சைக்கிள் - என் இயந்திரத் தோழன்
இன்று உலக சைக்கிள் தினம் என்று முகப்புத்தகத்தில் விழித்தபோது சொல்லிற்று. சைக்கிள் குறித்து ஒரு கவிதை எழுதவேண்டுமென வைத்திருக்கும் புகைப்படங்களிலுள்ள சில சைக்கிள் படங்கள் நியாபகப்படுத்திக் கொண்டேயிருக்கும். கவிதை என்ற சுருக்கத்தில் அடைத்துவிடமுடியாப் பெரும் வரலாறென்பதால் அதை இப்படி கட்டுரை வடிவில் எழுதலாம் என முடிவு செய்தேன்.
சைக்கிள் என் வாழ்வில் பயணித்த எல்லா மனிதர்களைப் போலேயும் எனக்குள், என்னுடன் பயணித்திருக்கிறது, நானும் சைக்கிளை ஓட்டிய காலங்களோடும், சைக்கிளின் நினைவுகளை ஓட்டி வாழும் காலங்களோடும்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
எனக்கும் சைக்கிளுக்குமான உறவு எனது சிறு பிள்ளை பிராயத்திலிருந்தே தொடக்கம். கிராமத்து பிள்ளைகளுக்கு சிறுவயதில் சொந்தமாக ஓர் சைக்கிளும், சுயமாக யாருடைய தயவின்றியும் அதை ஓட்டுவதும் ஒரு பெருங்கனவு. அந்தக் கனவுகள் துரத்திய காலங்கள் எனக்குமுண்டு.
எனது சுத்தமல்லி கிராமத்தில் எனக்கு தெரிந்து மூன்று சைக்கிள் கடைகள் உண்டு. ஓன்று சைக்கிள்கடை சங்கர் அண்ணனுடையது, இரெண்டாவது மேலத்தெரு மாரியம்மன் கோவிலுக்கு அருகிலிருந்த மாரியப்பண்ணன் சைக்கிள் கடை , மூன்றாவதாக நான் கொஞ்சம் வளர்ந்த பிறகு பஸ் ஸ்டாண்ட் அருகில் இருந்த பாலன் சைக்கிள் கடை. பின்னாளில் கதிரேசன் கடை ஒன்றும் வந்தது. இந்த முதல் மூன்று கடைகளில் மட்டும்தான் வாடகைக்கு சைக்கிள் எடுத்து ஒட்டியிருக்கிறேன். ஒரு மணி நேரத்திற்கு ஒரு ரூபாய் என்று நினைக்கிறேன். சங்கர் அண்ணன் கடையில் ஒரு சிறிய சைக்கிளும், கொஞ்சம் பெரிய (முக்கால் சைக்கிள்) சைக்கிளும் இருக்கும். மாரியப்பண்ணன் கடையில் இரண்டு மூன்று சைக்கிள் வகையாறாக்கள் உண்டு. மாரியப்பண்ணன் கடை வீட்டிலிருந்து சற்று தொலைவென்பதால் சங்கர் அண்ணன் கடை சைக்கிளை எடுக்க பிரயத்தனப்படுவோம். அதிலும் நான் மிகக் குட்டையாக இருந்த காரணத்தால் எனக்கு அந்த மிகச்சிறிய ஆரஞ்சு நிற சைக்கிள்தான் செட் ஆகும். அதுவும் கொஞ்ச நாள் நான் ஓட்டிப் பழக கேட்பதால், எங்கே உடைத்துவிடுவேனோ என சங்கர் அண்ணன் தர மாட்டார். அப்புறம் எங்க அப்பாவை ரெக்கமண்டேசனுக்கு உயிரெடுத்து கூட்டிசெல்வேன். சனி, ஞாயிற்றுக்கிழமை காலையில் எழுந்து வேகமாகப் போனாலும் யாரேனும் எனக்கு முந்தியே வாடகைக்கு