ஓ காதல் கண்மணி - பார்க்கவேண்டிய நவகால கண்மணி!!
குறைந்த வெளிச்சமுள்ள ரயில் நிலையத்தில் ரயிலின் முன் குதிக்க ஆயத்தமாகும் தாராவை (நித்யாமேனன்) எதேச்சையாகப் பார்த்து கோபத்தில் திட்டுகின்றவாறு அறிமுகம் ஆகிறார் ஆதி (துல்கர் சல்மான்). ரயில் நிலையம், கொஞ்சம் இருட்டான சூழ்நிலை, படோபடம் இல்லாத நாயகன் நாயகி அறிமுகம். மணிரத்னம் படம் ஆரம்பம்.
மொத்தம் நான்கே முக்கிய கதாபாத்திரங்கள், இசையோடு ஐந்து.! நாயகன், நாயகி, கணபதி அங்கிள்(பிரகாஷ் ராஜ்), அவரது மனைவி. கொஞ்சநாட்கள் சேர்ந்து வாழ விரும்பி சேர்ந்து கொண்டு, ஒரு மூத்த தம்பதிகளோடு இணைந்து அவர்களது வீட்டில் வாழ்கின்ற இளம் தம்பதிகளின் (தாலி கட்டினால் தான் தம்பதியா!) வாழ்வின் சிறு பகுதியே கதை.
தனது வழக்கமான சிறு வசனங்கள், ஒளிப்பதிவு யுக்தி, திரைக்கதை ஆக்கம் இவற்றால் தொய்வின்றி படத்தினை நகர்த்தியிருக்கிறார் மணிரத்னம். படம் முழுவதையும் நான் விவாதிக்க விரும்பவில்லை. நீங்கள் படத்தினைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
இளைய தலைமுறைகளிடையே இந்தப் படம் மிகுந்த வரவேற்பினை பெற்றிருப்பதாகவும், நமது கலாச்சார கோஷ்டிகளிடம் அதிருப்தியினை ஏற்படுத்தி இருப்பதாகவும் அறிய முடிகிறது. பரஸ்பரம் புரிதலுள்ள, காதலில் விழுகின்ற இருவர் திருமணம் என்ற நீண்ட கால ஒத்திசைவு வாழ்வு முறையில் மாட்டிக்கொள்ள விருப்பமின்றி, முடிந்தவரை சேர்ந்து வாழ்ந்து விட்டு, பிறகு அவர்கள் கனவுகளுக்கான அழைப்புகள் வருகையில் அதனை நோக்கி சென்று விடலாம் என்கிற படத்தின் போக்கு அதிருப்திக்கு திரியினைக் கிள்ளக்கூடியதுதான் நாகரீகம் உச்சமான நமது தமிழ், இந்திய சமூகத்தில்.
பிறகு இணைந்து வாழுகின்ற ஒரு ஆத்மார்த்த தம்பதியினர், நாயகன் நாயகிக்குள் வேர்விடும் பிரிவு வேண்டா ஆழமான காதல், அதன் பொருட்டு விளையும் இறுதி காட்சிகள் என படம் சந்தோசமாய் முடிந்து கிள்ளிய திரியினை அனைத்து விடுகிறது திரைக்கதை, போரட்டங்களுக்கும், போலி வழக்குகளுக்கும் அவசியமின்றி!.
இயக்குர் சொல்லவருவது போல் இன்றைய நமது இளையதலைமுறையினரிடம் நமது கலாச்சாரம் சார்ந்த விழுமியங்கள் குறித்த நம்பிக்கைகள் மாறுபட்டு, அவரது வாழ்வியலிலும் அதன் போக்கு மாறுபட்டிருக்கிறது என்பது உண்மைதான். ஏன் இப்படி படம் எடுத்து இளைய தலைமுறையினரை குழப்புகிறீர்கள் என்று கொடி பிடிப்பதை விட, இந்த மாற்றங்கள் ஏன் ஏற்பட்டுள்ளன.? அவை இயல்பானதுதான? இல்லை தவறான கலாச்சாரபுரிதலால் தொன்றுதொட்டு தொடர்ந்து வரும் பிரச்சினையா?? முறையாக எல்லாவித காலச்சார பண்புகளோடும் செய்துகொண்ட திருமணங்கள் பொய்த்துப்போவதும், அதைப்பார்த்து வளருகின்ற ஒரு இளைய தலைமுறை இப்படிச் சிந்திப்பதுவும் இயல்புதான் என நான் எண்ணுகிறேன். காதல் உயர்ந்தது, காதலன் உயர்ந்தவன், காதலி உயர்ந்தவள் எனக்கு என்கிற சிந்தனை மேலோங்குமாறு இருக்கிற காதலர்களுக்கு தாலி என்பதோ, திருமணம் என்பதோ அதன் பின்னர் விளையும் காமம் என்பதோ வெறும் வெற்றுச் சடங்காகாகத்தானே இருக்கமுடியும். நாயகியின் டயலாக் ஓரிடத்தில் வரும் " ஒரு மேரேஜ் சர்டிபிகேட் இருந்தா ஓகே தானா" என்று. திருமணம் எதற்கு செய்துகொள்கிறோம்?