்ளம் இணைந்து
திரிவதாய்
நாம் நினைத்துக் கொள்வோம்.
Comments
Post a Comment