எடுத்து போய் விடுவார்கள். பிறகு அவர்கள் எப்படா வண்டியை விடுவார்கள் என்று வாயினைப் பிளந்து கொண்டு காத்திருக்கவேண்டும். பயபுள்ளைகள் ஐந்தாறு மணிநேரம் எடுத்து, நம் கண்முன்னேயே ஓட்டிச் சாகடிப்பார்கள். நம்ம வடிவேலுவின் " சைக்கிளை விடும்போது வாடகை தர்றேன்" காமெடிதான் நினைவுக்கு வருகிறது. பிறகு அவர்கள் நேரம் முடியும் வரை காத்திருந்து, முன்னதாகச் சொல்லிவைத்து எடுக்க வேண்டும். நோட்டில் நேரம் வைப்பார்கள். பெரும்பாலும் மதிய நேரங்களிலேயே எனக்கு ஓட்டக் கிடைக்கும். அதில் இன்னொரு சிக்கல், மதிய நேரங்களில் பெரும்பாலும் சங்கர் அண்ணன் மில்லுக்கு வேலைக்கு சென்று விடுவார், அப்போது வாடகைக்கு எடுக்க அவரது மனைவி கனகா அக்காவை கன்வின்சு!! செய்ய வேண்டும். ஓட்டத் தெரியாதவர்களுக்கு அவர் வண்டியைத் தரவே மாட்டார். முடிவில் போராடி வாங்கி, எங்கேயாவது உயரமான திண்டு இருக்கிறதா எனப் பார்த்து, அங்குவரை தள்ளிக்கொண்டு போய் பிறகு அழுத்தி ஓட்ட ஆரம்பிப்பேன். கொளுத்தும் வெயிலில் நான் மட்டும் பைத்தியக்காரன் போல் எங்கள் கோவில் பத்து தெருவிலே ஒட்டிய தினங்கள் அப்படியே நியாபகமிருக்கிறது.
எனது அக்காவிற்கு நன்றாக ஓட்டவரும், எனக்கு மூத்தவளாதலால் நன்கு பழகியிருந்தாள். சற்றே பெரிய சைக்கிளை அவளும், சிறியதை நானும் எடுத்துக்கொண்டு ஒட்டியிருக்கிறோம். எங்கள் அப்பா, அம்மா, இரண்டு தம்பிகள் அப்பாவின் சைக்கிளிலும், அக்கா அந்த முக்கால் வண்டியிலும்,நான் ஆரஞ்சு நிற சிற வாடகை வண்டியிலும் என வரிசையாக ஆத்துக்கு குளிக்கச் செல்வோம். எனக்கு டக் அடித்து வண்டியில் ஏறத் தெரியாது, அதனால் உயரமான கல்லில் இருந்து அழுத்தி ஓட்ட ஆரம்பித்து விட்டால், இடையில் எங்கேயும் நிற்கக் கூடாது. சிலசமயம்,எருமைகளோ, மாட்டு வண்டிகளோ எதிர்வரும் பட்சத்தில் வண்டியை நிறுத்தி விட்டு , அடுத்த உயரமான இடம் வரும் வரை உருட்டிக்கொண்டே வருவேன். நம்ம திறமை அப்படி!!. பெரும்பாலும் மதிய நேரங்களில் தெருவில் அவ்வளவு ஜன நடமாட்டமிருக்காது. அந்த நேரத்தையே பழகுவதற்கு தேர்ந்தெடுப்போம். எனது அக்கா, சில ஒட்டத்தெரிந்த, தெரியாத நண்பர்கள் புடை சூழ, இடுப்பை வளைக்காதே, ஹாண்ட் பாரை நேராப் புடி என சத்தப்போட்டுக்கொண்டே அவர்கள் பின்னால் ஓடி வர பழக்குவிப்பார்கள். அப்படியிருந்தும் இடிப்பில் அடிப்பதுவும், மண்டையில் தட்டுவதுமாகிய