பரமன் சித்தப்பா
கையில் பகவத்கீதையை தாங்கிக்கொண்டு பரமன் சித்தப்பா பஸ்ஸிலிருந்து இறங்கும் போது மணி மத்தியானம் மூணு இருக்கும். மொதெல்ல பரமன் சித்தப்பா யாருன்னு தெரிஞ்சுக்குவோம்.
எங்க அப்பாவோட சித்தி பொண்ணோட வீட்டுக்காரர்தான் பரமன் சித்தப்பா. எனக்கு உண்மையில மாமா முறை. சின்ன வயசிலே இருந்தே சித்தப்பான்னே கூப்பிட்டு பழகிட்டதுனாலே இப்பவும் அப்படித்தான் வருது. பரமசிவங்கிறது அவரது உண்மையான பேரு. தென்னக ரயில்வேல பாய்ண்ட்ஸ் மேனா வேலை பாக்குறாரு. மூணு சிப்ட் வேலை அது. மாத்தி மாத்தி வரும். எப்போ போவாரு, எப்போ வருவாருன்னு எங்க சித்திக்கு மட்டுந்தான் தெரியும். எங்களுக்கு இந்த ஷிப்ட் வேலை கான்செப்ட் புரியவே ரெம்ப நாள் ஆச்சு. பரம சித்தப்பா நல்ல வாசகர், அதுக்கப்புறம் நல்ல "குடிமகன்". அவர எப்போதும் ஒரு கையில பாட்டிலும் இன்னொரு கையில புக்குமா பாக்கலாம். தூங்குற நேரம், குளிக்க போற நேரம், குடிக்குற நேரந்தவிர எப்போதும் எதையாவது வாசிச்சுக்கிட்டே இருப்பார். அவரு படிக்கிற புக் எல்லாம் தடித்தடியா இருக்கும். நாங்கெல்லாம் நல்ல படிக்கிற இந்த மனுஷன், நல்ல குடிக்கவும் செய்யுறாரேன்னு நினைப்போம், பேசிக்குவோம்.
குடிக்காத நேரத்துல இஸ்திரி பண்ணுன பேண்டும் சட்டையும் போட்டுக்கிட்டு, நெத்தியில விபூதியும் கையில பூக்குமா அவரு படிக்கிறது அப்படி யாரையுமே பாக்காத எங்களுக்கு அப்பெல்லாம் அதிசயமா தெரியும். குடிக்காட்டா மனுஷன் இருக்கிற இடம் தெரியாது. குடிச்சிட்டார்னா அவரு இருக்கிற இடத்த தவிர எதுவும் தெரியாது. அவருக்கு கூடப் பொறந்தவங்க ஒரு தம்பி, மூணு தங்கச்சிங்க. அவரு அப்பா இறந்துபோய் அவரு வேலைதான் இவருக்கு கெடச்சுதுன்னு சொல்வாங்க. பத்தாவது பெயிலு மனுஷன். அப்புறம் நல்லா இருந்தவரை எங்க சித்திக்கு கட்டி வச்சி மூணு புள்ளையிலாயி இப்படி ஆயிட்டாருன்னு சொல்லுவாங்க எங்க வீட்ல. வீட்ல ஏதாவது விசேசம்ன்ன மனுஷன் தண்ணிய போட்ருவாறு. சம்பள நாள் அன்னிக்கி அவரு முழுசா சம்பளபணத்தோட வீடு வந்தா ஆச்சர்யந்தான். எல்லாருக்கும் வாங்கிக்கொடுத்து தானும் முட்டக் குடிச்சிட்டு எங்கையாவது விழுந்து கிடப்பாரு..இல்லண்ணே எப்படியோ வீடு வந்து சேந்துடுவாரு மனுஷன்.
அன்னைக்கும் அப்படித்தான் சித்தப்பு புல் பார்ம். தள்ளாடித் தள்ளாடி வீடுவந்து சேந்துட்டாரு. வந்தவொடனே "சாப்பாடு போடுடி" ன்னு சித்தியை சொல்லிடு இரும்புக் கட்டில்ல சாஞ்சிட்டார் மனுஷன்.
சித்தி வழக்கம் போல பை, பாக்கெட் எல்லாம் துலாவி நாலாயிரமோ ஐயாயிரமோ எடுத்துட்டு பொலம்பிட்டு இருந்தது.
"இப்படி எல்லா மாசமும் பாதி சம்பளத்தோட வந்த நான் என்னென்னு இந்தக் குடும்பத்த நடத்துறது"
"விடு... ஒம்புருசன் இந்ததடவ இம்புட்டவாது தொலைக்காம கொண்டு வந்திருக்கானேன்னு சந்தோசப்படு" இது சித்தியோட அம்மா.
