அகல்
நீயேற்றுவது போல்
அத்தனை அழகாய்
ஒளிர்வதில்லை
எப்படி முயன்றும்
எங்கேனும்
நமத்து போகும்
நானேற்றும்
அகலின் ஒளி
திரிசமைத்து
திசையெங்கும்
தினசரி
என்னை ஒழுக
ஏற்றும் எந்த தீபமும்
எரிவதில்லை இயல்பாய்
அரையிருளில் ஒளிரும்
அறையிருளில்
எங்கேயோ நீ ஒளிந்து
கொண்டிருப்பதாய்
இயல்பாய் தேடி விரைகிறது
கிடைக்காது தேம்பி அழுகிறது
பக்குவம் மறந்த
பால்ய மனது
ஏற்றும் கைகள்
எங்கேயென யாசித்து
அணைகிறது போலும்
அகலும்
அடிக்கடி என்போல்
அமானுஷ்ய கனவுகள் நிகழும்
அதிரடி நினைவுகள் தவழும்
உயரத்திலேறி
பள்ளத்தில் விழுந்து கரையும்
உள்ளக்கிடக்கை ததும்பி வழிகிறது
ஒளி குறைந்து
அகல் அணைகையில்
எண்ணெய் தவிர்த்து
என்னைத் திரியாக்கி
கண்ணீர் கொண்டு
கரைந்து தீபம்
ஏற்றும்போது
புலப்படட்டும்
உன் உண்மை உருவம்
அதுவரை
அறையிருளில்
நானும் அகலும்
கதைத்துக் கொண்டிருப்போம்
பிரிவாற்றாமையில்
பேரின்பம் உள்ளதாயென.
Comments
Post a Comment