தண்டனைகளுக்கிடையில் சுவரில் கொண்டு டொம், டொம் என்று விட்டுவிடுவேன். சில சமயங்களில் வீல் லேசாக பெண்டு ஆனதை தனது கழுகுக் கண்களால் சங்கர் அண்ணன் கண்டு பிடித்துவிடுவார். அடுத்து சில நாட்களுக்கு யாரையாவது வாடகைக்கு எடுத்துதரச் சொல்லி அவர் கண்களுக்குத் தெரியாது ஒட்டவேண்டும். யப்பா!! எத்தனை எத்தனைப் போராட்டம்!. சங்கர் அண்ணன் குடும்பமே சைக்கிள் கடை வைத்திருந்தார்கள். பரமன் அண்ணன், சுந்தர் அண்ணன், வெங்கடேஷ் அண்ணன் கடைசியாக சங்கர் அண்ணன் பையன் ராம் குமாரும் பஞ்சர் ஒட்டுவது என சில்லறை வேலைகள் செய்து வந்தான். இப்போது சங்கர் அண்ணன் இல்லை. இறந்து விட்டார் உடலளவில். இன்னும் அவரது இருப்பு அவரது சைக்கிள்கள் வழி உயிர்ப்போடுதான் இருக்கிறது. இருக்கும்.
எனது தாத்தா உலகநாத பிள்ளை ஒரு சைக்கிள் வைத்திருப்பார், எனது அப்பா ஒரு பழைய ராலி (raally) சைக்கிள் வைத்திருப்பார். இருவரும் யாருக்கும் தமது சைக்கிள்களைத் தரமாட்டார்கள். கால்கள் முழுதாக எட்டாத சிறுவயதில், சைக்கிளை ஊட்டுவது பெரிய செய்த மனநிலையத்தரும். சைக்கிளைத் தனது மனைவிபோல, இல்லை மனைவி, பிள்ளைகளை விட பெரிதாக மதித்த, பாதுகாத்த மனிதர்களின் காலம் அது. அவசரத்துக்கு சைக்கிள் கேட்ட பலருக்கு கொடுக்காது பகைத்துக் கொண்ட கதைகள் எல்லாம் உண்டு. ஒருமுறை எனது தந்தையாருக்குத் தெரியாமல் அவரது சைக்கிளை எடுத்துக் கொண்டு போய் குரங்கு பெடல் முயற்சி செய்து தவில் வித்வான் ஈச்சான் வீடுதாண்டி பாலமருகில் விழுந்து பெடலை பெண்டாக்கி ரத்தம் வழிய வீடு வந்து சேர்ந்தேன். அப்பாவுக்குத் தெரியாமல் பெடலை நிமிர்த்தி விடலாம் என்று கல்லால் அடித்ததில் நிலைமை இன்னும் மோசமாயிருந்தது!. பயந்துபோய் இருந்தேன். அப்பா வந்தார் கவனிக்கவில்லை. காலையில் ஆத்துக்கு குளிக்கப் போக சைக்கிளை எடுக்கையில் எனது சேட்டை வெளிச்சத்திற்கு வந்தது. சைக்கிளை பெண்டாக்கியதற்கு எனக்கு பெண்டு விழுந்தது ஒரு பலமற்ற அடியின் வழியாக. அழத் தொடங்கியிருந்தேன். அடியின் வழியை விட அவரது கோபத்தின் ஆக்ரோஷத்தால். பிறகு சங்கர் அண்ணன் சரி செய்து கொடுத்தார் பெடலை. He was our "All in all Alaku Raja!!"!! அதன் பிறகு பல வருடங்களுக்கு அப்பாவின் சைக்கிள் பக்கம் போவதேயில்லை. ஸ்டாண்ட் போட்ட தாத்தாவின் சைக்கிளையும் ஓட்டிகொண்டே இருப்போம் அப்பொழுதெல்லாம்.