"நான் ஏதோ இட்லி வியாபாரம் பாத்து என்னால முடிஞ்சத தரலேன்ன எப்பிடி இந்த குடும்பம் நடக்கும், உன் புருசனுக்கு கொஞ்சமாவது ஒணர் இருந்தா இப்படி குடிச்சிட்டு வருவானா" இப்படி சம்பள நாள் அன்று கொதிப்பதும்
பின்பு அடங்கிப்போவதும் அவர்களக்கும் பார்க்கின்ற எங்களுக்கும் பழகிப்போயிருந்தது.
நல்லத் துணிமணி கிடையாது, நல்ல சாப்பாடு கிடையாது, அப்பன் இப்படியிருந்தா அதப் பார்த்து புள்ளைலு எப்படி ஒழுங்கா வளரும். என் தலைவிதி இம்புட்டுத்தான் போல என்று அழுது அரட்டிக் கொண்டிருந்தாள் சித்தி மூக்கி. அவளது பெயரான மூக்கம்மாளின் சுருக்கம் "மூக்கி" . இந்தப் புலம்பல்கள் புரியும் நிலையில் சித்தப்பா இல்லை. அவர் போதை தலைக்கேறி
புரண்டு படுத்து ரெம்ப நேரமாயிருந்தது.
அடுத்தநாள் அதிகாலையில் கையில் ஜெயகாந்தனும், துண்டு பீடியுமாய் சித்தப்பா நேற்று என்ன நடந்தது என்ற சுரத்தில்லாது வாசித்துக் கொண்டிருந்தார். சற்று நேரத்தில் வாய்க்காலுக்கு சென்று குளித்து விட்டு வெள்ளை இஸ்திரி பண்ணின சட்டையையும் ஊதாக் கலரு பேண்ட்டும் போட்டுக்கொண்டு நெத்திவிழுங்க பூசிய விபூதியோடு ஒன்பது மணி DPR பஸ்ஸுக்கு கெளம்பி கொண்டிருந்தார். சித்தி சுடச் சுடச் இட்லியோடும், மணி கடையில் வாங்கிய சாம்பார் வடையோடு விருந்து படைத்துக் கொண்டிருந்தாள். உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும்!? நேற்றைய நிகழ்வுக்கும் இந்த நிகழ்வுக்கும். அவர்கள் இருவரும் அப்படித்தான். சித்தப்பா குடிக்காட்டி சித்தி பாசமழை பொழிவாள், எந்நேரமும் புத்தகம் படிக்கிற, ரயில்வேயில் உத்தியோகம் பார்க்கிற, நெற்றி நிறைய விபூதியோடிருக்கிற கனவு கணவனிடம். சித்தப்பா பரமனுக்கு குடிச்சிட்டா பணம் தண்ணிபட்ட பாடு. புள்ளைளுக்கு, சித்திக்கு என்னெல்லாமோ வாங்கிட்டு வந்து கொடுப்பாரு. பாசக்கார மனுஷன்தான். எங்களுக்கும் குடுக்கச் சொல்லுவாரு என்ன சித்தி கொஞ்சம் கஞ்சம். அவ புள்ளைகளத் தவிர்த்து யாருக்கும் ஒன்னும் குடுத்திர மாட்டா. சித்தப்பா கிளம்பியிருந்தார்.நேத்து அவரு வந்த கோலமும், இன்னைக்கு அவரு போற கோலமும் வழக்கமாக நடக்கிற ஓன்று என்பதால் யாரும் ஆச்சர்யமாக அவரை பார்க்கல. ஊரையும் பழக்கி விட்டிருந்தார். இப்படியே ஓடிக்கொண்டிருந்தது காலம். சித்திக்கு சீக்கு வரும் வரை.
சித்தி மூக்கிக்கு திடிரென ஒருநாள் உடம்பு சரியில்லாமல் போயி, மூணாவது நாள் ரெம்ப முடியாம போய் ஹைகிரவுண்டு ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டதை பார்த்துவிட்டு வந்து இன்னொரு அத்தை சொல்லி புலம்பிக்கொண்டிருந்தா.
"சுகர் அதிகமாயிட்டு அவளுக்கு, 500 க்கு மேலப் போய்ட்டாம் இனிமே உயிர் பிழைக்கிறது கடுத்தமுன்னு டாக்டர் சொல்லுறாரு"
அப்போதுதான் சுகர் ஆளையேக் கொல்லும் கவனிக்காமல் விட்டால் எனத் தெரிந்துகொண்டு ஆளாளுக்கு புலம்பியும் பேசியும் கொண்டிருந்தார்கள்.
சித்தியில்லாது சித்தப்பாவின் வாழ்க்கை என்னவாகும், மூணு பசங்க என்னப் பண்ணுவாங்க கொடுமை என எனது அம்மாவும் புலம்பிக் கொண்டிருந்தார்.
நாங்களும் ஆஸ்பத்திரிக்கு போய்ப் பார்த்தோம். சுயநினைவின்றி சித்தி மூக்கி படுக்கையில். ஆளாளுக்கு என்னன்னவோ பேசிக் கொண்டிருந்தார்கள். தொடர்ந்து நாள் கணக்காய் படுக்கையில் இருந்தாதால் முதுக்குபுறம் தோல் எல்லாம் உறிந்து விட்டிருந்தது. அவள் நிலைகுத்திய கண்கள் மட்டும் ஏதோ சொல்ல முயற்சித்து கொண்டே இருந்தாதாய் எனக்கு மட்டும் தோன்றியது.