அல்லது செய்து வைக்கிறோம்? அது ஒரு அப்ருவல். அவ்வளவுதானே. இங்கே திருமணத்திற்கு பிறகு எத்தனை மனைவிமார்கள் அங்கீகரிக்கப்பட்ட அவர்களது கணவர்களால் மறுபடி மறுபடி கற்பழிக்கப்படுகிறார்கள்!? ( மனைவியின் முழு விருப்பமின்றி நடைபெறுகின்ற உறவும் கற்பழிப்புத்தான்) . திருமணம் என்ற ஓன்று நடந்துவிட்டால் கணவன், மனைவியை என்ன வேண்டுமானாலும் செய்யலாம், இல்லை மனைவி எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம் என்ற போக்குதானே விவாகரத்து வழக்குகள் என நீதிமன்றங்கள் எங்கும் நிரம்பக்கிடக்கிறது. இல்லை வீட்டின் நான்குச் சுவற்றுக்குள்ளேயே தினம் நடந்து முடிகிறது. எனக்கு தெரிந்து நிறைய மனைவிகள் சொல்லியிருக்கிறார்கள் இந்த திருமணங்களே பெரும்பாலும் ஆண்களுக்கு லாபமளிப்பவை என்று. உண்மைதானே. பெரும்பான்மையான வெளியில் சொல்லப்படாத உண்மை இது.
இப்படித் தவறான வாழ்வியல் கற்பிதங்களை உடைத்து தனக்கான, தங்களுக்கான வாழ்வை அதன் நிறை குறைகளோடு வாழ்கின்ற, மேலும் முன்னேடுத்துச் செல்ல முயலுகின்ற ஒரு இளங்காதலர்களின் கதை இந்தப் படம். முன்னோக்குச் சிந்தனையுள்ள ஒரு படம். பிடித்தவர்கள் போய்ப் பாருங்கள். கதை பிடிக்காதவர்கள் வெட்டி விமர்சனம் செய்து கொண்டு பொத்தி, போத்திப் படுத்துக் கொள்ளுங்கள்.
எனக்கு சில விஷயங்கள் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம் எனப்பட்டது. மூத்த தம்பதிகளைப் பார்த்து நாயகனும், நாயகியும் ஈர்க்கப்படுகிறார்களா என்பது சற்று தெளிவாக காண்பிக்கப்படவில்லையென நினைக்கிறேன். பிரகாஷ் ராஜ்க்கு இன்னும் கொஞ்சம் வசனங்களும், நடிக்கவும் வைத்திருக்கலாம். திரைக்கதையில் நிரம்ப இடமிருந்தது அதற்க்கு. அவரை சரியாகப் பயன்படுத்தவில்லையோ என்ற நினைப்பு எனக்கு.
நாயகி நித்யா அழகு. உயரம் குறைவு என்றாலும், அவரது குழந்தைத்தனமான முக பாவனைக்காக மணிரத்னம் அவரை தேர்ந்தெடுத்திருப்பார் என நினைக்கிறேன். ஆதி கதாபாத்திரத்துக்கு ஏற்ற பொருத்தம் தான். இன்னும் கொஞ்சம் கூட நடிக்க வைத்திருக்கலாம். முக்கியமாக அந்த மழையில் காருக்குள் நடக்கின்ற காட்சியில். நிறைய இடங்களில் அலைபாயுதே வையும், மற்ற, இயக்குனரின் முந்தைய படங்களையும் நினைவு படுத்துகிற மாதிரி காட்சியமைப்பு, வசனங்கள், என நிறைய பகுதிகள், பழைய படம் பார்க்கின்ற உணர்வைத் தருகின்றன. அதைத் தவிர்த்திருக்கலாம்.
பி.சி.ஸ்ரீராம் வழக்கம்போல். படத்தினை, திரைக்கதையினை தாங்கிப்பிடித்திருக்கிறார். ரஹ்மானும் பின்ணணி இசையிலும், பாடல்களுக்கான இசையிலும் மிகுந்த நியாயம் செய்திருக்கிறார். இவர்கள் இருவரையும் இயக்குனர் பயன்படுத்தாவிடில் படத்தின் போக்கு தொய்வுற்றிருக்கும்.
மொத்தத்தில் இது புதிய திரைக்கதை என்று சொல்ல முடியாவிட்டாலும், ஒரு மாறிவரும் சமுகத்தில் நடக்கும் முக்கியமான மாற்றத்தினை, சமரசம் செய்து கொள்ளாமல் சொல்லியதற்க்கு மணிரத்னம் அவர்களுக்கு ஒரு பெரிய வணக்கம்.
எல்லாரும் பாருங்கள். மாற்றத்தை உணருங்கள். ஏற்றுக்கொள்ளுங்கள்.!!!
Comments
Post a Comment