எனது சைக்கிள் குறித்த நினைவுகளில், கீழத்தெரு பாயின் பேரன் (பெயர் மறந்து விட்டது, மைதின் என நினைக்கிறேன் ) குறித்தும் சொல்ல வேண்டும். நான் ஒன்பதாம் வகுப்பு பேட்டை, காமராஜர் பள்ளியில் சேர்ந்த பொழுது பஸ் பாஸில் பயணம் பண்ண ஆகும் தாமதம் தவிர்க்க , மைதினுடன் பள்ளி விட்டதும் அவரது கட்டை வண்டியில் தாஜா செய்து நான் பின்னாலிருந்து அழுத்த இருவரும் வீடு வந்து சேரும் நினைவுகளும் அலாதியானது. அவ்வப்போது அப்புவுடன் பயணிப்பதும் உண்டு.
பின்னாளில் எனது அக்காவிற்கு ஒரு சைக்கிளை எனது தாத்தா வாங்கித்தந்தார். ஹெர்குலிஸ் கேப்டன் சைக்கிள். பிறகு எனக்கும் ஒரு சைக்கிள் வாங்கித்தரப்பட்டது நான் பதினோறாம் வகுப்பு படிக்கும்பொழுது ஜங்ஷன், பெருமாள் சைக்கிள் ஸ்டோரிலிருந்து. பஸ்ஸு க்காக காத்திருந்து முன்னதாகவே பயணிக்கும் நண்பர்கள் மத்தியில், சைக்கிளில் சரியாகக் கிளம்பி செல்லும் மிதப்பே தனிதான் பள்ளி நாட்களில். பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கையில் பேட்டையிலிருக்கும் வெற்றி டீயுசனுக்கு நான், மீனா கணேஷ், வெயிலுமுத்து சேர்ந்து போகும் நாட்கள் நினைவை விட்டு நீங்காதவை.
வீட்டில் ஒரு பஞ்சர் பார்க்கும் கிட் காத்தடிக்கும் பம்ப், எல்லாம் இருந்தது. காலையில் எல்லோரும் அவரவர் சைக்கிளை துடைத்து, காத்தடித்து தயார் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தோம். மண்ணெண்ணையும், தேங்காய் எண்ணையையும் கலந்து ஒரு எண்ணெய் வேறு வைத்திருப்போம், சங்கர் அண்ணன் கடையிலிருந்து கிரீஸ் எடுத்து வந்து உபயோகிப்போம் சமயங்களில். பழைய பால்ரஸ் குண்டுகளை சேகரித்து விளையாடுவோம்.
ஹரி, சங்கர், பாபு அப்பு, நான் என ஒரு சைக்கிளில் இருவரென ஆத்தில் சென்று விளையாடிவிட்டு, குளித்து வருவோம். எல்லோருடைய சைக்கிள்களும் அழகானவை, அபூர்வ கதைகளை கொண்டவை, ஆழப் பதிந்தவை, வெயிலுகந்த அம்மன் கோவிலில் சென்று விளையாட, சைக்கிள் தோழர்களாகத் தொற்றிக்கொள்ளும் காலங்கள் இனி கிடைக்குமா தெரியவில்லை. புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் திருநாங்கோயிலுக்கு கும்பலாக சைக்கிளில் செல்வோம். அந்த இரவுகளில் குளத்தங்கரைகளில் பயத்தோடு வேகமாக சைக்கிள் மிதித்த நினைவுகள் ஒரு பேய் படம் பார்ப்பதற்க்குச் சமமான திகிலனுபவம்.
சீட்டில் அமர்ந்து ஓட்டுவது, முன்னிருக்கும் பார் கம்பியில் அமர்ந்து ஓட்டுவது, பின்னாலிருக்கும் கேரியரில் அமர்ந்து ஓட்டுவது, கைகளையும் காற்றில் நீட்டிக்கொண்டு ஓட்டுவது என வித்தைகள் செய்து காட்டிய தினங்கள் நினைவுக்கு வருகின்றன. உச்சிபரம்பு ஏற்றமும், இறக்கமும் இன்றும் சைக்கிள் காலங்களை நினைவூட்டியபடியே இருக்கின்றன . சங்கர் அண்ணன் எங்கள் தெருவிலிருந்து மேலக்கிராமம் சென்ற பிறகு அங்கு சென்றுவாடகைக்கு எடுத்து ஒட்டிய பொழுதுகள் மகிழ்வானவை.