பிறந்து கொஞ்ச நாளிலேயே அப்பா பழனியாண்டி இறக்க, ( அவர் இருக்கும் போதும் சீட்டாடி பொழுதை கழித்ததாகவும், குடும்பத்துக்கு அவரும் ஒண்ணும் செய்யவில்லையென்றும் அப்பவும் ஆச்சிதான் (சித்தியின் அம்மா) குடும்பத்தை காப்பாத்தியதாகவும் மற்றவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்) முதல் குழந்தை அற்ப ஆயுசில் இறந்து இரண்டாவதாக பெற்ற ஒரே மகளும் இப்படி படுக்கையில் கிடப்பதை பார்க்கிற சித்தியின் அம்மாவான ஆச்சிக்கு மனநிலை எப்படி இருந்திருக்கும். செழித்த வாழ்வு சிறு வயதிலும் இல்லை, கனவுகளோடு பரமன் சித்தப்பாவை கல்யாணம் பண்ணியவளுக்கு அவர் குடியை ஏற்கனவே திருமணம் செய்தவர் எனத் தெரிந்த போதிலிருந்து இந்த ஆஸ்பத்திரியில் நிலைகுத்திய கண்களோடு கிடக்கும் தருணம் வரை வாழ்வென்பதே சூன்யமாய் தான் இருந்ததது. ஒருவேளை சித்தப்பா குடிக்காதவராயிருந்தால் சித்திக்கு இந்தநிலை வந்திருக்க வாய்ப்பு குறைவெனப்பட்டது எனக்கு.
நினைத்தபடியே சித்திக்கு பிழைக்க வாய்ப்பில்லை என கையை விரித்து, உயிர் போற வரைக்கும் வீட்ல கொண்டுபோய் வையுங்க என்று அனுப்பிவிட்டார்கள் அங்கிருந்து.
"மூக்கிக்கு போய் இப்படி ஆகணுமா, அவ புருஷன் கொஞ்சமாது பொறுப்பா இருந்திருந்த இந்த புள்ளைகளுக்கு ஒரு வழியாவது பண்ணியிருப்பா"
சித்தி மூக்கி அரை உயிராய் வந்து வீட்டு வாசலில் இறங்கையில் புலம்பிய குரல்கள் அவை.
அவள் வாழ்ந்த அந்த பழைய ஓட்டு வீட்டில் விளக்கு மாடத்தின் அடியில்
கிடத்தியிருந்தார்கள் அவளை, சுகர் அதிகமாகி இரண்டு கிட்னியும் செயலிழந்திருந்தது. வெட்டி வெட்டி இழுத்துக்கொண்டிருந்தது அவளது இறுதி மூச்சு. சித்தப்பா அப்பொழுதும் குடித்துதான் இருந்தார். அப்பொழுதும் திறந்திருந்த அவளது அந்த கண்கள் என்னமோ சொல்லிக்கொண்டிருந்தன. எல்லோரும் அவள் விடியிறதுக்குள்ள போய் சேந்திடுவா என மனதளவில் தயாராகி இருந்தார்கள். நாங்கள் எல்லோரும் சிறுவர்கள் என்பதால் உறங்கப் போகச் சொல்லிவிட்டார்கள். யாரும் உறங்கியதாக நினைவில்லை. ஒருவழியாக உறங்கிப் போயிருந்தோம். கண்விழிக்கையில் அதிகாலை 3 மணிக்கே சீவன் போய்விட்டதாக சொன்னார்கள்.
சுந்தரு, சுந்தரு என தன மகனை ஆசை தீர அழைத்த, என்னதான் குடித்து குடும்பம் காக்காவிட்டாலும் தன் கனவை விட்டுத் தராத, குளிக்காது கிறுக்கி மாதிரி சாம்பல் வைத்து பிறவாசலில் பல் தேய்த்துக் கொண்டிருந்த சித்தி மூக்கி இல்லையென்பதை உணர கொஞ்ச நாட்கள் பிடித்தது.
சித்தி இறந்துபோன கொஞ்சநாளில் சித்தப்பா இன்னொரு கைம்பெண்ணை கல்யாணம் செய்து கொண்டார். மகள் போன துயரத்தில் ஆச்சியும் மனநிலை பிறந்திருந்தார். பின்பு சிலவருடம் கழித்து பரம சித்தப்பாவும் ஜங்ஷன் பஸ் ஸ்டாண்டில் குடித்து விழுந்து இறந்து போனார். ஆச்சியும் மகளை இழந்து சில காலம் உழன்று இறந்து போனார். இந்தக் குடும்பத்தை அழித்த குடி மட்டும் இன்னும் இறக்காது அழித்தலை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
Comments
Post a Comment