சென்னை வந்த பிறகு, உடல்நலம் கருதி அருகில் சென்று வர ஒரு இரண்டாம் தர சைக்கிளை வாங்கினேன். சிலமாதங்கள் அதனை பயன்படுத்தி விட்டு விற்று விட்டேன். அதுதான் நான் இறுதியாக உபயோகித்த சைக்கிள்.
இப்பொழுது வாடகைக்கு சைக்கிள் விடும் கடைகள் இருப்பதாகத் தெரியவில்லை. ஏன் சைக்கிள் ரிப்பேர் பார்க்கும் கடைகளே இல்லையென நினைக்கிறேன் எங்கள் கிராமத்தில். அரசு, எல்லா மாணவர்களுக்கும் சைக்கிள் இலவசமாக வழங்கிய பின் சைக்கிள்குறித்த ஆசைகள் கனவுகள் மங்கத் தொடங்கின இளம்பிரயாத்தினருக்கு. இறுதியாக நான் பைக் வாங்கிய பிறகு சைக்கிளை உபயோகிப்பது அரிதானது. உடல், வசதி பழகிய பின்னர் சைக்கிளை ஓரங்கட்டிவிட்டோம். எனது தாத்தா மறைந்த பிறகு அவரது பெயர் எழுதிய சைக்கிள் பயன்படா பொருளானது. ஒரு சமயத்தில் எங்கள் வீட்டில் 5 சைக்கிள்கள் இருந்தன. அப்புறம் பாதுகாக்க முடியாதென, ஒவ்வொன்றாய் வந்த விலைக்கு மனமில்லாது விற்று விட்டோம்.
இன்னமும் எனது இயந்திரத் தோழனின் சிகப்பு நிறமும்,அவன் எழுப்பும் சத்தங்களும், அவனை துடைக்கும்,குளிப்பாட்டும் தினங்களும்,அவனை மாலையிட்டு அலங்கரித்த தினங்களும், அவன் முதன் முதலாய் என்னோடு சேர்ந்த தருணங்களும் நினைவில் வந்து கண்கள் கலங்குகின்றன.
எனது சைக்கிளை இன்னமும் தம்பி கரும்புச்சாறு! ஒட்டிக்கொண்டிருப்பான் என நினைக்கிறேன். ( ஓட்டிக்கொண்டிருக்கிறனோ, இல்லை உட்கார்ந்தே உடைத்து விட்டானோ தெரியவில்லை. அவன் பின்புலம் அப்படி!!!.) நினைவுகளை மட்டும் நான் ஓட்டிக்கொண்டிருக்கிறேன். சங்கர் அண்ணனையும், அந்த ஆரஞ்சு நிற சிறிய சைக்கிளையும், பின்னால் வந்து எனக்கு பயிற்றுவித்த நண்பர்களையும், பள்ளியையும், நான் பயணித்த, விழுந்து எழுந்த சாலைகளையும், கையில் கருப்பு நிற கிரீஷ் ஒட்டிக்கொள்ள கழன்ற செயினினை மாற்றிய அனுபவங்களையும், எனது தந்தையோடு எங்கள் அம்மாவின் ஊருக்கு சைக்கிளில் உறங்கிக்கொண்டே பயணித்த விடுமுறை வாழ்வையும், எனது தம்பியர், நண்பர்களை, அக்காவை எல்லோரையும் வைத்து டபுள்ஸ் அடித்த நினைவுகளையும், குளிக்க போகும் தாமிரபரணி ஆத்தினையும், அங்கே நான் சாத்தி வைக்கும் மரங்களையும், நான் கூட்டிக்கொண்டு போன,ரோஹிணி அக்காவையும்,சீதா அக்காவையும் இன்னும் பெயர்மறந்த எத்துணையோ மனிதர்களையும் எனது சைக்கிளில் பயணித்த, பார்த்த மனிதர்களையும் ஆழ புதைத்து, ஆசுவாசப் பட்டுக்கொள்வதுதான் இப்போதைய தருணம் எனக்கு, சைக்கிள் எனக்கு வாகனமல்ல. அது ஒரு வாழ்க்கை. சைக்கிள் எனது இயந்திரத் தோழன். அவனை நான் விற்றுவிற்றாலும் அவன் நினைவுகளை விற்காது தக்கவைத்துக்கொள்வேன். இது ஒன்றுதான் என்னால் மிதிவாங்கி, என்னை தாங்கி கொண்டு பயணிக்க உதவிய என் இயந்திரத் தோழனுக்கு நான் செய்யும் குறைந்தபட்ச மரியாதையாய் இருக்குமென நினைக்கிறேன்.
என் பிராயத்து மனிதர்களின் வாழ்வில் சைக்கிள் என்பது ஒரு இயந்திரமோ, வாகனமோ மட்டுமல்ல. கூடவே வாழ்ந்த ஒரு சக உயிர். அப்படித்தான் எனது தாத்தாவும், தந்தையாரும் ஓரளவு நாங்களும் கருதி பராமரித்து அதனோடு வாழ்ந்து வந்தோம். ஒவ்வொரு வீட்டிலும் சைக்கிளை விடுவதற்கென்று பிரத்யோக இடமும், இல்லங்களில் எல்லோருடைய மனதிலும் ஒரு அன்போடு கூடிய இடத்தினையும் சைக்கிள் பெற்றிருந்தது. என் பிராயத்து நண்பர்களிடம் அவரவர் சைக்கிள் வாங்கி வந்த கதையிலிருந்து, கைவிட்டு போன கதை வரைக்கும் ஒரு காதலியை பிரிந்த கணத்தோடு கதைகள் நிரம்பியிருப்பதை கேட்க முடியும். அவ்வளவு ஒன்றியிருந்தது சைக்கிள் எங்களுடைய வாழ்க்கையோடு. ஒவ்வொருவரும் அவருக்கேயுரிய ரசனையோடு, ஸ்டைலோடு ஓட்டிவந்ததை, அழகுபடுத்தி ரசித்ததை என்னால் இப்போது நினைவுபடுத்த முடிகிறது. மழையிலோ , வெயிலிலோ சைக்கிள் கிடக்கையில், 'சைக்கிள் மழையில நனையுது பாரு, வெயில்ல காயுது பாரு எடுத்து நிழல்ல உடு. வீட்டுக்குள்ள உடு" என்று யாராவது கரிசனத்தோடு சொல்லியபடி இருப்பார்கள் வீட்டில். அவ்வளவு அக்கறை, கரிசனம் இருந்ததது அதன் மீது அனைவருக்கும். சைக்கிளை நனையாது பாதுகாக்க நாங்கள் நனைந்த கதையெல்லாம் கூட உண்டு. வாகனங்களும் வசதிகளும் பெருகிவிட்ட இன்றைய அற்ப வாழ்வில், சைக்கிள்கள் வெறும் இயந்திரமாக மட்டும் பார்க்கபடுகின்றதாகவே உணருகிறேன்.
ஒவ்வொருமுறை ஊருக்குச் செல்லும்பொழுது நண்பர்களைச் சென்று பார்ப்பது போல, அடுத்தமுறை எனது இயந்திரத் தோழனையும் தேடிப்போய் பார்க்க வேண்டும். முடிந்தால் அவனை என்னோடே கூட்டி வந்துவிட வேண்டும். எனது மகளுக்கு எனது தோழனை நண்பனாக்க ஆசையாயிருக்கிறது. அவன் தொலைந்து விடாது உயிர்த்திருக்க வேண்டுகிறது மனது இந்த தருணத்தில்.
Comments
Post a Comment